ஞாயிறு கொண்டாட்டம்

ஜிப்சி' பாபு...​ குருவி கார்!

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்-இவை பாடலின் வரிகள். ஆனால், உதகையில் நடைபெற்ற பழங்கால கார்களின் அணிவகுப்பைப் பார்த்த பொதுமக்கள், தொழில்நுட்ப வளர்ச்சி முழுமையாக இல்லாத காலத்திலேயே கார்களை உருவாக்

ஏ. பேட்ரிக்

றவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்-இவை பாடலின் வரிகள். ஆனால், உதகையில் நடைபெற்ற பழங்கால கார்களின் அணிவகுப்பைப் பார்த்த பொதுமக்கள், தொழில்நுட்ப வளர்ச்சி முழுமையாக இல்லாத காலத்திலேயே கார்களை உருவாக்குவதில் இத்தனை கைவண்ணங்களா என மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டனர். அந்த அளவுக்கு ஒவ்வொரு காரும் ஒவ்வொரு விதமாக அமைந்திருந்தன.

உதகையில் கோடை சீசனையொட்டி நீலகிரி வின்ட்டேஜ் கிளாசிக் கார் அசோசியேசன் என்ற அமைப்பின் சார்பில்  நடத்தப்பட்டுவரும் பழங்கால வாகனங்களின் கண்காட்சி நடப்பாண்டில்  5வது ஆண்டாக கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கடந்த 1934ம் ஆண்டிலிருந்து 1966ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட 50 நான்கு சக்கர வாகனங்களும், 30 இரு சக்கர வாகனங்களும் பங்கேற்று பார்த்தவர்களையெல்லாம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.

இந்தியா ஒரு பழமையான நாடு, எனவே பழமையைப் பாதுகாப்பதில் உரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அதற்காகவே பழங்கால வாகனங்களை இந்தக் கண்காட்சிக்குக் கொண்டு வந்து அந்தக் காலத்தில் இருந்த தொழில் நுட்பங்களையெல்லாம் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு கற்றுத்தரும் முயற்சியே இதுவென சென்னையிலுள்ள வின்ட்டேஜ் அண்டு கிளாசிக் வெகிகிள்ஸ் பவுண்டேசன் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் டாக்டர் சங்கர்தேவ் மற்றும் துரை மோகன் குறிப்பிட்டனர்.

இவர்களது அமைப்பில் சென்னையில் மட்டும் 250 உறுப்பினர்கள் உள்ளனராம். இவர்களது அமைப்பின் சார்பில் பழங்கால வாகனங்களைக் குறித்த ஒரு நூலகமே நடத்தப்பட்டு வருவதோடு, பழங்கால வாகனங்களைக் குறித்த விபரங்களை மற்றவர்களும் தெரிந்து கொள்வதற்காக

chevy.dmgmail.com என்ற இணைய முகவரியிலும், 94440 09900 என்ற மொபைல் எண்ணிலும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டனர்.

இவர்கள் உதகையில் நடைபெற்ற கண்காட்சிக்கு 1953ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வேக்ஸ்ஹால் என்ற காரையும், 1960ம் ஆண்டின் பியட் கார் ஒன்றையும் கொண்டு வந்திருந்தனர்.

அதேபோல, இக்கண்காட்சியில் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் சார்பில் 1957ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிளைமவுத் மற்றும் 1967ம் ஆண்டின் பென்ஸ் கார்களைக் கொண்டு வந்திருந்தனர். நீலகிரிக்கு வந்த இந்திய குடியரசு தலைவர்களிலிருந்து, ராணுவ தலைமை அதிகாரிகள் வரை இந்தக் கார்களில் பயணித்துள்ளனர். இந்த வாகனங்களை ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி பொக்கிஷமாகவே வைத்துள்ளனர்.

இக்கண்காட்சியில் திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரஜினிகாந்தின் 1948ம் ஆண்டின் தயாரிப்பான உல்ஸ்லே ரக கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.   பொதுவாக காரின் சக்கரங்கள் பஞ்சர் ஆகிவிட்டால் ஜாக்கி வைத்து தூக்கி அந்தச் சக்கரத்தை கழற்றி வேறு சக்கரத்தை மாட்ட வேண்டும்.

ஆனால், இந்த காரின் அடியிலேயே பில்ட் இன் ஜாக்கி என்ற தொழில்நுட்பத்தின்கீழ் 4 சக்கரங்களுக்கு அருகிலும் ஜாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதால் சுவிட்சை போட்டால் அந்த ஜாக்கிகள் கீழிறங்கி சக்கரங்களை உயரே தூக்கிவிடும். ஜாக்கியே தேவைப்படாத காராகும் இது.

