ஓர் ஆய்வு!: ஊரும் பேரும்
ஊர்ப் பெயர்களை வெளிக்கொண்டுவந்து, அது குறித்து ஆய்வு செய்வது என்பது மிகப் பெரிய சவால். பெயராய்வு என்பது ஆலமரம் போன்றது. இது தனது விழுதுகளைப் பல துறைகளில் பதித்து, இந்திய வரலாற்றை செழுமைப்படுத்தி வருகி
ஊர்ப் பெயர்களை வெளிக்கொண்டுவந்து, அது குறித்து ஆய்வு செய்வது என்பது மிகப் பெரிய சவால். பெயராய்வு என்பது ஆலமரம் போன்றது. இது தனது விழுதுகளைப் பல துறைகளில் பதித்து, இந்திய வரலாற்றை செழுமைப்படுத்தி வருகிறது.
அவ்வகையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊர்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலைத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சோ. முத்தமிழ்செல்வன். கல்வெட்டு, புத்தகங்கள், அரசுப் பதிவேடுகள், செப்பேடுகள், கர்ணபரம்பரைக் கதைகள், நாட்டுப்புற
பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், விடுகதைகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட ஊர்கள் இடம்பெற்ற விதத்தையும், அந்த ஊர்களின் மக்களுடைய வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், தற்போதய நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் ஆய்வு செய்கிறார் முத்தமிழ்செல்வன். இது குறித்து அவரிடம் பேசினோம்.
Advertisement
""பல மேலை நாடுகளில் இடப்பெயராய்வு என்பது தனித்துறையாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடப்பெயராய்வு நடைபெற்று வருகிறது. இதுபோல நமது நாட்டிலும் பல இடங்களில் ஆய்வு நடக்கிறது.
2010ஆம் ஆண்டு, ஜூன் மாதம், புதுதில்லியில் உள்ள பல்கலைகழக மானியநிதி நல்கைக்குழுவிற்கு எனது ஆய்வுக் கோவையை அனுப்பினேன். பின்னர் 2010, நவம்பர் மாதம் ஆய்வு செய்யத் தகுதியான நபர்தானா என்பது குறித்த நேர்முகத்தேர்வு புதுதில்லியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டேன். அதன் முடிவு 2011, பிப்ரவரி மாதம் வெளிவந்தது. அதில் நான் ஆய்வு செய்ய தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, எனது ஆய்வுக்கு ரூபாய் 5.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஓர் உதவியாளரை வைத்துக்கொண்டு எனது ஆய்வினை 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
ஊரில் உள்ள மக்கள் தொகை, முதலில் குடியேறியவர்கள், கோயில் விவரம், சமூகத்தொடர்பு, ஜமீன்தார்கள் யாரும் இருந்தார்களா, மதம், ஜாதி, பொருளாதார நிலை, விவசாயம் உள்ளிட்ட அனைத்து விவரங்கள் குறித்தும் ஆராய்வோம்.
மதுரை மாவட்டத்தில் 665 ஊர்களிலும், ராமனாதபுரம் மாவட்டத்தில் 402 ஊர்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் 521 ஊர்களிலும், விருதுநகர் மாவட்டத்தில் 1577 ஊர்களிலும் ஆய்வு செய்வோம். இது அரசின் வருவாய்த் துறையில் உள்ள புள்ளிவிவரமாகும். மேலும் ஓர் ஊராட்சியில் நான்கு அல்லது ஐந்து ஊர்கள் இருந்தாலும், அனைத்து ஊர்களையும் ஆய்வு செய்வோம்.சின்னஞ் சிறிய கிராமமானாலும் ஆய்வு நடத்தப்படும். மொத்தம் ஏறக்குறைய பத்தாயிரம் ஊர்களுக்குமேல் ஆய்வு செய்வதாக உத்தேசம் உள்ளது.
எனது ஆய்வுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.பாஸ்கரன், துறைத்தலைவர் க.சிவனேசன் ஆகியோர் நல்லமுறையில் ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள்'' என்றார்.