புதுசா அச்சு அசலா ஒரு வாழ்க்கையை சொன்ன படம் "களவாணி'. ரொம்ப மரியாதையான வெற்றி. ஊர், உலகமே தலையில் தூக்கி வெச்சு கொண்டாடினாங்க. "கிராமத்துல இத்தனை அழகா ஒரு வாழ்வு இப்ப இருக்குமா?'ன்னு நிறையப் பேர் விசாரிச்சாங்க. இன்னும் ஆச்சர்யங்கள் நிறைந்த வாழ்க்கை கிராமத்தில் கொட்டிக் கிடக்கு. அடுத்த படத்தில் பாருங்கன்னு அப்பவே அவர்களுக்கு சர்ப்ரைஸ் தந்தேன். அந்த வார்த்தை இப்போ அப்படியே உண்மையாகியிருக்கு. நிச்சயம் கௌரவம் தருவீங்க''- நிதானமான குரலில் பேசுகிறார் இயக்குநர் சற்குணம். "வாகை சூட வா' படத்தின் மூலம் அடுத்த அடி எடுத்து வைக்கிறார்.
முதல் படைப்பு தந்த வெற்றி தலைக்கனத்தைக் கொண்டு வரும். பார்த்துக்கலாம் எதை செய்தாலும் இவர்கள் ஆதரவு தருவாங்கன்னு தோணும். இப்படி எதையும் நான் தலையில் ஏத்திக்காம, செய்து முடித்த கதைதான் இது. அதே நேரத்தில் முதல் படத்தின் சாயல் நிச்சயம் இதில் இருக்க கூடாதுன்னு மட்டும் ஒரு நூல் பிடிச்சு எழுதினேன். பீரியட் ஃபிலிம் மட்டும்தான் சரியா வரும்ன்னு தோணுச்சு. 1966-ல் நடக்கிற மாதிரி ஒரு கதை. எவ்வளவு அற்புதமான வாழ்வு, உறவுகள் எல்லாத்தையும் இழந்து வந்திருக்கோம்ன்னு நினைக்கும்போது கவலை வருது.
தன் அப்பன் பிறந்து வளர்ந்த கிராமத்தைப் போய் பார்த்துட்டு வருவதற்குக்கூட எந்த மகனுக்கும் நேரம் இல்லை. கிராமத்து வாழ்க்கை அனுபவிக்க, அதை சுவாசிக்க இளம் தலைமுறை தயாரா இல்லை. அதை அந்த இளைப்பாறுதலை இந்தப்படம் நிச்சயம் தரும்ன்னு நம்பிக்கை மட்டும் பிறந்திருக்கு. தன் மடியில் வளர்ந்தவங்க நிச்சயம் இங்கு வந்து இளைப்பாறுவாங்கன்னு ஏங்கி நிற்கிற கிராமங்களின் கதையை இந்தப் படத்தில் காட்டப் போகிறேன்.
கிராமத்துப் பின்னணியில் ப்ரீயட் ஃபிலிம் செய்வது கஷ்டமாச்சே?
காதல்தான் களம். அதன் பின்னணியில்தான் சுவாரஸ்யம் இருக்கு. நம்மோட நிறைய பழக்கவழக்கங்கள் இன்னைக்கு மறந்து போச்சு. எவ்வளவு திருவிழாக்கள், சடங்குகள் என அனைத்தையும் இழந்து நிற்கிறோம். கொடி மாலை போட்டு பிறந்த குழந்தையின் முகத்தை எண்ணெயில்தான் பார்க்கும் மாமன்... மழை நேரத்தில் குளத்தில் உள்ள பனை மரத்தில் ஏறும் சன்னை மீன்கள்... கூண்டுக்குள் கோழி வைத்து நரி பிடிக்கிற வைத்தியர்ன்னு எதையும் இப்போதைய தலைமுறை பார்த்திருக்காது. அதை நான் காட்டுறேன்.
அநியாயத்துக்கு வெட்கப்பட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் மாப்பிள்ளையின் இலையை நூல் கட்டி இழுத்து விளையாடும் மச்சினிச்சிகள். பனை ஒலையில் காத்தாடி செய்து விளையாடும் சிறுவர்கள். கழுதையில் பொதி சுமந்து உப்பு விற்கிற வியாபாரிகள். திருவிழாக்களில் மட்டுமே நடக்கும் ஊர்ச் சண்டைகள். தாவணி கட்டிய இளம் பெண்கள். மாராப்பு இல்லாத கிழவிகள். எப்போதாவது சுடப்படும் மண் பானை இட்லி.
கலவரமாகும் கள்ளுக்கடை. டீக்கடை பேச்சுக்கள். நள்ளிரவு கோடாங்கி என சீனுக்கு சீன் சுவாரஸ்யம் இருக்கு. இழந்து போன தமிழ் அடையாளங்களைப் பாடம் மாதிரி சொல்லப் போறேன். நிறைய சிரமம் இருந்துச்சு. எல்லாவற்றையும் கலைச்சு போட்ட ஆர்வம் அதை இப்ப சாத்தியமாக்கிருச்சு.
விமலுக்கு "களவாணி' நல்ல ஸ்கோப் தந்த கதை. இது என்ன கதை?
விமலுக்கு எப்பவும் என் கதையில் ஒரு சேலஞ்ச் இருக்கும். இதுவும் அப்படித்தான். "களவாணி' விமலை அப்படியே மாற்றுவதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. கதையைச் சொன்னதும் அது உள்ளே போய் உட்கார்ந்து கொள்கிற பக்குவம் அவருக்கு நிறைய இருக்கு. 1960-களில் உலவிய கிராமத்து இளைஞனாக விமலை அப்படியே மாத்திட்டேன். அரிசியை மையாக்கி கலர் கலந்து பொட்டாக்கி விற்பது, டீக்கடை வெச்சு கருப்பட்டி பாலில் டீ போட்டு, ரெண்டு காசு டீ.. மூணு காசு டீ...ன்னு சொல்லி விக்கும் கதாநாயகிக்கும், பி.யூ.சி முடிச்சிட்டு வாத்தியார் வேலைக்குத்தான் போவேன்னு சொல்லித் திரியும் கதாநாயகனுக்கும் இருக்கிற காதல்.
இந்த காலத்து நாகரீகங்கள் எதுவுமே கதைக்குள் வந்து விடக்கூடாதுன்னு ரொம்ப ஜாக்கிரதையாக இருந்தேன். படபடன்னு ஒரு கிராமத்தைப் பிடிச்சு படப்பிடிப்பு நடத்த முடியலை. அதனால் அருப்புக்கோட்டை பக்கத்துல கண்டெடுத்தான் காடுன்னு ஒரு கிராமத்தையே உருவாக்கி விட்டோம்.
ஹீரோயினாக கேரளப் பொண்ணு இனியா. நல்ல அழகு. அதோடு தமிழும் நல்லா பேசினாங்க. உடனே கூட்டி வந்துட்டேன். இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எல்லோருமே என் நீண்ட கால நண்பர்கள். அடையாளங்களை மீட்டெடுத்து பாடல் புனைந்திருக்கிறார் வைரமுத்து. அவரின் வரிகளால் படமும் ரசனையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.