திரை இசையைப் பி.பி.எஸ். இல்லாமல் பார்க்க முடியாது. "மயக்கமா கலக்கமா...', "நிலவே என்னிடம் நெருங்காதே...', "ரோஜா மலரே ராஜகுமாரி...', "காலங்களில் அவள் வசந்தம்....', "தாமரை கன்னங்கள்....' இப்படி எத்தனை எத்தனையோ பாடல்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என எல்லா ஸ்டார்களுக்கும் கனிந்து குரல் கொடுத்தவர்.
40 வருடங்களாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வருபவர். முன்பு டிரைவ் இன் ஹோட்டலில் எல்லோரிடமும் இயல்பாகப் பேசிக் கொண்டிருப்பார். இப்போது டிரைவ் இன் இல்லை.
அங்கே பி.பி.ஸ்ரீனிவாஸூம் இல்லை. எங்கே இருக்கிறார்.. எப்படி இருக்கிறார்? எனத் தெரிந்து கொள்ள ஆசை. விசாரித்தால் சென்னை ராதா கிருஷ்ணன் சாலை நியூ உட்லண்டஸ் ஹோட்டலுக்கு மாலை நேரங்களில் காபி சாப்பிட வருவார் என்று கிடைத்தது தகவல். காத்திருந்து கை குலுக்கினால். மெல்லிதாகப் புன்னகைக்கிறார்.
"தினமணி' என்றதும் இன்னும் விரல் அழுத்தித் தழுவுகிறார்.
ஒரு பேட்டி என்றதும், ""கேள்விகள் ரெடியா?'' எனத் தயாரானார்.
எப்படி இருக்கிறீர்கள்?
ரொம்பவும் பாதுகாப்பாகவே இருக்கிறேன். கடவுளின் அனுக்கிரகமும் ரசிகர்களின் பிரியமும்தான் என்னை இன்னும் நலமாக வைத்திருப்பதாக நினைக்கிறேன். உடலுக்கு வயதாகி விட்டாலும், மனது இன்னும் இளமையாக இருக்கிறது. 22 வயதில் இந்த சினிமாவுக்கு வந்து, பல ஆயிரம் பாடல்கள் பாடி, தமிழர்களின் ஒவ்வொரு நிமிஷத்திலும் கலந்து... நினைத்துப் பார்த்தால் திருப்தியான வாழ்க்கை. பெரிய காலம் என்னுடையது. இதையெல்லாம் சொல்லப் பெருமையாக இருக்கிறது. இந்தப் பெரிய தேசத்தில் பெருவாரியான மக்களின் அன்பில் நனைந்திருக்கிறேன். அந்த அன்புதான் இப்போதும் என் வாழ்வை அழகாக்கி வைத்திருக்கிறது. எல்லோரையும் அன்பு செலுத்தி, அரவணைக்க ஆசையாக இருக்கிறேன். எல்லோரின் வாழ்வுக்காகவும் பிரார்த்திக்கிறேன். எல்லோரும் நலம் வாழ நான் பாடிய பாடல்கள் துணையாக வரும் என்ற பெரும் நம்பிக்கையுடன் உலாவுகிறேன்.
விருதுகள் அறிவிக்கப்படும்போது சர்ச்சைகளும் கூடவே வருகின்றன. உங்களை அங்கீகரிக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
நிறைய கஷ்டப்பட்டிருக்கிறோம். இப்போது உள்ள டெக்னாலஜி அப்போது இல்லை. ஒரு பாடலைப் பதிவு செய்ய பெரிய கூட்டு முயற்சியே நடக்கும். இப்போது எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. இசை ஓரிடத்திலும் குரல் வேறிடத்திலும் பதிவு செய்யப்படுகிறது. இசையமைப்பாளனும் பாடகனும் சந்திப்பதே இல்லை. எனக்கு இதெல்லாம் பார்க்கும் போது ஆச்சரியம் வருகிறது. தலைமுறைகள் மாறிவிட்டன.
அவரவர்களுக்கு ஆயிரம் வேலை. இதில் நான் அங்கீகரிக்கப்படவில்லை என்பதில் வருத்தம் இல்லை. எல்லாம் இறை செயல். எது நடக்குமோ, அது நடந்தே தீரும். நீ சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் உன் பெயர் எழுதியிருக்கு. இதை யாராவது மாற்ற முடியுமா? ஆனால் ஒரு படைப்பாளி காலங்கள் கடந்து நிற்க அங்கீகாரம் அவசியம்.
அது எனக்குக் கிடைக்கவில்லை என்றாலும் நான் மறக்கடிக்கப்பட மாட்டேன். உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு...!
எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பெரிய அங்கீகாரம் இல்லை என எல்லோருக்கும் வருத்தம் இருக்கிறதே?
அவருக்கு அங்கீகாரமும் விருதுகளும் கிடைத்தால் சந்தோஷப்படுகிற முதல் ஆள் நான்தான். ஆனால் அவருக்கு அதெல்லாம் இல்லை என்பதில் எனக்கு மட்டுமே அதிக வருத்தம்.
அவரைக் கூட இருந்து பார்த்தவன், ரசித்தவன் என்ற முறையில் இன்னும் எனக்கு அதிக வருத்தம். ஆனால் அவரைப் பாருங்கள்... விழாக்களில் முதல் ஆளாகக் கலந்து கொள்கிறார். எதையும் எதிர்பாராமல் வாழ்கிறார். அவரிடம் இளம் தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன.
கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் கௌரவிக்காத தேசம் சீக்கிரமாகவே வீழும். தமிழ் இசைக்கு ஒரு புதிய பாதையை அமைத்து கொடுத்தது எம்.எஸ்.வி.தான். அவரை மறந்தால் இந்த வாழ்வு நம்மைப் பழிக்கும்.
மலேசியா வாசுதேவனின் மரணம்?
வாசுதேவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன். அவன் நல்ல பாடகன். தனக்கென ஒரு பாதை போட்டு பயணித்தவன். எதைப் பற்றியும் கவலைப்படாதவன். நிறைய நண்பர்கள் அவனுக்கு இருந்தார்கள். இருந்தும் கடைசிக் காலத்தில் அவன் பெரிதும் கஷ்டப்பட்டதாகச் சொன்னார்கள். அதில் எனக்கு பெரிய வருத்தம். எல்லோரையும் மகிழ்வித்த கலைஞனை மறந்துவிட்டோம்.
நிறைவேறாத ஆசை ஏதாவது?
பெரிய பெரிய ஆள்களிடம் நான் பாராட்டுக்களை வாங்கிவிட்டேன். அதுவே கடைசிக் காலம் வரைக்கும் என்னை இட்டுச் செல்லும். வாழ்க்கையின் லட்சியமே சினிமாவில் பாடுவதுதான். ஆனால் அது என் குடும்பத்தாருக்குப் பிடிக்கவில்லை. நான் வக்கீல் ஆக ஆசைப்பட்டார்கள்.
அவர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம் இருக்கிறது. எந்தக் கலைஞனும் தன் குரல் சிதைக்கப்படுவதை விரும்பமாட்டான். ரீமிக்ஸ் செய்து எதையும் கெடுத்து விடாதீர்கள். எங்கள் பாடல்களில் தமிழர் வாழ்வின் பழங்காலம் இருக்கிறது.
அவற்றை ஆவணப்படுத்துங்கள். இன்னும் எத்தனையோ தமிழர் தலைமுறைகளுக்கு என் குரல் அமைதியும் உற்சாகமும் தரட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.