முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மிருதங்க மேதையின் நூற்றாண்டு விழா!

கர்நாடக இசை உலகின் முக்கியப் புள்ளிகள் சிலரின் நூற்றாண்டு விழாக்களுக்கு, கிருஷ்ண கான சபாவின் பாலக்காடு மணி அய்யரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, பிள்ளையார் சுழி போட்டுவிட்டது. (வரவிருப்பவை, மதுரை மணி, ட

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

கர்நாடக இசை உலகின் முக்கியப் புள்ளிகள் சிலரின் நூற்றாண்டு விழாக்களுக்கு, கிருஷ்ண கான சபாவின் பாலக்காடு மணி அய்யரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, பிள்ளையார் சுழி போட்டுவிட்டது. (வரவிருப்பவை, மதுரை மணி, டி. பிருந்தா நூற்றாண்டு விழாக்கள்). பாலக்காடு மணி அய்யரைப் பொறுத்தவரை, அவர் மகன் ராஜாமணியும், ராஜாராமும் தொகுத்து வைத்திருக்கிற மாதிரி, வேறு எந்த சங்கீதக் குடும்பமும் ஆவணங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. மணி அய்யரே எழுதிய டைரிக் குறிப்புகள், அவர் சொல்லச் சொல்ல எழுதி வைத்த நிகழ்ச்சிக் குறிப்புகள், ஏராளமான புகைப்படங்கள் என்று இந்த இரட்டையர் வைத்திருக்கும் பொக்கிஷம் வேறு எந்த இசைக் கலைஞர் குடும்பத்திலாவது பாதுகாக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.

மணி அய்யரின் கச்சேரிகள் சிலவற்றை வர்ணம் முதல் மங்களம் வரை சின்னச் சின்ன அங்கங்களாகத் தொகுத்து, எத்தனை எத்தனை இசைக் கலைஞர்களுக்கு இவர் மிருதங்கம் வாசித்து, புகழின் உச்சியைத் தொட்டார் என்ற ராஜாமணியின் குறும்படம் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஓடினாலும், அந்தக்கால வித்துவான்களின் குரலையும், பாணியையும் சலிக்காமல் கேட்க முடிந்தது. எந்த இசைக் கலைஞரானாலும், மணி அய்யரின் மிருதங்கம் அந்த இசையோடு இணைந்து கைகோத்துக்கொண்டு நடை போடுவதை ரசிக்க முடிந்தது.

பரிசாகக் கிடைத்த மிருதங்கம்: சிறப்புச் சொற்பொழிவு ஆற்றியவர் குரு காரைக்குடி மணி. இவருக்கு பாலக்காடு மணி, மானசீக குரு. காரைக்குடியில் எங்கள் வீட்டுக்கு எதிரேதான் அரியக்குடி வந்து தங்கினார். என் தகப்பனார் என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். நான் படித்துக்கொண்டிருந்தேன். மிருதங்கமும் கற்றுக்கொண்டிருந்தேன். அன்று மாலை தியாகராஜ உற்சவத்தில் என்னையும் வரச் சொன்னார். அங்கே பஞ்சரத்தினம் பாடிக்கொண்டிருந்தார்கள். நான்கு ரத்தினங்கள் முடிந்துவிட்டன. ஐந்தாவது தொடங்குவதற்கு முன்னால், அரியக்குடி, மணி அய்யரிடம் இந்தப் பையன் எனக்கு மிகவும் வேண்டிய பையன். இவன் மிருதங்கம் வாசிக்கட்டுமே என்றார்.

""ஆகா, தாராளமாக வாசிக்கட்டும்'' என்றார் மணி

அய்யர்.

ஆனால் அங்கே இருந்த ஒரு மிருதங்க வித்துவானும் எனக்கு மிருதங்கம் தரவில்லை. கொண்டுவர வேண்டாம் என்று சொல்லியிருந்ததால் நானும் கொண்டு போயிருக்கவில்லை. உடனே, மணி அய்யர் தன் மிருதங்கத்தை என்னிடம் தந்து, "வாசி' என்றார். இது ஒரு பாக்கியம் என்று கருதி நான் அன்று வாசித்தேன். சில வருடங்களுக்குப் பிறகு, நான்கைந்து பேரிடம் மணி அய்யர் பேசிக்கொண்டிருந்தபோது, என் வாசிப்பைத் தாம் கேட்டிருப்பதாகவும், நல்ல சுத்தமான வாசிப்பு என்று பாராட்டியதாகவும் அந்த உரையாடலைக் கேட்ட ஒருவர் வந்து சொன்னார். எனக்கு இதைவிடப் பெரிய விருது என்ன வேண்டும்? எப்போது ஆத்மார்த்தமாக உணர்ந்து அந்த மேதையே சொல்லிவிட்டாரோ, அதற்குப் பின் நான் எந்த விருது வந்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை என்று தீர்மானித்து விட்டேன். சென்ற ஆண்டு வி.ஹெச்.எஸ். மருத்துவமனையில் டயாபடீஸ் பிளாக் கட்டியபோது நடந்த விழாவில் என்னை ஒரு நிகழ்ச்சி வழங்கக் கேட்டுக்கொண்டார் டாக்டர் சி.வி. கிருஷ்ணசாமி. நிகழ்ச்சி முடிந்ததும், எனக்கு ஒரு விலை மதிப்பற்ற பரிசு தந்தார்.

அது மணி அய்யர், டாக்டரின் சகோதரருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த மிருதங்கம்! அதை என்னிடம் ஆயிரக் கணக்கானோர் குழுமியிருந்த கூட்டத்தில் பரிசாகத் தந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அவரே எனக்கு ஆசி கூறி வழங்கியதாகவே நான் அதை ஏற்றுக்கொண்டேன் என்றார் நெகிழ்ச்சியுடன்.

விழா மலர்: சுவாரசியமான கட்டுரைகள், சுவையான துணுக்குகள் என்று படங்களுடன் தயாரித்திருந்த விழா மலரை முன்னாள் தேர்தல் ஆணையர் வெளியிட, "ஹிந்து' கே. பாலாஜி பெற்றுக்கொண்டார். ஐம்பது ரூபாய்க்கு இது ஒரு பொக்கிஷம்! நிறைவு நிகழ்ச்சி, நித்யஸ்ரீ மகாதேவனும், டாக்டர் ஆர்.ராமபிரசாதும் வழங்கிய இன்னிசைக் கச்சேரி. இருவருமே மணி அய்யர் குடும்பத்து மணிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →