முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கலைஞர்களின் கலைஞர் மணக்கால் ரங்கராஜன்!

இன்று தொண்ணூறு வயதாகும் மூத்த கர்நாடக இசைக்கலைஞர் மணக்கால் ரங்கராஜன். (தினமணி கதிரின் முன்னாள் ஆசிரியர் துமிலன் அவர்களின் மருமகன்.) அவருடைய சுருதி சுத்தமும், பிரமிக்க வைக்கும் பிருகாவும், வளமான குரலும

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:22 PM
பகிர்:

இன்று தொண்ணூறு வயதாகும் மூத்த கர்நாடக இசைக்கலைஞர் மணக்கால் ரங்கராஜன். (தினமணி கதிரின் முன்னாள் ஆசிரியர் துமிலன் அவர்களின் மருமகன்.) அவருடைய சுருதி சுத்தமும், பிரமிக்க வைக்கும் பிருகாவும், வளமான குரலும், அவரை கர்நாடக இசையின் உச்சத்தில் உட்கார வைத்திருக்க வேண்டும். ஆனால் அதிகம் பேசாத அடக்கமும், விருதுகளைத் தேடிச் செல்லாத பண்பும் அவர் திறமையைப் பலரும் அறியாத நிலையில் வைத்திருக்கிறது.

 சில வருடங்களுக்கு முன், லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஆர். பத்மனாப அய்யர் இவரது இசையைக் கேட்ட மாத்திரத்தில் மயங்கிப்போய் அவரை அங்கு அழைத்து இசை நிகழ்ச்சி அளித்தார். அவருடைய முயற்சியால் உருவானதுதான் அம்ஷன் குமார் இயக்கியிருக்கும் ஆவணப்படம். குரு என்று யாரையும் நாடிப்போகாமலே சுயம்புவாக உருவான கலைஞர் மணக்கால் ரங்கராஜன் என்று குறித்திருக்கிறார் எஸ். ஸ்ரீதரன். அந்த நாட்களில் அரியக்குடி, மகாராஜபுரம் விசுவநாதய்யர், ஜி.என்.பி., செம்மங்குடி, மதுரை மணி அய்யர் போன்ற மேதைகள் கர்நாடக இசை மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்தபோது ரங்கராஜன் வழி மறைத்திருக்குதே என்று கவலைப்பட்டவரல்ல. சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தார். அன்றைக்கெல்லாம் குரல் வளம் இல்லை யென்றால் ஜொலிக்கவும் முடியாது. பெயர் எடுக்கவும் முடியாது.

 இலக்கியமாகட்டும், கலைகளாகட்டும், இசையாகட்டும், திறமை வாய்ந்தவர்கள் அடைய வேண்டிய புகழை அடையத் தம்மால் ஆனதைச் செய்து முடிப்பவர் லண்டன் பத்மனாப அய்யர் என்கிறார் படத்தின் இயக்குனர் அம்ஷன் குமார். அமெரிக்காவில் கிளீவ்லாந்து தியாகராஜர் ஆராதனை விழாவில் வி.வி. சுந்தரம் மணக்கால் ரங்கராஜனைப் பாட அழைத்துக்கொண்டு போவதற்கு முன்பு, லண்டனில் அவரைப் பாடச் செய்தாராம் பத்மனாப அய்யர். திருநெல்வேலியில் சிறுவர்களாக விளையாடிக்கொண்டிருக்கையில், கையிலிருக்கும் கிட்டிப்புள்ளைப் போட்டுவிட்டு சிறுவர்கள் எல்லோரும் மணக்கால் ரங்கராஜனின் பாட்டு ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த ஒலிபெருக்கியின் கீழே நின்றபடி அவர் இசையைக் கேட்டதைச் சொன்னார் க்ளீவ்லாந்து வி.வி. சுந்தரம்.

 இந்த ஆவணப்படம், இசையில் மணக்கால் ரங்கராஜனின் சாதனைகளைச் சொல்வதைப் போலவே, அவருடைய திறமையையும் அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. திருவையாறு தியாகராஜ ஆராதனையின்போது பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை, இவர் ஒரே ஒரு பாட்டுப் பாடட்டும் என்று கேட்டுக் கொண்டாராம். நவரச கானடாவில் "நினுவினா' பாடினாராம் ஏழெட்டு ஆவர்த்தனங்கள் பாடி அசத்திவிட்டாராம். அத்தனை வேகம், அத்தனை பிருகா எம்.எஸ்.ஸின் பாட்டைக் கேட்டுவிட்டுக் கிளம்பிப் போன பலரும், திரும்பி வந்து அமர்ந்தார்களாம். ப்ளூட் மாலி வாசிப்பது போலவே பலப்பல ஏற்ற இறக்கங்களுடன் அவர் பாடியதைக் கேட்டு, தொடர்ந்து "அப்ளாஸ்' இவருடைய பிருகா நிறைந்த பாட்டைக் கேட்டு, பலர் "ஓ... ஜி.என்.பி. பாடுகிறார் போலிருக்கிறது....' என்று நினைத்தார்களாம்.

