அணில் மீன்
மன்னார் வளைகுடாவில் உள்ள அரியவகை கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று அணில் மீன். கடலில் பவளப்பாறைகள் உள்ள பகுதிகளில் கூட்டம், கூட்டமாகக் காணப்படும் இவற்றின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரு
மன்னார் வளைகுடாவில் உள்ள அரியவகை கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று அணில் மீன். கடலில் பவளப்பாறைகள் உள்ள பகுதிகளில் கூட்டம், கூட்டமாகக் காணப்படும் இவற்றின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையில் பணியாற்றும் பல்லுயிர் பரவல் திட்ட அதிகாரி டாக்டர்.டி.அன்பழகன் கூறியது.
""காப்பி நிறம் கலந்த சிவப்பு நிறத்திலும் வெள்ளை கலந்த வெள்ளி நிறத்திலும் காணப்படும் இவ்வகை மீன்களின் உடலில் 6 முதல் 7 கோடுகள் வரை உள்ளன.
ஹாலோ சென்ரிடே வகை குடும்பத்தில் சார்கோசென்ட்ரான் என்ற பேரினத்தைச் சேர்ந்த மீன்களைத் தான் அணில் மீன் என்கிறார்கள். அணில் மீது இருக்கும் கோடுகளைப் போலவே இம்மீன்களுக்கும் இருப்பதால் இவை அணில் மீன்கள் என்றே அழைக்கப்படுகின்றன.
Advertisement
இவை பெரும்பாலும் பவளப்பாறைகள் மற்றும் பாறைகள் அதிகம் உள்ள அதே இடத்தில் ஆழம் குறைவான பகுதிகளில் கூட்டம், கூட்டமாகச் சுற்றுவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இதனுடைய செதிலும், உடலின் மேலும் கீழும் உள்ள இறக்கைகளும் மிகவும் கடினமானதாகவும் கூர்மையாகவும் இருக்கின்றன. செதிலுக்கு மேல் உள்ள இரு முட்களும் விஷத்தன்மை உடையதாகவும் உள்ளது. பகல் நேரங்களில் பவளப்பாறைகளுக்கு அடியில் மறைவான பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டு இரவில் மட்டுமே உணவைத் தேடிச் செல்கின்றன.
சிறு மீன் குஞ்சுகள், சின்னஞ்சிறிய நண்டுகள், இறால்கள், கணுக்காலிகள் போன்றவையே இதன் விருப்ப உணவு. இவ்வினங்களில் சிலவற்றை உணவிற்காகவும், வேறு சிலவற்றை அலங்கார மீன் வளர்ப்புக்காகவும் பயன்படுத்துகிறார்கள்.
பெரும்பாலும் சிறு அணில் மீன்களையே அலங்கார மீன் வளர்ப்புக்குப் பயன்படுத்துகின்றனர். சுமார் 15 செ.மீ முதல் 25 செ.மீ வரை வளரும். ஸ்பெனிரம் என்ற இனம் 50செ.மீ வரை கூட வளர்வதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இம்மீன்கள் குறைந்தது ஒரு லட்சம் முதல் 6 லட்சம் முட்டைகள் வரை இடுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வினங்களில் 35 வகையான சிற்றினங்கள் உள்ளன.
இனப்பெருக்கத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் இம்மீன்கள் ஒருவிதமான ஒலியை ஏற்படுத்துவது இதன் சிறப்பாகும். இவை எழுப்பும் ஒலியால் எதிரி மீன்கள் பயந்து ஓடி விடும்.
இதன் உடலின் உள்ள சிறுதசையின் உந்துதலால் காற்றுப்பையினுள் ஒருவித அதிர்வை ஏற்படுத்தி அதன் மூலம் ஒலியை எழுப்புகிறது''
என்றார்.