மகா அனுபவம் ஒரு மெகா அனுபவம்!
விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது "நாதஸ்வரம்' தொடரின் படப்பிடிப்பு. இத்தொடரில் மகாவாக வந்து ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் கீதாஞ்சலி. அவரைச
விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது "நாதஸ்வரம்' தொடரின் படப்பிடிப்பு. இத்தொடரில் மகாவாக வந்து ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் கீதாஞ்சலி. அவரைச் சந்தித்துப் பேசினோம்.
"நாதஸ்வரம்' தொடரில் நடிக்க உங்களுக்கு எப்படி வாய்ப்புக் கிடைத்தது?
இந்தத் தொடரின் இயக்குனர் திருமுருகன் சார், எனக்கு பக்கத்து வீடுதான். அதனால் சின்ன வயதாக இருந்த போதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். இந்தத் தொடர் ஆரம்பிக்கும்போது, "நீ நடிக்கிறாயா?'ன்னு கேட்டார். எனக்கும் சின்ன வயசுல இருந்து டிவியெல்லாம் பார்த்து நடிப்பு மீது லேசான ஆர்வம் இருந்தது. மதுரையில ஆடிஷன் வச்சாங்க. சரி போய்தான் பார்ப்போமே என்று போனேன். அதில செலக்ட் ஆகிட்டேன். இப்படித்தான் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.
நீங்கள் முதல் தொடரிலேயே ஒரு வெற்றி இயக்குநரின் தொடரில் அடியெடுத்து வெச்சிருக்கீங்க, இந்தத் தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்க?
உண்மைதான். "மெட்டி ஓலி' தொடரின் வெற்றியை அடுத்து திருமுருகன் சார் இயக்கும் தொடர் இது. இதுல எனக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்தே ரொம்ப சந்தோஷம். இது நான் நடிக்கும் முதல் தொடர் என்பதால் எப்படி நடிப்பது என்பதைக் கற்றுக் கொண்டேன்.
அதுவுமில்லாமல் முதல் தொடரே மௌலி சார், பூவிலங்கு மோகன் சார் போன்று பெரிய பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
ஆரம்பத்தில் டைரக்டர் இந்தக் கேரக்டர் இப்படித்தான் இருக்கணும் என்று ரொம்ப பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார். அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். இப்போது எனக்கே தெரியுது, இந்தக் கேரக்டரை இப்படி செய்தால் நல்லா இருக்கும்ன்னு. இந்தத் தொடரில் நான் நடிக்கிறேன் என்று சொல்வதைவிட ஓர் அழகான கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்துகிட்டு இருக்கேன்னுதான் சொல்லணும்.
மனநிலை சரியில்லாதவராக நடிக்கப் பயிற்சி எதுவும் எடுத்துக் கொண்டீர்களா?
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? என்பதை நாம் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். அப்படிக் கேள்விப்பட்டதை வைத்து, எப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதோ அப்படிச் செய்கிறேன். மற்றபடி பயிற்சியெல்லாம் எதுவும் செய்வதில்லை. இதில் இன்னொரு விஷயம் பார்த்தீங்கன்னா, இந்த ஒரு தொடரிலேயே பலவிதமான கேரக்டர்களை நான் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கு.
மகா கேரக்டர் பார்த்தீர்கள் என்றால் ஆரம்பத்தில் ரொம்ப ஜாலியா துறுதுறுன்னு இருந்த பொண்ணாகவும், கல்யாணத்துக்குப் பிறகு சில பிரச்னைகளால பாதிக்கப்பட்டு மனநிலை சரியில்லாதவளாகவும் வருவேன். எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் என்னாலும் நடிக்க முடியும் என்று இந்தத் தொடர் எனக்கு உணர்த்தியிருக்கிறது. இதுபோன்ற ஒரு நல்ல வாய்ப்பை எனக்குக் கொடுத்த திருமுருகன் சாருக்கு நன்றி.
வேறு தொடர் எதுவும் நடிக்கிறீங்களா? பெரிய திரையில் இருந்து வாய்ப்புகள் வருகிறதா?
தற்போதைக்கு வேறு தொடர் எதிலும் நடிக்கவில்லை. பெரிய திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு இன்னும் சரியாக அமையவில்லை.
உங்களைப் பற்றி சொல்லுங்க?
பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படிச்சுக்கிட்டு இருக்கேன். சின்ன வயதில் டான்ஸ் கற்றிருக்கிறேன். அப்பா வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். அம்மா சிவரஞ்சனி இல்லத்தரசி. என் பெரிய தங்கை அபிநயா இப்போதுதான் பளஸ் டூ முடிச்சிருக்காங்க. அவங்களும் "நாதஸ்வரம்' தொடரில் சுமதிங்கிற என் தங்கை கேரக்டரில் நடிக்கிறாங்க. என் சிறிய தங்கை ஆறாவது படிக்கிறாள்.