முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நல்ல காலம் பிறக்கும்!

வாலிபால்,  கால்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுக்களில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் காட்டி விருதுநகர் ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவி இ.கருப்பாயி தமிழக

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:50 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 10:28 PM

வாலிபால்,  கால்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுக்களில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் காட்டி விருதுநகர் ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவி இ.கருப்பாயி தமிழக அணிக்காக விளையாடி பள்ளிக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவருடைய தந்தை ஒரு குடுகுடுப்பைக்காரர். கருப்பாயியிடம் அவருடைய வெற்றியின் ரகசியம் குறித்து கேட்டபோது:

இந்த விளையாட்டில் எப்படி ஆர்வம் வந்தது?

நான் இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். அதற்குமுன்பு படித்த பள்ளியில் பல ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசு வாங்கியுள்ளேன். பள்ளியில் மற்ற பெண்கள் ஹாக்கி பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்த்த எனக்கு அந்த விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பயிற்சியாளர் இந்திரா எனக்கு ஹாக்கி விளையாட்டில் பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.

Advertisement



மற்ற விளையாட்டுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

விளையாட்டு என்றால் அனைத்து விளையாட்டிலும் ஒரு தனித்தன்மை இருக்கும். ஹாக்கி விளையாட்டில் மட்டையால் பந்தைக் கொண்டுசெல்ல வேண்டும். எதிரணி கையில் பந்து போகாமல் பார்த்துக் கொள்ளும் லாகவம் அதனைக் கோலுக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு இரண்டும் சேர்ந்து கொள்ளும். வேகமாக ஓடிக் கொண்டே பந்தை நம் வசமாக்கி கோலுக்கு நகர்த்துவது சவாலான வேலை.

அந்தப் பரபரப்பில் நம் அணியில் உள்ள மற்றவருக்குச் சரியான நேரத்தில் பந்தை திருப்பி அனுப்பி இலக்குக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டியிருக்கும். களத்தில் இறங்கிய மறுகணத்தில் இருந்து அனைவரும் ஒரு குழுவாக - அதாவது - எல்லோரும் சேர்ந்து ஒருவராக மாறி விளையாட வேண்டிய விளையாட்டு இது. எனவே ஹாக்கி கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டிய விளையாட்டாகும்.

முதல்முதலில் எப்போது போட்டியில் கலந்து கொண்டீர்கள்?

நான் எட்டாம் வகுப்பு படித்தபோது சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான, பள்ளிகளுக்கிடையிலான போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் எங்கள் பள்ளி அணி விளையாடியது. அந்த அணியில் உள்ள 16 பேரில் நானும் ஒருத்தியாக இருந்தேன். அந்தப் போட்டியில் எங்கள் பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது. அதனால் ஹாக்கி மீது எனக்கு மேலும் ஆர்வம் ஏற்பட்டது. அதில் உள்ள நுட்பங்களைத் தெரிந்து கொண்டேன்.

எந்தெந்தப் போட்டிகளில் கலந்து கொண்டீர்கள்?

நான் ஒன்பதாவது படிக்கும்போது மண்டல அளவிலான பள்ளிகளுக்கு இடையில் தேவகோட்டையில் நடைபெற்ற போட்டியில் நான் கலந்து கொண்ட எங்கள் பள்ளி அணி முதலிடம் பெற்றது. பின்னர் காரைக்குடியில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில் எங்கள் பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது.

 நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான 17 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான போட்டியில் கலந்து கொண்டேன். 2010-2011-ம் கல்வி ஆண்டில் மண்டல அளவில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற போட்டியில் பள்ளி அணி முதலிடம் பெற்றது. வேலூரில் நடைபெற்ற பாரதியார் தினப் போட்டியில் பள்ளி அணி இரண்டாமிடம்

பெற்றது.

தேசிய அளவிலான போட்டியில் எப்போது கலந்து கொண்டீர்கள்?

2009-ம் ஆண்டு எஸ்.ஜி.எப்.ஐ. சார்பில் அரியலூரில் தமிழ்நாடு ஹாக்கி அணிக்குத் தேர்வு நடைபெற்றது. அதில் எங்கள் பள்ளியிலிருந்து நான், முத்துரஞ்சிதா, மகேஸ்வரி, சௌந்திரிய பிரியதர்ஷினி ஆகிய நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டோம். இதையடுத்து நாங்கள் பஞ்சாப் ஜலந்தரில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டோம். பரிசு எதுவும் வாங்கவில்லை.

2010-ம் ஆண்டு தமிழ்நாடு அணிக்கு அரியலூரில் தேர்வு நடைபெற்றது. அதில் எங்கள் பள்ளியிலிருந்து நான் மட்டுமே தேர்வு செய்யப்பட்டேன். பின்னர் தமிழக அணி மத்தியப்பிரதேசத்தில் உள்ள கார்கோ என்ற ஊரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் விளையாடி ஐந்தாமிடம் பெற்றது. இனிமேல் நடைபெறும் போட்டிகளில் தமிழகத்துக்காக விளையாடி முதல் பரிசை வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு

உள்ளது.

உங்களுக்குக் கிடைக்கும் ஒத்துழைப்பு பற்றி...?

எனக்கு சொந்த ஊர் மதுரை. எனது தந்தை பி.இசக்கி. தாய் முத்துமாரி. ஏழையான நான் விருதுநகரில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறேன். வெற்றிக்கு ஏழ்மை ஒரு தடையாக இல்லை என நான் நினைக்கிறேன். திடமான நம்பிக்கையும், தெளிவான இலக்கும் இருந்தால் வெற்றி பெறலாம் என்பது எனது கருத்தாகும்.

என் தலைமை ஆசிரியர் ஆதரவு என் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. நான் வெளியூர் சென்று விளையாட ஆகும் செலவுகளைப் பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுவிடுவதால் எனக்கு மேலும் விளையாடி வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற எண்ணமே உள்ளது.



உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

படித்து ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது விருப்பம். விளையாட்டில் இந்திய அணிக்காக வெளிநாடு சென்று விளையாடி வெற்றி பெற வேண்டும் என்பதே எனது லட்சியமாகும்.

ஊருக்கெல்லாம் நல்லகாலம் பிறப்பதைச் சொல்லுபவரின் மகளுக்கு நல்லகாலம் பிறக்க  வாழ்த்திவிட்டு வந்தோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.