தமிழகத்தில் இயங்கிவரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அனைத்துமே சிறப்பாக செயல்படுவதாகக் கூறப்படுவதுண்டு. ஆனால், தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் மகளிர் மற்றும் ஆடவர் சுயஉதவிக் குழுவினர் மருத்துவ மூலிகைகள் உற்பத்தியில் ஒரு புரட்சியையே செய்து வருகின்றனர் என்றால் அது மிகையாகாது.
மலேரியா காய்ச்சலுக்கு மருந்து தயாரிக்க உருவாக்கப்பட்ட சின்கோனா தொழிற்சாலைகள் நீலகிரி மாவட்டத்தில் மூடப்பட்டதும், அத்துறையிலிருந்த பலர் வனத்துறைக்கு மாற்றலாகினர். ஆனால், இதில் பாதிக்கப்பட்ட சிலரோ செய்வதறியாமல் திகைத்தபோது கடந்த 1994-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதுதான் தொட்டபெட்டா மூலிகைப் பண்ணை.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 195 ஏக்கர் நிலப்பரப்பில் தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு அருகில் இப்பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் 150 ரகங்களிலான மூலிகைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. ஒற்றைத் தலைவலிக்கான உடனடி நிவாரணியிலிருந்து புற்றுநோய் வரை பல்வேறு வகையான பிரச்னைகளுக்கும் மருந்து தயாரிக்கப் பயன்படும் மூலிகைகள் இம்மையத்தில் உள்ளன.
அதேபோல, கற்பூர தைலம், யூகலிப்டஸ் தைலம், ஜெரேனியம், மூட்டு வலிக்கு மருந்தாகப் பயன்படும் தைலம், கூந்தல் செழித்து வளர்வதற்கான தைலம், புத்துணர்வுக்கான தைலம் எனப் பல்வேறு மூலிகை தைலங்கள் இப்பண்ணையிலுள்ள மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இம்மையத்தில் தற்போது 60 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் சம்பளத்திற்காக மட்டுமே வேலை செய்யவில்லை. 5 மகளிர் சுயஉதவிக் குழுக்களாகவும், ஓர் ஆடவர் சுய உதவிக்
குழுவாகவும் பிரிந்து செயலாற்றுவதால் கிடைக்கும் லாபத்தில் பங்குதாரர்களாகவும் உள்ளனர். அதனால் அவர்கள் தங்கள் முழுத் திறமையையும் காட்டுகின்றனர்.
வனத்துறையினருடன் சேர்ந்து வனத்தைப் பாதுகாக்கும் பணியிலும், மூலிகைகளை உற்பத்தி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ள அவர்களது ஆண்டு வருவாய் எவ்வளவு தெரியுமா? குறைந்தது ரூ.60 லட்சமாகும்.
இந்த மூலிகை மையத்தைக் குறித்து அதன் வழிகாட்டுநரான கே.உதயகுமார் நம்மிடம் தெரிவித்ததாவது:
""தொட்டபெட்டாவிலுள்ள மூலிகைப் பண்ணை நாட்டிலேயே சிறப்பாகச் செயல்படும் அரசு மூலிகைப் பண்ணைகளில் ஒன்று எனக் குறிப்பிடலாம். இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் தைலம் தொண்டை வலிக்கும், கல்தேரியா மூட்டு வலிக்கும் மருந்தாகப் பயன்படுகின்றது. மேலும், சினரேரியா போன்ற கண் தொடர்பான நோய்களுக்கும், டிஜிட்டாலிஸ் இதய நோய்க்கும் மருந்து தயாரிக்கவும், பயன்படுகிறது. இங்கு வளர்க்கப்படும் மூலிகைகள் பற்பசை தயாரிப்பு நிறுவனங்களுக்கும், லெமன் வர்டினா வயிற்று உபாதைகளுக்கும், லெமன் கிராஸ் சோப்பு மற்றும் அழகு சாதன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பயன்படுகின்றன. மேலும், சேஜ் பிட்சா மற்றும் ஒயின் போன்றவற்றைத் தயாரிக்கவும், ஓரகானோ சிட்ரனெல்லா பூச்சி விரட்டியாகவும், பேராகன், லெமன் பாலம், பார்சிலி போன்றவை உணவுப் பொருள் தயாரிப்பிலும் முக்கிய பொருட்களாக
விளங்குகின்றன.
அதனால் நீலகிரியிலிருந்து இதை வாங்குவதற்கு மருந்து உற்பத்தி நிறுவனங்களும், அழகு சாதன தயாரிப்பு நிறுவனங்களும், உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. இம்மையத்தில் தற்போது 14 வகையான மருத்துவ மூலிகைகள் வணிக ரீதியாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் சில்வர் டாலர் மற்றும் சில்வர் பேபி போன்றவை வெளி அலங்காரங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நீலகிரி மாவட்ட வடக்கு வனக்கோட்டமும், ஹோப் என்ற தனியார் அமைப்பும் கூடுதலாக 9 உறுப்பினர்களைக் கொண்டு இம்மையத்தின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன'' என்றார்.
இந்த மூலிகை மையத்தின் செயல்பாடுகள் குறித்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் இராம.சுப்ரமணியன் கூறுகையில், ""தொட்டபெட்டா மூலிகைப் பண்ணை நாட்டிற்கே ஒரு முன் மாதிரி பண்ணையாக விளங்குகிறது.
இம்மையத்தில் உற்பத்தி செய்யப்படும் மூலிகை தைலங்கள் வெளியிடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், சுற்றுலாப் பயணிகளும் அந்த மூலிகைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றின் தயாரிப்புகளைக் குறித்தும் விரிவாக தெரிந்து கொள்ள தொட்டபெட்டா மலைச்சிகரப் பகுதியிலேயே ஒரு செயல் விளக்க அரங்கு மற்றும் விற்பனையகம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்டத்திலுள்ள முக்கிய மூலிகைகளைக் குறித்து அனைவருமே தெரிந்து கொள்ளும் வகையில் தொட்டபெட்டா மலைச்சிகரப் பகுதியில் ஒரு கண்ணாடி மாளிகை அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது'' எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் செயல்படும் மகளிர் மற்றும் ஆடவர் சுயஉதவிக் குழுவினர் பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளைக் காட்டி வளர்ச்சியடைந்திருந்தாலும், மருத்துவ மூலிகை வளர்ப்பில் தனிப்பட்ட சாதனைகளை நிகழ்த்திவரும் தொட்டபெட்டா மூலிகைப் பண்ணை கடுமையான உழைப்பாளிகளுக்கு ஓர் உதாரணமாகவே திகழ்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.