ஒரே குடையின் கீழ் பணி செய்ய வேண்டும்!
ஆண்களுக்குச் சரிநிகர் சமமாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் தீவிரமாகப் ஈடுபட்டு வருகின்ற காலம் இக்காலம். கனரக வாகனங்கள் ஓட்டுதல், ராணுவப் பணிகளிலும் பங்கேற்கின்றனர். அயர்ன் பாக்ஸ், மிக்ஸி, ஃபேன் எனப்
ஆண்களுக்குச் சரிநிகர் சமமாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் தீவிரமாகப் ஈடுபட்டு வருகின்ற காலம் இக்காலம். கனரக வாகனங்கள் ஓட்டுதல், ராணுவப் பணிகளிலும் பங்கேற்கின்றனர். அயர்ன் பாக்ஸ், மிக்ஸி, ஃபேன் எனப் பல வீட்டு உபயோகப்பொருள்களைப் பழுது பார்க்கும் பணிகள் வரை இன்று பெண்கள் செய்யத் தொடங்கி விட்டனர்.
ஆண்களே சிரமப்பட்டு செய்யும் இத்தொழிலை, விருதுநகரில் உள்ள படந்தால் கிராமத்தில் செயல்பட்டு வரும் சக்தி மகளிர் மன்றத்தைச் சேர்ந்த பெண்கள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். இம்மன்றத்தின் ஊக்குநர் எம்.சிவகாமி, பிரதிநிதிகள் ஆர்.சரோஜா, கே.காஞ்சனா ஆகியோர் நம்மிடம் பேசியதில் இருந்து...
நீங்கள் இம்மகளிர் மன்றத்தை எப்போது தொடங்கினீர்கள்?
Advertisement
17.7.2001 அன்று தொடங்கினோம். துவக்கத்தில் அனைத்து மன்றங்களும் செய்வதுபோல, சேமிப்புப் பணத்தை உறுப்பினர்களுக்கிடையே வட்டிக்குக் கொடுத்து வந்தோம்.
2005 - ஆம் ஆண்டு உறுப்பினர்கள் தனித்தனியே வியாபாரம் செய்யத் தொடங்கினோம். உறுப்பினர் ஒருவர் வீட்டில் ஜவுளி வியாபாரம், மற்றொருவர் வீட்டில் சிறுகுழந்தைகளுக்கான திண்பண்டம் தயாரிப்பு, பேனா நிப் தயாரிப்பு என ஈடுபட்டோம். மேலும், ஊறுகாய், அப்பளம் தயாரிப்பு எனப் பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறோம்.
வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதுநீக்கும் தொழிலை எப்போது தொடங்கினீர்கள்?
மாவட்ட மகளிர் திட்டம் மூலம், 2009 ஆம் ஆண்டு, எம்.சிவகாமி, ஆர்.சரோஜா, எம்.முருகலட்சுமி, எம்.வெங்கடேஸ்வரி, டி.முனியம்மா ஆகிய 5 பேர் இத்தொழிலில் பயிற்சி பெற்றோம். பின்னர் துண்டு பிரசுரம் அச்சடித்து கிராமத்திலும், பக்கத்தில் உள்ள கிராமங்களிலும் விநியோகம் செய்து தொழிலைத் தொடங்கினோம்.
என்னென்ன பொருள்கள் பழுது நீக்குவீர்கள்?
அயன்பாக்ஸ், கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், சீலிங் ஃபேன், டேபிள் ஃபேன், குக்கர் ஆகியவற்றை பழுதுநீக்கம் செய்வோம்.
தினசரி பழுது நீக்கும் பணி நடைபெறுமா?
உறுப்பினர்கள் பலர் தீப்பெட்டி ஆலையில் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். எனவே விடுமுறை தினமான ஞாயிறு அன்று மட்டும் பழுது நீக்கும் பணியைச் செய்து வருகின்றோம். இதன்மூலம் பயிற்சி பெற்ற 5 பேருக்கும் மாதம் தலா ரூ. 900 முதல் ரூ. 1200 வரை வருமானம் கிடைக்கிறது.
உங்கள் குழுவின் சிறப்பு என்ன?
கிராமசபைக் கூட்டங்கள் அனைத்திலும் கலந்து கொள்வோம். காவல்துறை மூலம் வரதட்சிணைக் கொடுமை உள்ளிட்ட சமூகப் பிரச்னைகள் குறித்து வீதி நாடகம் நடத்துகின்றோம். குழுவின் ஊக்குனர் சிவகாமி இந்தப் பஞ்சாயத்தில், மகளிர் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். இந்தப் பஞ்சாயத்தில் 57 மகளிர் குழுக்கள் உள்ளன.
உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
தற்போது உறுப்பினர்கள் தனித்தனியே வியாபாரம் செய்து வருகிறார்கள். வங்கியில் கடன்பெற்று உறுப்பினர்கள் வியாபாரத்தை ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் வியாபாரத்தையும், பழுது நீக்கும் பணியையும் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.