முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கணவாய் மீன்

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் வசிக்கும் கடல்வாழ் உயிரினங்களில் ஜெல்லி மீன்களைப் போல சதைகளால் மட்டுமே உருவான அரியவகை உயிரினம்தான் கணவாய் மீன். கடலில் கூட்டம், கூட்டமாக வாழும் இந்த விநோத ஜீவன்களின் சிறப

Updated On : 20 செப்டம்பர், 2012 at 10:21 PM
பகிர்:

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் வசிக்கும் கடல்வாழ் உயிரினங்களில் ஜெல்லி மீன்களைப் போல சதைகளால் மட்டுமே உருவான அரியவகை உயிரினம்தான் கணவாய் மீன்.

கடலில் கூட்டம், கூட்டமாக வாழும் இந்த விநோத ஜீவன்களின் சிறப்புகளைப் பற்றி ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..

""பார்ப்பதற்கு மீன் போல தோற்றமளித்தாலும் உண்மையில் இது ஒரு விலங்கியல் மெல்லுடலி. செபியா என்பது இதன் விலங்கியல் பெயர். இரு பெரிய அழகிய கண்களும் ரம்பம் போன்ற பற்களும் பலமான உதடுகளும் உடைய இந்த உயிரினத்தின் தலையில் 8 கைகளும் வாலில் இரு துடுப்புகளும் உள்ளன. புதிதாகப் பார்ப்பவர்களுக்கு இதன் தோற்றம் ஒரு ஆக்டோபஸ் போலவே இருக்கும்.

Advertisement

இதனுடைய 8 கைகளின் உட்புறங்களிலும் உள்ள உறிஞ்சு கிண்ணங்களால் இரையைப் பிடிக்கவும் நழுவாமல் ஒட்டிக்கொள்ளவும் முடிகிறது. இரு பெரிய நீண்ட உணர்விழைகளை உடைய இம்மீன்கள் நீந்துவதற்கு ராக்கெட் தத்துவத்தைப் பயன்படுத்துகின்றன. அதாவது கடல் நீரை உடல் முழுவதும் நிரப்பிக்கொண்டு அதைப் பின்புறமாக வேகமாக வெளியேற்றி அதனால் ஏற்படும் விசையினால் அது முன்தள்ளப்பட்டு நீந்துகின்றன.

மீனவர்கள் வலை வைத்துப் பிடித்தால் மிக லேசான சதைகளையுடைய இதன் உடல்கள் சிதைந்து விடும் என்பதால் தூண்டில்கள் மூலமாகத்தான் பிடிக்கிறார்கள். பெரிய மரங்களின் முறிந்த கிளைகளைக் கடலுக்கு அடியில் போட்டு விட்டு அதற்கு அடையாளமாக கடலின் மேற்பரப்பில் மிதவைகளை மிதக்க விடுகின்றனர். ஒரு மாதம் கழித்து அந்த மரக்கிளைகளின் மேல் ஏராளமான கணவாய் மீன்கள் முட்டை போட்டு அங்கேயே தங்கி இருக்கும். இதனை தெரிந்த மீனவர்கள் மரக்கிளைகளை சிறிதும் அசைத்து விடாமல் தூண்டில்கள் மூலம் நுட்பமாக மொத்தமாகப் பிடித்து விடுகிறார்கள். இந்த மீனின் அற்புத சுவைதான் இதனைப் பிடிக்கவும் காரணமாக இருக்கிறது.

பதப்படுத்தப்பட்டு வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது. சுமார் 18 செ.மீ. வரை வளரக்கூடிய இந்த ஜீவனின் தலைக்குள் உள்ள சுரப்பி மூலம் எதிரிகள் கிட்ட வரும் போது கருப்பான, அடர்த்தியான திரவத்தைத் திடீரென்று வெளியேற்றி

சுற்றுப்புறத்தை கறுப்பாக மாற்றி விட்டு வேகமாக தப்பித்து, பாறைகளுக்குள் ஒளிந்து கொள்ளும்.

மீன்குஞ்சுகள், இறால்கள் இவற்றைத் தின்று உயிர்வாழும். இந்த உயிரினம் கடற்தாவரங்களில் ஒட்டிக் கொண்டு இருப்பது போல முட்டையிடுகின்றன. இதன் முட்டைகள் பளிங்குகுண்டுகள் போலவே இருக்கும். முதுகெலும்பற்ற உயிரினங்களில் பெரியதாக இருந்தாலும் தன்னுடைய ஓட்டினை அடிக்கடி கழற்றி தண்ணீரில் விட்டு விடுவதால் அது கடற்கரையோரத்தில் வந்து ஒதுங்கி விடும்.

அம்பு போன்ற வடிவத்தில் நீந்துவதும் இடத்துக்கேற்ப தன் நிறத்தை மாற்றுவதும் இந்த உயிரினத்தின் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.