முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பேசாப் பொருளைப் பேசும் குறும்படம்!

கை நிறைய அல்ல, பை நிறைய சம்பளம்... கார்... அடுக்குமாடிக் குடியிருப்பு என வாழ்க்கையில் அவர்கள் எளிதாக அடைந்தவை ஏராளம். ஒரு பெரிய நிறுவனத்தில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நல்ல...

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:15 PM
பகிர்:

சென்னை போன்ற நகரங்களில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் இளைஞர்களின் வாழ்க்கை ரொம்பவும் வித்தியாசமானது. கை நிறைய அல்ல, பை நிறைய சம்பளம்... கார்... அடுக்குமாடிக் குடியிருப்பு என வாழ்க்கையில் அவர்கள் எளிதாக அடைந்தவை ஏராளம். ஒரு பெரிய நிறுவனத்தில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நல்ல சம்பளத்தில் பணி செய்த இளைஞர் ஒருவருக்கு அப்படிப்பட்ட வாழ்க்கை மிகவும் பரிச்சயமானது. அந்த அனுபவத்தை வைத்து அவர் ஒரு குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இதுவரை இந்த வாழ்க்கையைச் சித்திரிக்கும் திரைப்படங்கள், குறும்படங்கள் தமிழில் மிகவும் குறைவு. தமிழில் ஒரு புதிய முயற்சியாக உருவாகியிருக்கும் அந்தக் குறும்படத்தின் பெயர்: ஃபேர் அண்ட் லவ்லி. அதை இயக்கியவர் சூர்யா பாலகுமாரன். நீங்கள் நினைத்தது சரிதான். எழுத்தாளர் பாலகுமாரனின் மகன்தான் சூர்யா பாலகுமாரன்.

தமிழ் இலக்கிய உலகிலும், திரை உலகிலும் எழுத்தாளர் பாலகுமாரன் பதித்த முத்திரைகள் அதிகம். அவரின் இன்னொரு முத்திரையாக முகிழ்த்திருக்கிறார் சூர்யா பாலகுமாரன். சூர்யா பாலகுமாரனிடம் பேசினோம்.

குறும்படம் இயக்கும் எண்ணம் எப்படி வந்தது?

நான் பி.காம் முடித்தபோதே திரைப்படத்துறைக்கு வந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன்தான் இருந்தேன். ஆனால் ஒரு மாஸ்டர் டிகிரி படி என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள். நானும் எம்.பி.ஏ. முடித்துவிட்டு டிஸிஎஸ் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் வேலை செய்தேன். என்றாலும் என் மனமெங்கும் சினிமாவே நிரம்பிக் கிடந்தது. நல்ல சம்பளம், நல்ல வேலைச் சூழ்நிலை என்று இருந்தாலும் ஒரு நிறைவின்மையே எப்போதும் எனக்குள் இருந்தது.

அப்போது நானும் நண்பர்களும் எப்போது பார்த்தாலும் சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்போம். இதை இப்படி எடுத்திருக்கலாம், அதை வேறுவிதமாகச் சொல்லியிருக்கலாம் என்று பேசிக் கொண்டிருப்போம். இப்படி பேசிக் கொண்டிருப்பதைவிட நாமே  களத்தில் இறங்கினால் என்ன? என்று தோன்றியது. முதல் முயற்சியாக "என்னுயிர்த் தோழன்' என்ற குறும்படத்தை எடுத்தோம். என்னுடைய அப்பா அதைப் பார்த்துவிட்டு, "ரொம்ப நல்லா இருக்கு' என்று பாராட்டினார். அது எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தது. எனவே நல்ல வருமானம் வரும் வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் திரைத்துறையில் இயங்க முடிவு செய்தேன்.

இப்போது வீட்டில் தடுக்கவில்லையா?

இல்லை. ஊக்கப்படுத்தினார்கள். 26- 27 வயதில் ஒரு புதிய துறையில் இறங்குவதற்கு பொதுவாக யாருமே ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் என் அப்பா, ஒரு இரண்டு வருடம் கஷ்டப்பட்டால் நல்ல நிலைக்கு வந்துவிடலாம் என்று ஊக்கம் கொடுத்தார்.

நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்க, நகர்ப்புறத்தில் நல்ல வேலையும், வருமானமும் உள்ள இளைஞர்களைப் பற்றிய குறும்படம் எடுத்ததேன்?

இப்போது குறும்படம் என்றாலே மிகவும் அறிவு சொல்கிற படங்களாகவே வந்து கொண்டிருக்கின்றன. எய்ட்ஸ்  விழிப்புணர்வு, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றவை பற்றியே அதிகக் குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன. நகைச்சுவை கலந்த குறும்படங்கள் எடுக்கப்படுவதில்லை. எனவே மக்கள் விரும்பிப் பார்க்கக் கூடிய, வித்தியாசமான குறும்படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். தகவல் தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்யும் ஓர் இளைஞனுக்கு ஏற்படும் காதல் பற்றிய குறும்படம் இது. இன்றைய இளைஞர்களுக்குப் படிப்பும், திறமையும் இருந்தாலும், வாழ்க்கையில் அவர்கள் பக்குவப்படவில்லை என்பதை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்திருக்கிறோம். அந்த வகையில் இந்தக் குறும்படம் பேசாப் பொருளை பேசுகின்ற ஒன்றாக அமைந்துவிட்டது.

குறும்படம் எடுக்க நிறையச் செலவு ஆகுமே? இந்தக்

குறும்படத்தில் உங்களுக்கு உதவியவர்கள் யார்? யார்?

என்னுடைய ஆர்வத்தைக் கேள்விப்பட்டு எங்கள் குடும்ப நண்பர் பிரபுராம் இந்தக் குறும்படத்தைத் தயாரிக்க முன் வந்தார். நண்பர் சிவாவின் கதைக்கு நான் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறேன். கேமிராவை ஈஸ்வரனும், எடிட்டிங்கை பிரசன்னாவும் பார்த்துக் கொண்டார்கள். ப்ரவீன், சரத், ப்ரியா நடித்திருக்கிறார்கள்.

குறும்படம் எடுப்பதால் பெரிய அளவுக்கு வருமானம் இருக்காதே?

இந்தக் குறும்படத்தை இணைய தளங்களில் ஒளிபரப்பப் போகிறோம். சிங்கப்பூர், மலேசியா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறும்பட விழாக்களுக்கும் அனுப்பப் போகிறோம். பண வருமானம் என்று பார்ப்பதைவிட மனதிற்குப் பிடித்த செயலைச் செய்த திருப்தி எங்களுக்கு அதிகம் இருக்கிறது.

உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டவை எவை?

என் அப்பா எழுத்தாளராக இருந்தாலும் திரைத்துறையில் நீண்டகாலம் இருக்கிறார். ஆனால் நான் அவரிடம் திரைத்துறையைப் பற்றிக் கற்றுக் கொண்டதைவிட தமிழை அவரிடம்தான் கற்றுக் கொண்டேன். மனதில் தோன்றுவதை தவறில்லாமல் தமிழில் எழுத, பேச எனக்கு முடியும். அதை என் அப்பாவிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். இன்னும் அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. கற்றுக் கொள்வேன்.

முழு கட்டுரையைப் படிக்க →