முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பிரிக்கமுடியாத அக்கா, தங்கை பாறை!

பன்னிரண்டு அடி உயரம் உள்ள கடுகு பிள்ளையார். பதினெட்டு அடி உயரம் உள்ள கடலைக்காய் பிள்ளையார். இழுக்கத் தயாராக உள்ளது போல் அமைந்த கல்தேர் உள்ள விட்டல் கோயில். இரட்டைப் பிறவி போல் ஓட்டியிருக்கும் அக்கா, த

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:32 PM
பகிர்:

பன்னிரண்டு அடி உயரம் உள்ள கடுகு பிள்ளையார். பதினெட்டு அடி உயரம் உள்ள கடலைக்காய் பிள்ளையார். இழுக்கத் தயாராக உள்ளது போல் அமைந்த கல்தேர் உள்ள விட்டல் கோயில். இரட்டைப் பிறவி போல் ஓட்டியிருக்கும் அக்கா, தங்கை பாறை... இவை எல்லாம் எங்கே இருக்கின்றன என்று கேட்கிறீர்களா? கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஹம்பியில்தான் இருக்கின்றன!

இவற்றைக் கண்டு களிக்க நாங்கள் ஒரு குழுவாக சென்னையில் இருந்து பெங்களூருக்குச் சென்று, ரயில் மாறி ஹோஸ்பெட் சென்றோம். அங்கிருந்து சுமார் பத்து மைல் ஹம்பிக்கு.

சரித்திரத்தில் ஆர்வம் உள்ள எனக்கு, ஹம்பியைப் பார்த்தவுடன் கிருஷ்ண தேவராயர் காலம் பொற்காலமாக விளங்கியிருக்கும் என்று தோன்றியது. பார்க்க பல இடங்கள். எதைப் பார்ப்பது? எதைவிடுவது? எங்கு பார்த்தாலும் சிற்பக் கலையின் மகோன்னதம் தெரிகிறது.

இயற்கைச் சீற்றங்களினாலும் அந்நியர்களின் படையெடுப்பாலும் நிறையச் சிற்பங்கள் உடைந்துள்ளன.

கடுகு பிள்ளையார், கடலைக்காய் பிள்ளையார், இப்போதும் பூஜை நடக்கிற விருபாட்சா கோயில், ஒரே கல்லில் ராமர், லட்சுமணர், சீதை, சுக்ரீவர் சிலைகள் அமைந்த கோதண்ட ராமர் கோயில், ஆஞ்சநேயர் கோயில், தண்ணீரில் அமைந்துள்ள ஜலகண்டேசுவரர், சிதிலம் அடைந்த லஷ்மி நரசிம்மர், விட்டலா கோயில், ராமாயணம், பகவத் கீதை காட்சிகள், பிராகாரம் முழுவதும் அமைந்துள்ள ஹசாரா ராமர் கோயில் ஆகியவை பார்த்தோம். இந்தக் கோயிலின் வெளிப்புறச் சுவர் முழுவதும் சிற்ப வேலைப்பாடுகள் அருமையாய் அமைந்துள்ளன.

துங்கபத்திரை நதிக் கரையில் அமைந்துள்ள புரந்தரதாசர் மண்டபம், தாமரை மஹால், பழைமையான சிலைகள் கொண்ட மூன்று அருங்காட்சியகங்கள், சிதிலம் அடைந்த மன்னரின் அரண்மனைகள், சாபத்தினால் பாறையான அக்கா, தங்கை பாறை.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!

அடுத்து, ஹம்பியில் இருந்து சுமார் 130 கி.மீ. தொலைவிலுள்ள பாதாமி சென்றோம். குறுகலான படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி மூச்சுவாங்கியபடி, மலையில் இருக்கும் நான்கு குகைகளைப் பார்த்தோம்.

முதல் குகையில் எங்கு பார்த்தாலும் சிவன் சிலைகள். நடராஜருடைய எட்டுத் தாண்டவங்கள் சிலை வடிவில் அழகுற அமைந்துள்ளன. இரண்டாவது, மூன்றாவது குகைகளில் விஷ்ணு மற்றும் தசாவதாரத்திலிருந்து சில அவதாரங்கள் தத்ரூபமான சிலைகளாகியிருக்கின்றன.

நான்காவது குகையில் ஜைனர்களின் குருவான மகாவீரர் சிலைகள் நிறைய உள்ளன. வசதிகள் இல்லாத காலத்தில் மலைகளைக் குடைந்து சிலைகள் வடித்திருக்கும் அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை!

மலையின் கீழே பெரிய ஏரி அமைந்துள்ளது. மூன்று பக்கமும் பெரிய படிக்கட்டுகள் இறங்குவதற்கு வசதியாக அமைந்துள்ளன. ஊர் மக்களுக்கு இந்த ஏரியின் மூலம் குடிதண்ணீர் செல்கிறது. ஏரியின் கரையில் ராஷ்டிரகூடர்கள் கட்டிய கோயில்கள் உள்ளன. இந்தக் கோயிலின் கோபுரங்கள் வித்தியாசமாக உள்ளன.

ஹம்பியிலிருந்து பட்டடக்கல் சென்றோம். அங்கு சாளுக்கியர்கள் கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்கிய பல கோயில்களைப் பார்த்தோம்.

மல்லிகார்ஜுனர் கோயில், கலகநாத் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், சங்கமேஸ்வரர் கோயில், விருப்பாக்ஷா கோயில், ஜம்புலிங்கா கோயில், பாப்பாநாத் கோயில் எனப் பல கோயில்களைப் பார்த்தோம். இவை எல்லாவற்றையும் நிதானமாகப் பார்த்து ரசிக்க, நான்கு நாட்களாவது தங்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.