ஆ ருத்ரா தரிசனம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக இருந்தாலும், நீலகிரியிலிருக்கும் சிவன் கோவிலான ஸ்ரீ பவானீஸ்வரர் கோவிலில் பழங்குடிகளான தோடர் இனத்தாரால் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது இம்மாவட்டத்தின் கலாசாரத்திற்கே பெருமை சேர்க்கிறது.
ஆருத்ரா தரிசனம் நீலகிரி மாவட்டத்தில் புகழ் பெற்ற சிவன் தலங்களில் அதிகளவில் இல்லையென்றாலும், உதகை அருகேயுள்ள பெர்ன்ஹில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பவானீஸ்வரர் கோவிலிலும், காந்தல் பகுதியில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி மடாலயத்திலும் இவ்விழா சிறப்பாக நடக்கின்றன.
பவானீஸ்வரர் கோவிலின் ஆருத்ரா தரிசனத்திற்காக அவர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பெர்ன்ஹில் பகுதியிலிருந்து பவானீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, உதகை நகரிலுள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அதன்பின் பவானீஸ்வரை நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலுக்குக் கொண்டு செல்வர். வழியெங்கும் தோடர்கள் தங்களது பாரம்பரிய உடைகளோடும், வாத்தியங்களோடும் இசை நடனத்துடன் பவானீஸ்வரரை ஊர்வலமாகக் கொண்டு செல்லும் அழகைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் குவிந்து விடுவர்.
பவானீஸ்வரர் கோவில் அமைந்துள்ள இடம், பவானி நதி உற்பத்தியாகுமிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதனாலேயே இங்குள்ள மூலவர் பவானீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இக்கோவிலுக்கு அப்போதைய மைசூர் மகாராஜாவான ஜெய்சாம்ராஜ் உடையார் தினந்தோறும் வந்து சென்றதால் அவரது உதவியுடன் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 1993}ம் ஆண்டிலிருந்து எஸ்.காந்தராஜ் இக்கோவிலின் பரம்பரை அறங்காவலராக செயல்பட்டு வருகிறார்.
""உதகையிலுள்ள பவானீஸ்வரர் கோவில் கடந்த 120 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு தற்போது 98 ஆண்டுகளாகின்றன. இக்கோவிலின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2012}ம் ஆண்டில் நடைபெறும். சிதம்பரத்தில் நடப்பதைப் போலவே இக்கோவிலிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடத்தப்படும். இதைத்தவிர கார்த்திகை, சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தினசரி பூஜை வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன'' என்றார் காந்தராஜ்.
தோடர் இனத் தலைவர்களில் ஒருவரான சத்தியராஜ், ""கோவிலின் முக்கிய நிகழ்ச்சிகளை கடந்த 30 வருடங்களாக நாங்கள் நடத்தி வருகிறோம். எங்களது வழக்கமான வழிபாட்டு முறைகளிலிருந்து வேறுபட்டு இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம். கோவிலிலிருந்து நகருக்குள் பவானீஸ்வரரை வீதி வலம் வரவைத்து ஆடல்,பாடல் நிகழ்ச்சிகளோடு மீண்டும் கோவிலுக்குக் கொண்டு செல்கிறோம். இதில் எங்கள் இனத்தின் 15 "மந்து'களில் வசிக்கும் அனைவருமே பங்கேற்பர். இக்கோவிலில் குழந்தைகளுக்கு முடி எடுத்தல், காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளையும் நாங்கள் நடத்துகிறோம்.
பவானி நதி கூட தனது பயணத்தை இங்கிருந்துதான் தொடங்குவதாக ஓர் ஐதீகம் உண்டு. இத்தனைப் புனிதமான தலம் என்பதால்தான், மகாத்மா காந்தியின் அஸ்தி நாட்டில் கரைக்கப்பட்ட சில இடங்களில் பவானி நதியும் ஒன்று என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறது'' என்றார்.!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.