கா ல்கள் அனைத்துமே நீல நிறமாக இருப்பதால் இதனை நீலக்கால் நண்டு என்கின்றனர். கடற்பாறைகள்,
பவளப்பாறைகள் அதிகம் உள்ள பகுதிகளில் இவை வியாபித்திருக்கின்றன. இவற்றில் முக்கண் நண்டு,ஊதா நண்டு என இரு சப்-ஜாதிகள் இருக்கின்றன.
இந்த விநோத ஜீவன் குறித்து மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் திட்ட அலுவலர் அ.முருகன் கூறியது. வீடுகளில் தரைதளத்துக்குப் போடப்படும் டைல்ஸ் மாதிரி இதன் ஓடுகள் இருக்கும். ஊதா நண்டு வகை அதிகமாக கிடைத்தாலும் முக்கண் நண்டு வகை சீசன் நேரங்களில் மட்டுமே கிடைக்கிறது.
வைட்டமின் சத்தும், புரதச் சத்தும் அதிகம் உள்ள இந்த நண்டு வகைகளை பிடித்து அவித்து அதன் சதையை டப்பாக்களில் அடைத்து ஏற்றுமதி செய்கிறார்கள். தூத்துக்குடியில் இதனை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் உள்ளது. கடலின் உப்புத்தன்மை ஏறி இறங்கும் போது அதாவது மாறுகிற போது அதன் தட்பவெட்ப்ப நிலையை இவற்றால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை என்பதால் இவற்றிற்கு வளர்ப்பு முறை இல்லாமல் உள்ளது. இவ்வகை நண்டுகள் தேவைப்படுவோர் கடலை நம்பித்தான் வாழவேண்டியிருக்கிறது.
பொதுவாக நண்டுகள் இனப்பெருக்கம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் குணம் உடையவை. ஆனால் இவ்வகை நண்டுகள் இனப்பெருக்கத்துக்காக அதிகநேரம் எடுத்துக் கொள்வதில்லை. காதல் சுவாரஸ்யங்கள் அனைத்தையும் கடற்கரையோர மணற்பரப்பில்தான் வைத்துக் கொள்கின்றன. ஒரு பெண் நண்டு ஒரு மில்லியன் முட்டைகள் வரை இடுமாம்.
ஒரு பெண் நண்டினைப் பிடித்தால் ஒரு மில்லியன் குஞ்சுகள் வரை அழிந்து விடும் என்பதால் இவற்றைப் பிடிக்கும் மீனவர்கள் கடலில் விட்டு விட்டால்தான் இந்த இனம் அதிகமாக அழிய வாய்ப்பிருக்காது.
நண்டுகளைப் பிடிப்பதற்கென்றே உள்ள வலைகளில் இவைகள் அதிகமாக மாட்டிக்கொள்கின்றன. உடலில் சளித் தொந்தரவு நீங்கவும்,இதய நோய்க்கும் இதன் சுவைமிகு இறைச்சி ஓர் அற்புத மருந்து.
சிறுமீன்கள்,நத்தைகள்,நீரில் மிதக்கும் அழுக்குகள்,சதைத்துணுக்குகள்,பாசிகள், கரையோரத்தில் மிதக்கும் இறந்த மீன்கள் போன்றவையே இவற்றின் டிபன் ஐட்டங்கள். சுமார் 6 ஆண்டுகள் வரை வாழும் இந்த உயிரினம் துளிகூட உடலை நெளிக்காமல் கண்களை மட்டும் எல்லாப் பக்கமும் திருப்பும் சிறப்புடையது. இரையைப் பிடிக்க ஏதுவாக இதன் முன்ஜோடிக் கால்கள் இடுக்கி போல் இருந்தாலும் 10 கால்களையும் வைத்துக்கொண்டு பக்க வாட்டில் நடக்கிறது இந்த விநோத ஜீவன்.''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.