 ஆவணப்படம் முழுக்க நிறைய பாட்டுக்கள். "நகுமோமு', "நினுவினா' என்று சென்னையிலிருந்து மணக்கால் போகும் பயணத்தில் இசையும் பயணம் செய்கிறது. த்விஜாவந்தியையும், பிருந்தாவன சாரங்காவையும் அவர் பாடும்போது, இந்துஸ்தானி சாயல் துளியும் வராமலே அந்த ராகங்களின் தனிக் கவர்ச்சியைத் தம் குரலில் கொண்டு வருகிறார் என்று லண்டன் ரசிகர் குல்கர்னி சொல்வதை மறுக்காமல் ஏற்க வேண்டியிருக்கிறது. அவருடைய இசையிலுள்ள வேகத்தைக் காட்ட, "நகுமோமு'வும் "நெனருஞ்சினானு'வும் பின்னணியில் தொடர்கின்றன. ரயில் பாயும்போது கடக்கும் தண்டவாளங்களும், ரயில் பெட்டிகளின் லயம் பிறழாத ஓட்டமும் அம்ஷன் குமாரின் கற்பனையை வெளிப்படுத்தும் இயற்கையான இணைப்புகள்.

 டி.வி. கோபாலகிருஷ்ணன், குன்னக்குடி, டி.என்.கிருஷ்ணன், டி.கே. மூர்த்தி, ஏ.கே.சி. நடராஜன், ரவிகிரண், சூர்யபிரகாஷ், டி.எம். கிருஷ்ணா என்று மூத்தவர்கள் முதல் இளைய தலைமுறை வரை மணக்கால் ரங்கராஜனைப் பாராட்டுவதை மனதார ரசிக்க முடிகிறது. போலியான பாராட்டு எவரிடத்திலிருந்தும் வெளிப்படவில்லை. அதிலும் வயலின் கலைஞர் எம். நர்மதா அவருடைய இசையைப் பகுத்துப் பகுத்து வாய்ப்பாட்டில் அலசி ஆய்ந்து காட்டியபோது பிரமிப்பு உண்டானது உண்மை. திருச்சியில் ஏகேசியின் வீட்டில் நடக்கும் உரையாடல் சுவாரசியத்துக்கு எடுத்துக்காட்டு.

 "பாட்டு சொல்லிக்கொடுக்கும்போது, மாணவி சரியாகப் பாடவில்லை என்றால் அங்கிருந்து எழுந்து போய்விடுவார். நான் பாட்டுக்குக் குனிந்துகொண்டே பாடிக்கொண்டிருப்பேன், எழுந்து போனதே தெரியாது' என்று அவரிடம் இசை பயில வந்து பின்னர் அவரை மணந்துகொண்ட அவரின் மனைவி பத்மா சொல்லும்போது, சிரித்துக் கொள்

 கிறார் மணக்கால்.

 லண்டனில் வாழும் வயலின் கலைஞர்கள் ஏஜிஏ ஞானசுந்தரம், பாலு ரகுராமன், எம். நந்தினி ஆகியோரின் பாராட்டுக்கள், நாதசுரக் கலைஞர் சுவாமிமலை மணிமாறன் என்று பல இசைக்கலைஞர்களின் பாராட்டுகளைச் சேர்த்திருக்கும் உத்தி பொருத்தமாக இருக்கிறது.

 ""ரயில் பயணங்களின்போது, சாப்பிட எதாவது வாங்கி வரட்டுமா என்று கேட்பார் அப்பா. ஸ்டேஷனில் அவர் பாட்டுக்கு இறங்கிபோய் சுடச்சுட பஜ்ஜி, போண்டா வாங்கிக்கொண்டு வருவார். ரயில் புறப்பட்டுவிடுமே என்று நாங்கள் பயந்து கொண்டிருக்கும்போது, ஓடிவந்து ஏறிக்கொள்வார்...'' என்பதுபோன்ற சின்னச் சின்ன நிகழ்வுகளை மகள் கூறுகையில், குடும்பப் பாசம் என்ற கோணமும் மெலிதான நகைச்சுவையுடன் வெளிப்படுகிறது.

 செம்பை இவருக்கு "சங்கீத சிம்மம்' என்று பட்டம் கொடுத்தாராம். குறும்படத்தைப் பார்ப்பவர்கள், நியாயமாகத்தான் கொடுத்திருக்கிறார் என்று நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். இந்தியன் பைன் ஆர்ட்ஸ் "சங்கீத கலா சிகாமணி' விருது கொடுத்ததையும், மியூசிக் அகடமி மூத்த "இசைக் கலைஞர்' விருது அளித்ததையும் பாராட்ட வேண்டும். இந்தியன் பைன் ஆர்ட்ஸ் செயலர் சீனிவாசன் மணக்காலைப் புகழ்ந்து பேசும் வார்த்தைகள் அவர் இவருடைய இசையை எத்தனை ரசித்திருக்கிறார் என்பதைக் காண்பித்தது.

 இனியாவது, இப்போது இருக்கிற இசைக்கலைஞர்களைப்பற்றிய ஆவணப்படங்களுக்கான பணியை லண்டன் பத்மனாப அய்யர் மாதிரி இங்கே யாராவது தொடங்கினால் நல்லது. அம்ஷன் குமாரை நம்பி பொறுப்பை ஒப்படைக்கலாம். ரசனை மிக்க இயக்குநர்!

முழு கட்டுரையைப் படிக்க →