நகர்வலம்: எம்.டி.ஆரை நினைவூட்டும் நாவல்!
கர்நாடக இசைப் பாடகர் எம்.டி.ராமநாதன் அவர்கள் வெறும் இசைக் கலைஞர் மட்டுமல்ல. நிறைய கீர்த்தனைகளையும் அவர் இயற்றியிருக்கிறார். டைகர் வரதாச்சாரியாரின் சீடர் என்பதால், தம்முடைய பாடல்களில் முத்திரையாக "வரதத
க ர்நாடக இசைப் பாடகர் எம்.டி.ராமநாதன் அவர்கள் வெறும் இசைக் கலைஞர் மட்டுமல்ல. நிறைய கீர்த்தனைகளையும் அவர் இயற்றியிருக்கிறார். டைகர் வரதாச்சாரியாரின் சீடர் என்பதால், தம்முடைய பாடல்களில் முத்திரையாக "வரததாஸ' என்ற வார்த்தையைச் சேர்த்திருப்பார்.
அவர் பாடும் முறை, வித்தியாசமாக இருக்கும். குரல் கனமாக, கம்பீரமாக இருக்கும். (அந்த நாளைய ஆங்கில இசைப் பாடகர் ஜிம் ரீவ்ஸ் குரல் சில சமயம் நினைவுக்கு வரும்!)
கலாசேத்திராவில் அவர் பணியாற்றியபோது அவரிடம் கற்ற மாணவர்களில் ஒருவர் பேராசிரியர் பி.பி.ராமகிருஷ்ணன். இவர் டி.என்.கிருஷ்ணனிடம் வயலின் இசையும் கற்று, திருவனந்தபுரம் சங்கீதக் கல்லூரியில் வயலின் பேராசிரியராக இருந்தார். பின்னர் பாலக்காடு சித்தூர் இசைக் கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றினார்.
தம் குருவின் கீர்த்தனைகளில் சிலவற்றை குறுந்தகட்டில் பதிவு செய்து, குருவுக்குத் தம் அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.
ஸ்ரீ ரஞ்சனையில் "விக்னராஜ நினுசார', கேதாரத்தில் "தியாகராஜ குரும் ஆச்ரயே', ஹிந்தோளத்தில் "சுப்ரமண்யம் பஜரே', அடாணாவில் "ஹரியும் ஹரனும் ஒன்றே', பாகேஸ்ரீயில் "சாகர சயன் விபோ", மோகனத்தில் "பராகேல நய்யா', காபியில் "நந்தகோப யசோத', ரஞ்சனியில் தில்லானா.. என்று இந்த ஸிடி-யை "வரததாஸ' என்ற தலைப்பில் சுவாதி, நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
வயலின் மேதை டி.என்.கிருஷ்ணன் முதல் ஸிடியை வெளியிட, நடனக் கலைஞர் தனஞ்செயன் பெற்றுக் கொண்டார். ""எம்.டி.ராமநாதன் வாழ்ந்த காலத்தில் அவருக்குக் கிடைக்க வேண்டிய கெüரவங்கள் கிடைக்காமலேயே போய்விட்டன.
அதனால் என்ன? இன்று உலகம் முழுக்க எம்.டி.ராமநாதனின் பாடல்களைக் கேட்டுக் கேட்டு ரசிக்கிறார்கள். ஒரு பாடகருக்கு இதைவிடப் பெரிய பாக்கியம் வேறு என்ன வேண்டும்! அவருடைய ரீதி கெüளை எப்போதும் காதில் ரீங்காரம் செய்து கொண்டே இருக்கும். அவருடைய கேதாரம் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கும்!'' என்றார் டி.என்.கிருஷ்ணன்.
ஸி.டி. வெளியிடுவதற்கு முன்பாக, ராமகிருஷ்ணனின் புதல்வர் ஈசுவர் ராமகிருஷ்ணன், ஸிடியிலிருந்து சில பாடல்களைப் பாடினார். ""வயலின் கலைஞரான ஈசுவர் நன்றாகப் பாடுகிறார். ஆனால் இத்தோடு திருப்தி அடைந்துவிடக்கூடாது. இன்னும் உழைத்து மிகச் சிறந்த பாடகர் ஆகவேண்டும்!'' என்று வாழ்த்தினார் கிருஷ்ணன்.
பேராசிரியர் ராமகிருஷ்ணன் தன் நன்றி உரையில் எம்டிஆர் மீது தாம் இயற்றிய சுலோகத்தை அவர் பாணியிலேயே பாடி எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்
கொண்டார்.
எம்.டி.ராமநாதன் என்கிறபோது, அவரைப் பற்றிச் சில வருடங்கள் முன்பு திரையிடப்பட்ட குறும்படம்தான் நினைவுக்கு வருகிறது. (அதை இயக்கியவர் செüதாமினி) ஒரு யானை அகன்ற சாலையில் கம்பீரமாக அடியெடுத்து முன்னேறி வரும். பின்னணியில் எம்.டி.ஆர். குரல் அதற்கு ஏற்ற மாதிரி ஒலிக்கும். ஆர்ப்பாட்டம், ஓட்டம் எதுவும் இல்லாமல் நின்று நிதானமாகக் கேட்டு ரசிக்க, எம்.டி.ராமநாதன் இசைதான் ஏற்றது.
கேரள பத்திரிகையாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, "கேதாரம்' என்ற தலைப்பில் ஒரு நாவலை மலையாளத்தில் எழுதி, அது நூலாகவும் வெளியாகியிருக்கிறது. அது தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார் கிருஷ்ணமூர்த்தி.
""நாவல் எம்.டி.ஆரை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது!'' என்கிறார். ஒரு நாள் அந்த நூலும் வரும் என எதிர்பார்ப்போம்!