வசந்த காலத்தில் மட்டும் காய்ப்பதோடு, சைவ உணவை மட்டுமே உண்பவர்களுக்கு முட்டை சாப்பிடுவதைப் போன்ற உணர்வையும் தருவதுமான மஞ்சள் சப்போட்டா என்ற முட்டைப்பழம் தற்போது நீலகிரியில் காய்க்கத் தொடங்கியுள்ளது.
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் சப்போட்டா பழத்தைப்போல காட்சியளிக்கும் பழம் முட்டைப் பழமாகும். இதை தாவரவியலில் Pouteria Campechiania என அழைக்கின்றனர். மலேசியாவைத் தாயகமாகக் கொண்ட இப்பழ மரங்கள் தென்கிழக்கு ஆசியாவிலும், மெக்சிகோ, பிரேசில், தைவான், வியட்நாம் போன்ற பகுதிகளிலும், இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. தற்போது இவை நீலகிரி மாவட்டத்தில் கல்லார் மற்றும் பர்லியார் பகுதிகளில் உள்ளன.
பெயரே வித்தியாசமாக உள்ள இப்பழத்தைக் குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் டாக்டர் வி.ராம்சுந்தர் மற்றும் பிரகாசம் ஆகியோர் தெரிவித்த
விபரங்களாவன:
""இம்மரங்களில் பழங்கள் பழுத்தவுடன் வீசும் நறுமணம் வசீகரிக்கக் கூடியதாகும். கோழி முட்டையின் மஞ்சள் கருவைப் போன்று இப்பழங்களின் சதைப்பகுதி இருக்கும். அதைப்போன்ற சுவையையும் கொண்டதாகவே இருப்பதாலேயே இவை முட்டைப் பழம் என அழைக்கப்படுகிறது. 100 கிராம் எடையுள்ள பழத்தில் 2000 ஐ.யூ வைட்டமின் ஏ சத்தும், 2.5 சதம் புரதச்சத்து உள்ளதோடு வைட்டமின் சி சத்து அதிக அளவில் காணப்படுகிறது.
இப்பழம் சாப்பிட்டவுடனேயே உடலைக் குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டதாகும். அதனால், கோடைக்காலத்திற்கு ஏற்ற பழ வகைகளில் முட்டைப்பழமும் ஒன்று. இப்பழம் சில இடங்களில் மருந்தாகவும் பயன்படுத்தப்
படுகிறது.
இம்மரங்கள் வளரக்கூடிய நிலங்கள் களர் உவர் நிலங்களாகும். அதிலும் மேற்கு நோக்கி சாய்ந்த மலைச்சரிவுகளிலேயே இப்பழ மரங்கள் வளரும் தன்மை கொண்டவை. அதிக அளவில் இரசாயன உரங்கள் ஏதும் இம்மரங்களுக்கு தேவைப்படாததால் இயற்கை சத்தும் அதிகம் கொண்டவையாகும்.
பெரு நாட்டில் தோண்டியெடுக்கப்பட்ட மிகப் பழங்காலத்தைச் சேர்ந்த கல்லறைகளில் வைக்கப்பட்டிருந்த உருவங்களில் இப்பழத்தின் உருவமும் செதுக்கப்பட்டிருந்ததே அக்காலத்தில் இப்பழத்திற்கு அளிக்கப்பட்டிருந்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
உதகையில் மலர்க்காட்சி, குன்னூரில் பழக்காட்சி போன்றவற்றில் இப்பழங்களைக் காட்சிக்காக வைத்திருப்பதைக் காணலாம்.
இம்மரத்தின் பழங்கள் மட்டுமின்றி மரமும் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. கப்பல்களில் மேல் தளம் அமைப்பதற்கு இம்மரங்களே பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் இம்மரங்களில் கடல் கிருமிகளை எதிர்க்கும் சிலிக்கா என்ற வேதிப்பொருள் அதிக அளவில் இருப்பதால் பெரும்பாலான கப்பல்களின் மேல் தளங்கள் இம்மரங்களால் ஆனவையேயாகும்.
பொதுவாக ஒவ்வொரு தாவரமும் ஏதோ ஒரு தாவரக் குடும்பத்தை சேர்ந்தவையாக இருக்கும். ஆனால், சில வகை எந்த தாவரக் குடும்பத்திலும் சேராது. அப்படிப் பட்டவற்றைக் குப்பைத் தொட்டி குடும்பம் எனத் தாவரவியல் வல்லுநர்கள் அழைக்கின்றனர். இதன்படி குப்பைத் தொட்டி குடும்பத்தை சேர்ந்ததே முட்டைப் பழ மரங்களாகும்'' எனத் தெரி
வித்தனர்.
அதனால் சைவப்பிரியர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தித் தரும் இந்த முட்டைப் பழத்தையும் ஒரு முறை ருசிப்போமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.