அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சியம்!
ஓவியர் வி.வி. ரமணியின் கொலாஜ் ஓவியக் கண்காட்சி, சென்னை லலித் கலா அகாடமியில் சமீபத்தில் தொடங்கிவைக்கப்பட்டபோது, வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து சற்று வியப்பு ஏற்பட்டது. சாதாரணமாக ஓவியக் கண்காட்சிக்கு,
ஓவியர் வி.வி. ரமணியின் கொலாஜ் ஓவியக் கண்காட்சி, சென்னை லலித் கலா அகாடமியில் சமீபத்தில் தொடங்கிவைக்கப்பட்டபோது, வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து சற்று வியப்பு ஏற்பட்டது. சாதாரணமாக ஓவியக் கண்காட்சிக்கு, விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களே வருவார்கள். ரமணி வித்தியாசமான ஓவியர். அவருடைய சிறப்பு, கொலாஜ் ஓவியங்கள். மிகக் கடினமானவை மட்டுமல்ல, மிகவும் சவால் நிறைந்த துறை. வண்ணத்தைக் குழைத்துத் தீட்டிவிட்டுப் பெயரும் சூட்டிவிட்டுப் போய்விட முடியாது. செய்தித்தாள்கள், பத்திரிகைகள் இவற்றை வைத்துக்கொண்டு உருவங்களை, காட்சிகளை உருவாக்க வேண்டும். பெல்ட்டுகள், பாம்புகளாக மாறும். கைக்கடிகாரங்கள், கைவளையங்களாகத் தெரியும்.
ஜனவரி 10ஆம் தேதி கொலாஜ் ஓவியத்துக்கு நூறாவது வருடம் என்றும் அதனால் தான் அதைக் கொண்டாடும் வகையில் அன்றைக்குத் தம் காட்சியைத் துவக்கி வைப்பதாகவும் சொன்னார் ரமணி.
ஆம். ஓவிய மேதை பிக்காசோவும், ஜியார்ஜ் பிராக்கும்தான் இத்தகைய கொலாஜ் (ஒட்டோவியம்) ஓவிய வடிவை 1912-ல் முதன் முதலாகக் கையாண்டார்களாம். உலகிலேயே கொலாஜ் ஓவியர்கள் மிகச் சிலர்தான் இருக்கிறார்களாம். அதில் வி.வி.ரமணி முக்கியமானவர். அவர் வேறு எந்த வகை ஓவியத்திலும் தீவிரமாக ஈடுபடாமல், இதில் மட்டுமே தொடர்ந்து அக்கறை காண்பித்து வருவதால்தான் அவரால் இந்த வகை ஓவியத்திலும் புதுமையைப் படைக்க முடிகிறது. ""கொலாஜ் ஓவியத்துக்கு மட்டுமல்ல இது நூற்றாண்டு. கே.சி.எஸ். பணிக்கர், கே.கே. ஹெப்பார் இருவருக்கும்கூட இது நூற்றாண்டுதான்'' என்றார் கலை விமர்சகர், பேராசியை அஷ்ரபி பகத்.
""கொலாஜ் ஓவியம் ஏதோ பழைய தாள்களிலிருந்தும், படங்களிலிருந்தும் வெட்டி எடுத்து ஒட்டிவிடும் எளிய கலை அல்ல. எத்தனையோ தத்துவங்கள் இவற்றில் இழைந்திருக்கின்றன. கண்காட்சி வாயிலுக்குள் நுழையும் போதே நம்மை வரவேற்கும் கணேசர் படத்தைப் பாருங்கள். தடைகளை உடைப்பவராக, அவர் எல்லாருக்கும் பிடித்தமானவராக இருக்கிறார். ரமணி வெறும் கொலாஜ் ஓவியர் மட்டுமல்ல. புடவைத் தலைப்புகளை அவர் வடிவமைத்திருக்கும் அழகைப் பாருங்கள். என்ன கற்பனை!'' என்று பாராட்டினார் அஷ்ரபி பகத்.
""ரமணி வெகு எளிமையான நண்பர். என் மனைவி ஒரு முறை தில்லியில் ரமணியின் ஓவியம் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தார். அது வித்தியாசமாக இருந்தது. இந்தக் காட்சியைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்'' என்றார் பத்திகையாளர் சித்தார்த் வரதராஜன், சுருக்கமாக.
வி.வி. ரமணியின் கொலாஜ் ஓவியம், அமெரிக்க டெக்சாஸ் நகரிலுள்ள இன்டர்னேஷனல் கொலாஜ் மியூசியத்தில் இடம் பெற்றிருக்கிறது என்பது தமிழருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.
டாக்டர் கீதா ஜெயராம் பாடிய இறைவணக்கம், பாரதியின் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா. அதில் வருகிற "அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சியம்' என்ற வரிகளைப் பாடும்போது, கையை விரித்து ஓவியங்களை அவர் சுட்டிக் காட்டியபோது மிகப் பொருத்தமான பாடலாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று பாராட்டத் தோன்றியது.