மலை மாவட்டமான நீலகிரியில் ஆச்சரியமளிக்கும் தகவல்களுக்குப் பஞ்சமே இல்லை. அதில் ஆச்சரியமுடன் மக்களின் பல்வேறு வகையான ஊகங்களுக்கும் விளக்கமளிக்க முடியாதவையாக இருப்பவை, இம்மலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சுரங்கங்கள்!
கேரள மாநிலத்தில் பத்மநாப சுவாமி ஆலயத்தில் அண்மையில் நடைபெற்ற சோதனைகளில் பாதாள அறைகள் திறக்கப்பட்டதும், அவற்றில் கோடிக்கணக்கான தங்க, வைர, வைடூரியங்கள் புதைந்து கிடந்தது வெளிச்சத்துக்கு
வந்தது.
அதேபோன்று, மலை மாவட்டமான நீலகிரியில் பல்வேறு பகுதிகளில் குகைகளும், சுரங்கப் பாதைகளும் காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முந்தைய காலத்தில் மன்னர்களும், மகாராஜாக்களும், பிரபுக்களும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது கோடை வாசஸ்தலங்களை அமைத்திருந்தனர். குட்டி அரண்மனையாகச் செயல்பட்ட இந்தத் தங்குமிடங்களில் இன்னமும் சுரங்கப் பாதைகளும், குகைகளும் உள்ளன.
உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளிலுள்ள பல்வேறு பழங்கால அரண்மனைகளில் உள்ள இந்தப் பாதாள அறைகள் இன்னமும் பூட்டப்பட்டுள்ளன.
உதகையிலுள்ள மைசூர் மகாராஜாவுக்குச் சொந்தமான அரண்மனையின் வெளிப்புறத்தில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு அப்பால் சாலையோரத்தில் ஒரு சுரங்கப்பாதை செல்கிறது. இதன் வழியாக உள்ளே நுழைவது கடினம், ஆபத்தானதும் கூட என்பதால் இந்தச் சுரங்கப்பாதையின் வெளிப்பக்க வழி தற்போது அடைக்கப்பட்டுள்ளது.
"உள்ளத்தை அள்ளித்தா', உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் இடம் பெற்றுள்ள மற்றொரு சுரங்கப்பாதை உதகையிலுள்ள தமிழக அரசின் விருந்தினர் மாளிகையில் உள்ளது.
ஜோத்பூர் மகாராஜாவுக்குச் சொந்தமான இந்த மாளிகையில் உள்ள சுரங்கப்பாதை, மன்னர் மாளிகையிலிருந்து ரகசிய வழியாக மகாராணி மாளிகைக்குச் செல்வதாகும்.
இதுபோன்ற சுரங்கப் பாதைகளுக்கும், குகைகளுக்கும் நீலகிரி மலையில் பெயர் பெற்ற ஒருவர் உண்டென்றால் அது திப்பு சுல்தானாகத்தான் இருக்கமுடியும். இன்னமும் ஏக்குணி பகுதியிலிருந்து மசினகுடி வரையில் மலைப்பகுதியில் பல சுரங்கப் பாதைகளைத் திப்பு பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
குன்னூரிலுள்ள டிரூக் மலைப்பகுதியில் பகாசூரன் கோட்டை எனப்படும் கோட்டை உள்ளது. இந்த இடத்திலிருந்து மேட்டுப்பாளையத்திற்குச் சுரங்கப்பாதை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இங்குள்ள குகையின் முகப்பில் உள்ள ஒரு பழங்கால இரும்புச் சங்கிலியை இழுத்தால் அது நீண்டு கொண்டே வருமெனவும், ஆனால், பாதியில் விட்டு விட்டால் அந்தச் சங்கிலி இழுப்பவரையும் பாதாளத்திற்குள் இழுத்துவிடும் எனவும் கூறப்படுவதால், அதற்கான முயற்சிகளில் யாரும் ஈடுபடுவதில்லை. மேலும் இந்தக் குகைக்குள் திப்பு சுல்தான் சேமித்து வைத்துள்ள பல பொருட்கள் இருப்பதாகவும், ஆனால், அந்தக் குகைக்குள் நுழைய யாரும் தயாரில்லாததாலேயே இந்த முயற்சி பாதியில் நின்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கருகில் ஹஜ்ரத் சையத் ஹசன் ஷாபா காதிரி தர்காவின் மறு பகுதியில் புலிக்குகை என்ற பகுதி உள்ளது. இங்குள்ள அந்தக் குகையில் அந்த காதிரி வசித்து வந்ததாகவும் அந்தக் குகைக்குள் அவருடன் ஒரு புலியும் வசித்து வந்ததாகவும், அவர் இறந்த பின்னர் அந்தக் குகையின் எதிரிலேயே தவமிருந்து, அந்தப் புலியும் இறந்துவிட்டதாகவும் நீலகிரி மாவட்டத்தில் கூறப்படுகிறது. அதனாலேயே இன்னமும் இப்பகுதி "டைகர் ஹில்' என்றே அழைக்கப்
படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியையும் சேர்த்து ஆட்சி செய்து வந்த ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள் பயன்படுத்திய ஒரு சுரங்கப் பாதை உதகையில் வேலிவியூ பகுதியில் உள்ளதாகவும், அந்த சுரங்கப் பாதைக்குள் வெளிச்சத்திற்காகவும், காற்றோட்டத்திற்காகவும் தரையிலிருந்து சுமார் 50 மீட்டர் உயரத்தில் ஒரு ஜன்னல் வெட்டி வைக்கப்பட்டுள்ளதையும் இங்குள்ள மக்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போது இந்தக் குகைகள் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பல சுரங்கப் பாதைகளும், குகைகளும் நீலகிரியில் கோவிலாக மாறியுள்ளன. உதகையில் எல்க்ஹில் பகுதியிலுள்ள விநாயகர் கோவிலுக்குப் பின்புறம் செல்லும் சுரங்கப் பாதை எங்கு செல்கிறது என்பது யாருக்கும் தெரியாது. வேலிவியூ பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ள பகுதியும் சுரங்கப் பாதையாகும். அதைத்தவிர சாலையோரத்தில் அமைந்துள்ள ராஜ ராஜேஸ்வரி கோவிலுக்கு அருகிலும் உள்ள சுரங்கப் பாதை பாதி மூடப்பட்டுள்ள நிலையில் காட்சியளிக்கிறது.
இவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருந்தாலும், அவற்றைக் குறித்து முழுமையான ஆராய்ச்சிகளோ அல்லது தெளிவான தகவல்களோ ஏதுமில்லை. அதனால், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணப்படும் இதுபோன்ற சுரங்கப் பாதைகளையும், குகைகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென்பது இங்குள்ள வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கையாகும்.
இவற்றோடு நீலகிரி மலை ரயில் பாதையில் காணப்படும் ஏராளமான குகைகளும், சுரங்கங்களும், பைக்காரா நீர்மின் திட்டத்திற்காக வெட்டப்பட்டுள்ள ராட்சத சுரங்கப் பாதையும் இம்மலை மாவட்டத்திற்கும் சுரங்கங்களுக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.