அன்னிய செலாவணியை ஈட்டித் தருவதில் முன்னிலையில் இருக்கிறது பனியன் நகரமான திருப்பூர். அதே நேரத்தில் சுகாதாரத்திலோ பின் தங்கிக் கிடக்கிறது. வணிக அரங்கில் ஒரு குட்டித் தமிழகமாகத் திகழும் திருப்பூரைச் சுகாதாரத்திலும் முன்னணிக்குக் கொண்டு வர முயற்சி எடுத்திருக்கிறது ஓர் அமைப்பு. அந்த அமைப்பின் பெயரே "முயற்சி' என்பதுதான்.
முயற்சி அமைப்பின் புதுமையான முயற்சி தான் ஒருமுறை ரத்த தானம் செய்தால் ரூ.1.5 லட்சம் மதிப்பு இன்சூரன்ஸ் பாலிசி வழங்கும் திட்டம். தனது அலுவலகத்தில் உறுப்பினர்களுடன் நகைச்சுவை ததும்ப, விறுவிறுப்பாக விவாதித்துக்கொண்டிருந்த முயற்சி அமைப்பின் தலைவர் என்.சிதம்பரத்தை சந்தித்தோம்.
விவசாயிகள், தொழில்அதிபர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உறுப்பினராக கொண்டது தான் முயற்சி மக்கள் அமைப்பு. 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. இதை எப்படி தடுப்பது என ஆலோசனை நடத்தும்போது உதித்ததுதான் சி.சி.டி.வி. பொருத்தும் திட்டம்.
சி.சி.டிவி. பொருத்தப்பட்டபின் இதுவரை குழந்தை திருட்டு புகார் வரவில்லை. இதைத்தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையை ரூ.1.5 லட்சம் செலவில் சுத்தம் செய்தோம். தொடர்ந்து அரசு மருத்துவமனையுடன் நெருக்கம் அதிகரித்தது. அங்கு சில நேரங்களில் ரத்தம் இல்லாததால் ஆபரேஷன் நிறுத்தப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.
எனவேதான் ரத்த தான முகாம் நடத்தி திருப்பூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் அதிக யூனிட் ரத்தத்தைச் சேமிப்பாக வைக்க முடிவுசெய்தோம். 2009
ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடத்தி வருகிறோம். இதுவரை 9 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இம்முகாம்களில் ரத்தம் தானம் செய்ய 640 பேர் தங்களது பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர். ஆனால், 505 பேர்களிடம் இருந்துதான் ரத்தம் பெறப்பட்டுள்ளது. ரத்த தானம் செய்ய பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் பதிவுசெய்யும் அனைவரிடம் இருந்தும் ரத்தத்தைப் பெற முடிவதில்லை. ரத்த தானம் செய்ய மக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
ரத்தம் தானம் செய்யும் நபர்களுக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் என எண்ணம் உருவானது. பணமோ, பொருளோ கொடுத்தால் தானம் செய்பவர்களை அவமதிப்பதுபோலத் தோன்றும். எனவே, தானம் செய்பவர்களுக்கு ஒரு வருடத்திற்கான இலவச இன்சூரன்ஸ் பாலிசி வழங்கத் திட்டமிட்டோம்.
ரத்த தானம் செய்ய முன்வருபவர்கள் சமூகத்தில் மிகவும் குறைவு. அதேநேரத்தில் தானம் செய்பவர்கள் விபத்துகளில் பாதிக்கப்பட்டால் வறுமை காரணமாக உயிர் இழக்கும் சூழல் ஏற்படுகிறது. அதேபோல சிலர் நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ரத்த தானம் செய்பவர்களுக்கு ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு பாலிசியும், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ காப்பீடு பாலிசியும் வழங்கி வருகிறோம்.
ஒருமுறை ரத்த தானம் செய்தால் போதும் இந்தக் காப்பீடு வசதியைப் பெறலாம். மருத்துவமனைகளில் 24 மணி நேரம் தங்கி சிகிச்சை பெறும் நோய்களுக்கு மருத்துவ காப்பீடு பொருந்தும். ரத்த தானம் செய்யும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். ரத்த தான முகாம் நடத்தும் பொறுப்பை எம்.ஜாஹீர்உசேன், என்.முரளிக்குமார் ஆகியோர் கவனித்து வருகின்றனர்'' என்கிறார் சிதம்பரம்.
ஊருக்கு ஒரு "முயற்சி' அமைப்பு தோன்றினால் போதும். ரத்த தானத்தில் தமிழகம் முதலிடத்துக்கு வந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.