"பிளாஸ்க்'குகள் மற்றும் இரண்டு பெரிய கேன்களுடன் ஒரு மொபெட்டில் அங்குமிங்குமாக பரபரப்பாகச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் ஓர் இளைஞரை திருச்சி மாநகரப் பகுதியில் அடிக்கடி பார்க்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருமுறை அவரைப் பார்த்தபோது, உயர் அதிகாரி ஒருவர் நின்று பேசிக் கொண்டிருந்தார். அந்த இளைஞர் சென்ற பிறகு அதிகாரி நம்மிடம் "தேநீருக்குப் பதிலாக 5 ரூபாய்க்கு அவர் கொடுக்கும் உளுந்தங்கஞ்சி மிகவும் சுவையாக இருக்கும்' என்றார்.
தேநீர் கோப்பை அளவில் உளுந்தங்கஞ்சியா? கிராமத்தில் வயிறு நிரம்ப சாப்பிட்டது. எப்படி இருக்கும் என்ற ஆவலோடு நாமும் ருசி பார்த்தோம்.. அதிகாரி கூறியது உண்மைதான்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரிய மிளகுபாறை பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் தனகோபால்.
எப்படி உருவானது உளுந்தங்கஞ்சி வியாபாரம்? என்ற கேள்வியோடு தனகோபாலைச் சந்தித்தோம். உற்சாகத்தோடு பேசத் தொடங்கினார்.
""எங்களது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அப்பா மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி. பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே பிளஸ் 2 வரை மட்டுமே என்னால் படிக்க முடிந்தது. எனது தந்தைக்குத் திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக வீட்டில் வருமானம் குறையத் தொடங்கியது. எனது வருமானத்தை வைத்து மட்டுமே குடும்பம் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போதுதான் இரவு நேரத்தில் சைக்கிளில் சென்று சுக்குமல்லி காபி வியாபாரம் செய்யத் தொடங்கினேன். தேநீர் வியாபாரமும் செய்தேன். பேருந்து நிலையங்கள், ஆட்டோ நிறுத்தங்கள் ஆகியவைதான் எனது வியாபாரக் களம்.
தேநீருக்குப் போதிய வரவேற்பு இல்லாததால், சுக்குமல்லி காபியும், தேநீருக்குப் பதிலாக உளுந்தங்கஞ்சியும் தயாரித்து விற்கத் தொடங்கினேன். உளுந்தங்கஞ்சிக்கு அனைத்துத் தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் மத்திய பேருந்து நிலையத்தின் அருகே சைக்கிளில் உளுந்தங்கஞ்சி வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது, அரசு அலுவலர் ஒருவர், ""உளுந்தங்கஞ்சி மிகவும் சுவையாக இருக்கிறது. மாவட்ட கருவூல அலுவலகத்துக்கு வந்தால் வியாபாரம் அதிகமாக நடைபெறும்'' என்றார்.
நான் எந்த அரசு அலுவலகத்துக்கும் அதுவரை சென்றதில்லை. ஒரு வழியாக தயங்கித் தயங்கி கருவூல அலுவலகத்துக்கு சென்றேன். அனைவரும் நல்ல முறையில் பேசியதோடு, உளுந்தங்கஞ்சியும் சுவையாக இருக்கிறது எனப் பாராட்டினர்.
அதன்பிறகு, திருச்சி மாநகரில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்களுக்கும் நான் செல்லப் பிள்ளையாகவே வலம் வருகிறேன். காலை 9 மணிக்கு வியாபாரத்தைத் தொடங்குவேன். ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகம் கூடும் இடங்களில் வியாபாரத்தை முதலில் முடித்துக் கொண்டு, காலை 10.30 மணிக்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்லத் தொடங்குவேன். வியாபாரம் முடிய பகல் 12.30 மணி வரை ஆகிவிடும்.
தொடர்ந்து, மாலை 3.30 மணிக்கு வியாபாரத்தைத் தொடங்கினால் முடிய இரவு 7.30 மணியாகிவிடும். இடையில் கிடைக்கும் நேரத்தில் உளுந்தங்கஞ்சியை தயார் செய்து கொள்வேன். தோல் நீக்கிய உளுந்தை, வெல்லத்துடன் சேர்த்து பாயசமாகச் செய்வதுதான் உளுந்தங்கஞ்சி. தொடக்கத்தில் சைக்கிளில் சென்று வியாபாரம் செய்த நான் தற்போது மொபெட்டில் சென்று வருகிறேன். 20 "பிளாஸ்க்' வைத்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு சூடான உளுந்தங்கஞ்சியை என்னால் வழங்க முடிகிறது. அதுவே, எனது வியாபாரத்தின் பலமாகவும் உள்ளது.
உளுந்தில் புரோட்டின் சத்து அதிகம் இருப்பதாலும், ஒரு தம்ளர் ரூ.5 என்பதாலும் அனைத்துத் தரப்பினரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். நாளொன்றுக்கு ரூ. 300 வரை என்னால் சம்பாதிக்க முடிகிறது. கடை அமைத்து வியாபாரம் செய்ய நினைத்தாலும், இந்தத் தொழிலுக்குக் கடனுதவி கிடைப்பதில் பிரச்னை உள்ளது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.