முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பரி கொய்ரே என்கிற பரமேஸ்வரி!

படித்ததற்குத் தொடர்பில்லாமல் தொலைக்காட்சி, சினிமா, ஈவென்ட் மேனேஜ்மென்ட், மாடலிங் என்று பலதுறைகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார் பரி கொய்ரே. அவர் படித்ததோ ஹோமியோபதி, அக்குபங்சர் மருத்துவம். தற்போது ஈவென்ட

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:32 PM
பகிர்:

படித்ததற்குத் தொடர்பில்லாமல் தொலைக்காட்சி, சினிமா, ஈவென்ட் மேனேஜ்மென்ட், மாடலிங் என்று பலதுறைகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார் பரி கொய்ரே. அவர் படித்ததோ ஹோமியோபதி, அக்குபங்சர் மருத்துவம். தற்போது ஈவென்ட் மேனேஜ்மென்ட் துறையில் மேனேஜராக இருக்கிறார். பரி கொய்ரேவிடம் ஒரு மினி உரையாடல்...

பேரே வித்தியாசமாக இருக்கிறதே?

அப்பா, அம்மா வைத்த பெயர் பரமேஸ்வரி. ஊடகத்தில் நுழைந்தபோது வித்தியாசமாக பெயர் இருக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டதுதான் பரி கொய்ரே. இதில் கொய்ரே என்பது குடும்பப் பெயர். பரமேஸ்வரியின் சுருக்கம்தான் பரி.

Advertisement

படித்ததற்குத் தொடர்பில்லாமல் ஊடகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறீர்களே?

அப்படிச் சொல்ல முடியாது. எனது மூன்று வயதில் இருந்தே நடனம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ராபர்ட் மாஸ்டரிடம் , பரதம், நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம் எல்லாம் கற்றுக் கொண்டேன். பள்ளியில் படிக்கும்போது மாடலிங் செய்தேன். அதன் தொடர்ச்சியாகத்தான் நான் ஊடகத்துறையில் நுழைந்திருக்கிறேன். கலைத்துறையில் நுழைவதற்குச் சின்ன வயதிலேயே அடித்தளம் போட்டாகிவிட்டது.

உங்களைப் பார்த்தால் தமிழ்ப்பெண் மாதிரி தெரியவில்லையே, தமிழ் நன்றாகப் பேசுகிறீர்களே?

நீங்கள் மட்டுமல்ல, எல்லாரும் எனக்குத் தமிழ் தெரியாது என்றுதான் நினைக்கிறார்கள். பஸ்ஸில் செல்லும்போது, பொது இடங்களில் எனக்குத் தமிழ் தெரியாது என்று நினைத்துக் கொண்டு கமெண்ட் அடிப்பார்கள். அவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக நானும் தமிழ் தெரியாத மாதிரி இருந்துவிடுவேன். ரொம்ப ஓவராகக் கமெண்ட் அடித்தால் மட்டும், எனக்கும் தமிழ் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்வேன்.

எனது தாய்மொழி நேபாளி. ஆனால் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில். அதனால் தமிழ் சரளமாகப் பேசுவேன்.

சின்னதிரையில் என்ன செய்திருக்கிறீர்கள்?

ராஜ் டிவியில் "என் மனமே' என்று ஒரு  நிகழ்ச்சி. ஆல் டைம் மியூசிக் எனும் அந்த நிகழ்ச்சிக்கு காம்பியராக இருந்தேன். விஜய் டிவியில் "கோடம்பாக்கம் ஸ்கூல்' என்ற நிகழ்ச்சியில் நடித்தேன். அதில் தமிழ் தெரியாதவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பார்கள். நான் மும்பையில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த நடிகையாக அந்த நிகழ்ச்சியில் நடித்தேன். எனக்குத் தமிழ் தெரியாது. தமிழை எப்படியெல்லாம் சிரமப்பட்டுக் கற்றுக் கொண்டேன் என்பதை மிகுந்த கலகலப்புடன் சொல்லும் நிகழ்ச்சி அது. தற்போது சன் தொலைக்காட்சியில் திருமுருகன் இயக்கத்தில்  ஒளிப்பரப்பாகிவரும் "நாதஸ்வரம்' தொடரில் நடிக்க இருக்கிறேன்.

சினிமாவில்?

ஏ.எம்.ரத்தினம் அவர்களின் மகன் ஜோதிகிருஷ்ணா இயக்கிய "ஊ..ல..ல..லா..' படத்தில் நடித்தேன். இப்போது நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பது என்ற உறுதியுடன் இருக்கிறேன்.

வேறெந்த துறைகளில் கலக்குகிறீர்கள்?

பெங்களூருவைச் சேர்ந்த சன்னி என்பவர் இயக்கிய "சிதறல்' என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறேன். தற்போது "சென்னை ஈவென்ட் ஆர்ட்' என்னும் நிறுவனத்தில் பிசினஸ் மேனேஜராக இருக்கிறேன்.

குடும்பத்தினர் ஒத்துழைப்பு?

அப்பா ஷ்யாம்லால் அசோக்லேலண்ட் நிறுவனத்தில் வேலை செய்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.  அம்மா மது குடும்பத் தலைவி. அண்ணன்,தங்கை உள்ளனர். எனது முயற்சிகளுக்கு எங்கள் வீட்டில் யாரும் தடை சொல்வதில்லை. இல்லாவிட்டால் இப்படிச் சிறகடித்துப் பறக்க முடியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.