இதைப்போல, ரஜினிகாந்த் 1934ம் ஆண்டின் ஆஸ்டின் 7, 1936ம் ஆண்டின் ஆஸ்டின் ஏ 40 கார்களோடு 1942ம் ஆண்டின் யாஸ் ரக ஜீப்பையும் காட்சிக்குக் கொண்டு வந்திருந்தார். ரஷிய நாட்டின் தயாரிப்பான யாஸ் 2வது உலகப் போரில் பங்கேற்ற வாகனமாகும்.

தென்னிந்தியாவிலேயே இவரிடம் மட்டும்தான் இந்த ரக ஜீப் உள்ளது. இது பெட்ரோல் மற்றும் கெரசின் ஆகிய இரண்டிலும் ஓடும். அதற்காக இரண்டு டேங்க்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல, வானிலிருந்து பார்த்தால் தரையில் ஓடும் இந்த வாகனம் தெரியக்கூடாது என்பதற்காகவே குறைந்தபட்ச விளக்குகள், போர் முனையில் தண்ணீர் கிடைப்பது கடினம் என்பதால் அந்த வாகனத்திற்கு அடியிலேயே தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்ளும் டேங்க் வசதி போன்றவையும் உள்ளன.

இந்த வாகனங்களைப் பார்த்துவிட்டு நகர்ந்தால் "குருவி' படத்தில் விஜய் ஓட்டிய ஜீப்பும் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதை கொண்டு வந்திருந்தவர் ஈரோட்டை சேர்ந்த ஜிப்சி பாபு என்பவராவார். இவரிடம் அந்த வண்டியைக் குறித்து கேட்டால் 2ம் உலகப் போரில் பங்கேற்ற அந்த ஜீப் இதுவரை 28 திரைப்படங்களிலும் இடம் பெற்றுள்ளதாகவும், இதன் சக்கரங்களைக் கழற்றி விட்டால் ரயில் தண்டாவாளத்திலும் ஓடுமளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வியப்பால் நமக்கு மட்டுமல்ல, அருகிலிருந்தவர்களின் கண்களும் விரிந்தன.

வோக்ஸ்வேகன் என்ற 1956ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட காருக்கு என்ஜின் பின்புறமும், டிக்கி முன்புறமும் அமைந்திருந்தன. என்ஜின் பின்புறம் அமைந்திருந்ததால் இதற்கு ரேடியேட்டர் கிடையாது. அதற்குப் பதிலாக இயற்கையாக கிடைக்கும் காற்றைக்கொண்டு வெப்ப நிலையைச் சமன் செய்து கொள்ள வசதியாக ஏர் கண்ட்ரோல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது ஜெர்மனி நாட்டின் தயாரிப்பாகும்.

இவ்வாறு இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த அனைத்து வாகனங்களுமே ஒவ்வொரு வகையில் தமக்கென ஒரு தனிச்சிறப்பைப் பெற்றிருந்தன.

இந்தக் கண்காட்சி மற்றும் அணிவகுப்பைக் குறித்து நீலகிரி வின்ட்டேஜ் அண்டு கிளாசிக் கார் அசோசியேசன் அமைப்பின் தலைவரான ரஜினிகாந்த் நம்மிடம் கூறும்போது, ""கடந்த காலங்களில் பழைய வாகனங்கள் என்றாலே தூக்கியெறியப்பட்டு கிடைத்த விலைக்கு விற்றுவந்த நிலை தற்போது மாறி பழைய வாகனங்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இதற்கான உதிரி பாகங்கள் கிடைக்காவிட்டாலும், அந்த வாகனத்தைக் குறித்து தெரிந்த மெக்கானிக்குகளைக் கொண்டு தாங்களாகவே தேவைப்படும் பாகத்தை உருவாக்கிக் கொள்வதாகவும், பழசுக்கு உள்ள மரியாதையே தனிதான். மேலும் இந்தப் பழைய வாகனங்களைப் பராமரிக்க அதிக செலவாவதில்லை என்பதோடு, புதிய வாகனங்களோடு ஒப்பிடுகையில் பழைய வாகனங்களின் தொழில் நுட்பம் இன்னமும் புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளது என்பதால் வாகன உற்பத்தியைக் குறித்த படிப்புகளைப் பயில்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்து வருகிறது'' என்றார்.

உதகையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் நீலகரி மாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் மட்டுமின்றி சென்னை, பாலக்காடு, ஈரோடு, தாராபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் வாகனங்கள்

வந்திருந்தன.

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட உதகை நகரில் பவனி வந்த இந்தப் பழைய வாகனங்கள் அணிவகுத்து சென்றதைப் பார்த்தவர்களுக்கு தங்களது பசுமையான பழைய நினைவுகளும் நிழலாடின என்பதை யாரும் மறுக்க இயலாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT