முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வானில் வர்ணஜாலம்

கண்டங்களுக்கிடையே நடந்த "மியூசிக்கல் ஃபயர் ஒர்க்ஸ்' போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்தது. அதில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமானவர் சிவகாசி ராஜசிங் செல்லத்துரை. இவர், சிவகாசி ஸ்டேண்டர்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:44 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 11:52 PM

கண்டங்களுக்கிடையே நடந்த "மியூசிக்கல் ஃபயர் ஒர்க்ஸ்' போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்தது. அதில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமானவர் சிவகாசி ராஜசிங் செல்லத்துரை. இவர், சிவகாசி ஸ்டேண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர். இனி அவருடன் பேசுவோம்.

அது என்ன மியூசிக்கல் ஃபயர் ஒர்க்ஸ்?

இசை ஒலிக்கும்போது, அதற்கு தகுந்தாற்போல் பட்டாசு விண்ணில் சென்று வர்ணஜாலம் காட்ட வேண்டும். இசையுடன் இணைந்து பட்டாசு வெடிப்பது எனவும் கூறலாம்.

Advertisement

பிரான்சு நாட்டில் டீகாஸ்வில்லா என்ற ஊரில் 2011 ஜூலை 23-ம் தேதி இப்போட்டி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள மூடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்றது. இந்தியா, ஜப்பான், இத்தாலி ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொண்டன.

போட்டியில் கலந்து கொள்ள உங்களுக்கு இசைஅமைத்தவர் யார்?

சென்னையைச் சேர்ந்த பால்ஜேக்கப் என்பவர் இசை அமைத்தார். மேற்கத்திய இசையையும், இந்திய இசையையும் இணைத்து புதிய இசை அமைத்துக் கொடுத்தார்.

இந்தப் போட்டி அமைப்பாளர் யார்?

அரசுதான் இந்தப் போட்டியை நடத்துகிறது. போட்டியை நடத்துபவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் பட்டாசு தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனத்தை அழைப்பார்கள்.

போட்டியில் பங்குபெற்ற அனுபவம் குறித்து...?

இது ஒரு கூட்டுமுயற்சி. ஆய்வுக்கு உதவியாக கண்ணன் மற்றும் முனீஸ்வரன் ஆகிய இருவரையும் வைத்துக்கொண்டேன். போட்டியில் பங்கு கொள்ள வேண்டும் என முடிவு செய்த பின்னர் ஆறுமாதகாலம் கடுமையாக உழைத்தோம்.

இறுதியில் ஒருமாதம் இருக்கும்போது ஒருநாளைக்கு மூன்று மணிநேரம்தான் தூங்கினோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சைனா ஆலையிலிருந்து போட்டிக்குத் தேவையானவற்றை தயார் செய்தோம். அங்கிருந்து மருந்து உள்ளிட்டவற்றைக் கொண்டு சென்றோம். போட்டி நடைபெறும் இடத்தில் பார்வையாளர்கள் காலை முதலே வரத் தொடங்கிவிடுவார்கள். அப்பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட பொருள்காட்சிபோல பல ஸ்டால்கள் அமைக்கப்படும். இதனைப் பெரிய விழாவாக மக்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவில் இதுபோன்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியை நிகழ்த்தியுள்ளீர்களா?

அந்தமான் தீவில் இந்திய கடற்படை விழாவிற்காகவும், தூத்துக்குடியில் துறைமுக விழாவிற்காகவும், சூரத்தில் தசரா விழாவிற்காகவும், மதுரை தெப்பத் திருவிழாவிற்காவும் வாணவேடிக்கை நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.