"குப்பி' மனித உணர்வுகளை மென்மையாக அதே சமயம்
அழுத்தமாகச் சொல்லி மனதை வருடிய படம். "குப்பி' நல்ல படம்னு ஓர் அபிப்ராயம் உருவாக்கிய படைப்பு. அந்த வட்டத்தில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து ஒரு படம் செய்யணும்னு தோணுச்சு. வேறு மாதிரியும் ஒரு படம் செய்து பார்க்க ஆசைப்பட்டேன்.
ஜனரஞ்சகமாக ஒரு படம்.. அதே சமயம் அழுத்தமான ஒரு சம்பவம். அழகா, அற்புதமா ஒரு காதல்னு எனக்கு
முற்றிலும் புதிய தளம். முதல் படம் போலவே பதற்றம், படபடப்பு, ஆர்வத்தோடு இது நடந்து முடிஞ்சிருக்கு. இலக்கை அடைந்துவிட்ட ஒரு நிம்மதி மனசெங்கும் பரவியிருக்கு. நிம்மதியாகப் பேசுகிறார் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.
மீண்டும் உங்களிடம் இருந்து ஓர் உண்மை சம்பவம், வருவதில் ஆச்சரியம் இல்லை. எப்படி வந்திருக்கு?
"குப்பி' போல் இந்தப் படமும் நிச்சயம் கவனம் பெறும். தற்கால அரசியலில், எல்லோருக்கும் தெரிந்த பாபர் மசூதி கலவரத்தின் பின்னணியில் ஒரு கதையைப் பின்னியிருக்கேன்.
ஆனா அதுவும் உண்மை சம்பவம்தான். பெங்களூரில் ஒரு போலீஸ் குடியிருப்பில் நடந்த சம்பவத்தைக் கையில் எடுத்து மனசெல்லாம் பரவவிட்டு, நிறைய ஆய்வுகள் செய்து முடிச்சிருக்கேன்.
பாபர் மசூதி விவகாரத்தை முழு சினிமாவுக்கான கதையாக எடுத்துக் கொள்ளவில்லை. அதில் முழு சினிமாவுக்குமான கதையும் இல்லை. அதோடு ஒரு மென்மையான காதலை இணைச்சிருக்கேன். கதைப்படி ஒரு நபர் காணாமல் போய்விடுகிறார். கதை என்பதுகூட தவறு. நிஜமாக நடந்தது. 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த நபரை நான் தேடிக் கொண்டுதான் இருக்கேன். சம்பந்தப்பட்டவர்களும்தான்.
இந்தப் படம் வெளியானால் அவர் நிச்சயம் வெளிவருவார்ன்னு நம்பிக்கை இருக்கு. அவர் எந்த அளவுக்கு முக்கியமானவர்? என்பதை நீங்க தியேட்டரில்தான் பார்க்கணும். வாழ்க்கையின் எல்லா முரண்களையும் எட்டி நின்று ரசிக்கிற பக்குவம் உங்களுக்கு இருக்குமானால் இது உங்களுக்கான படம்.
பெரிய நட்சத்திரங்கள் இருந்தால் நன்றாக இருக்குமே? புது நடிகர்களால் கதை அந்நியப்படுமோ?
அப்படி நடக்காது. அனீஸ்ன்னு ஒரு பையன். சினிமா தெரிந்தவன். ஸ்ருதின்னு ஒரு பொண்ணு.. சில சினிமாக்களில் நடித்துவருகிறார். எது வேண்டுமோ அதையே செய்து கொடுத்தாங்க.
நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை எடுக்கும்போது என்னிடம் அதிகமான எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. அதனால் பெரிய நட்சத்திரங்களும் தேவைப்படலை. ஜேம்ஸ்வசந்தன், நா.முத்துக்குமார், யுகபாரதி, கேமராவுக்கு துவாரகநாத்ன்னு எல்லோரும்தான் இதுக்கு பக்க பலம்.
இது அரசியல் படமா?
நாம் எல்லோரும் ஏதோ ஓர் அரசியலுக்குள் சிக்கிக்கிட்டுதானே இருக்கோம்? வாழ்க்கையின் அத்தனை நிதர்சனங்களையும் ஆபாசங்களையும் உறுத்தாமல் சில நிஜங்களையும் முன் வைக்கும் முயற்சி இது.
இதில் இருக்கையின் நுனியில் தவிக்கவிடும் சஸ்பென்ஸýம் உண்டு. ரசிக்க வைக்கும் நகைச்சுவையும் உண்டு. ரசனையில் தேர்ந்த நம் தமிழ் ரசிகர்களுக்கு இது பிடிக்கும். பாபர் மசூதியின் இடிப்பு பின்னணிதானே தவிர, எதுவுமே உங்களுக்கு உறுத்தாது.
சில உண்மைகள், தீர்க்கமா இதில் இருக்கு அவ்வளவுதான். அது கதைக்கு ரொம்பவே தேவை. சில உண்மைகளை அப்பட்டமாகச் சொல்லும்போது அது சிலரைச் சுடும். அதைத் தவிர்ப்பது படைப்பு தர்மமாகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.