முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சூடாமணி வாழ்கிறார்!

ஜிம் ஸ்டோவல் என்று ஓர் ஆங்கில எழுத்தாளர் எழுதிய "த அல்டிமேட் கிஃப்ட்' என்ற புத்தகத்தைப் படித்தவர்கள், ஹோவர்ட் ரெட் ஸ்டீவன்ஸ் என்ற ஒரு செல்வந்தர் தம் சொத்துக்களை உயில் மூலம் தன் குடும்பத்தினருக்கு எழுத

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

ஜிம் ஸ்டோவல் என்று ஓர் ஆங்கில எழுத்தாளர் எழுதிய "த அல்டிமேட் கிஃப்ட்' என்ற புத்தகத்தைப் படித்தவர்கள், ஹோவர்ட் ரெட் ஸ்டீவன்ஸ் என்ற ஒரு செல்வந்தர் தம் சொத்துக்களை உயில் மூலம் தன் குடும்பத்தினருக்கு எழுதி வைத்தபின், அவர்கள் எப்படி அதை அழித்துவிட்டு, அவர்களும் உருப்படாமல் போனார்கள் என்று முடித்திருக்கிறார்.

இளைஞனான மருமான் ஜேசன், மறைந்த தன் மாமா வீடியோவில் தன்னுடன் பேசுவதைப் பார்க்க வழக்கறிஞர் ஏற்பாடு செய்வார். நமக்கு இந்த உலகில் கிடைத்திருப்பதெல்லாம், கடவுளின் அன்பினால் மட்டுமே கிடைத்தது என்பதைப் புந்துகொள்ள எனக்குப் பல ஆண்டுகள் ஆயின என்று அவனுக்குக் கூறுவார். எனக்கு உன் மீது சிறிது நம்பிக்கை இருக்கிறது. அதை ஊதிப் பெரிதாக்க முடியும் என்று நம்புகிறேன் என்பார்.

ஜேசன் கடினமாக உழைத்து, பெரியவரின் நம்பிக்கையை நிறைவேற்றுவான். ரெட் ஸ்டீவன்ஸ் சிறுவர் இல்லம், ரெட் ஸ்டீவன்ஸ் நூலகம், மருத்துவமனை, ஏராளமான கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் எல்லாம் நடத்த ஒரு பில்லியன் டாலர் அறக்கட்டளை அவன் வசம் ஒப்படைக்கப்படுகிறது முழுப் புத்தகத்தையும்கூடப் படிக்க வேண்டாம். பின் அட்டையை முழுதும் படித்தாலே போதும். நூலின் மையக்கருத்து புலப்பட்டுவிடும்.

""அந்தப் புத்தகத்தின் முகப்பில், இன்னொருவரின் ஆன்மாவின் ஆழம் வரை சென்று கவனியுங்கள் - செவிகளால் மட்டுமல்ல, இதயத்தால், சிந்தனையால், அமைதியான அன்பினால் அதன் ஒலியைக் கேளுங்கள்...'' என்று ஒரு மேற்கோள் காட்டியிருக்கிறார் ஸ்டோவல். ஒவ்வோர் அத்தியாயமும், "கிஃப்ட்' எனப்படும் அன்பளிப்பை வலியுறுத்தும். இறுதி அத்தியாயம்தான் "அல்ட்டிமேட் கிப்ட்'. ஒவ்வோர் அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு செய்தி இருக்கும். கடைசியில், பிறர் மீது தனது தாக்கம் எத்தகையதாக இருக்கும் என்பதைப் பொறுத்தே ஒருவர் அறிந்துகொள்ளப்படுகிறார் என்பது ஓர் அத்தியாயத்தின் செய்தி. ஆர். சூடாமணியைப் பொறுத்தவரை இது சற்றும் மிகையில்லாமல் பொருந்துகிறது.

ஆர். சூடாமணியின் கதைகள்தாம் இதுவரை அவரது வாசகரை நெகிழச் செய்துவந்தன. இப்போது அவர் மறைவுக்குப் பின் நடைபெறும் நிகழ்ச்சிகள் அவருடைய வாசகர் வட்டத்துக்கு வெளியேயுள்ளவர்களின் நெஞ்சங்களையும் நெகிழச் செய்து வருகின்றன.

தாம் மறையும் முன், தம்முடைய சொத்துக்களின் பாதுகாவலராக, தன் சினேகிதி பேராசியை கே. பாரதியை நியமித்திருந்தார் ஆர். சூடாமணி. தம்முடைய அசையாச் சொத்துக்களை விற்றுக் கிடைத்த செல்வத்தை எல்லாம் ராமகிருஷ்ணா மாணவர் இல்லத்துக்கும், ராமகிருஷ்ணா மிஷன் இலவச மருத்துவமனைக்கும், அடையாறு வாலன்டரி ஹெல்த் சர்வீஸ் சென்டருக்கும் கொடுத்து, அவர்களின் பணியை ஊக்குவிக்க எண்ணியவர் சூடாமணி. சென்ற ஆண்டு, முதல் தவணையாக சுமார் ஐந்து கோடி ரூபாய் இப்பணிகளுக்காக அளிக்கப்பட்டது. சென்ற ஞாயிறன்று இன்னும் ஆறுகோடி ரூபாய் அளித்த நிகழ்ச்சி, ராமகிருஷ்ண மடத்தின் வளாகத்திலேயே நடந்தது.

"ஹிந்து' ராம், ""ஓர் எழுத்தாளரின் படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, தாம் பெரிதும் ரசிக்கும் ஆர்.கே. நாராயணின் எழுத்து குறித்து ஆங்கில நாவலாசிரியர் கிரஹாம் கிரீன் உயர்வாகக் கூறியிருந்த கருத்தை நினைவுகூர்ந்தார்.

நல்லி குப்புசாமி எப்போதும் பழைய சம்பவங்களை சிறுகதையின் சுவாரசியத்தோடு சொல்லி, நிகழ்ச்சிக்குத் தன் அனுபவ பூர்வமான பங்களிப்பை அளிப்பார்.

ரசகுல்லா கடையை நடத்தி வந்தார் ஒருவர். அவர் கல்கத்தாவைவிட்டுப் போய் இரண்டு ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்தபோது, தாம் யாரிடம் கடையை ஒப்படைத்திருந்தாரோ, அவர் கடையையே விற்றுவிட்டுப் போய்விட்டதால், அவருக்கு ராமகிருஷ்ண மடம் வாழ் நாள் முழுக்க அடைக்கலமும் ஆதரவும் அளித்ததாம். காரணம் மடத்தின் சன்னியாசி ஒருவருக்கு அவர் ஒரே ஒரு நாள், மூன்று வேளை உணவளித்தாராம் இதைச் சொல்லிவிட்டு, இது போன்று எத்தனையோ பேருக்கு வாழ்வளித்திருக்கிறது ராமகிருஷ்ண மடம்'' என்றார் நல்லி.

பத்திகையாளர் மாலன் ஆர். சூடாமணி எழுதிய சிறுகதைகளின் உயர்வை எடுத்துக்கூறினார். சுவாமி சத்யஞானானந்தா, ஒரே நபர் இத்தனை பெரிய நன்கொடை தந்தது இத்தனை ஆண்டுகளில் இதுவே முதல் தடவை என்றும், இன்னுமொரு இருநூற்றைம்பது மாணவர்களயும் சேர்க்க இந்த நிதி உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அரசு அதிகாரி சாந்தா ஷீலா நாயர், ""வி.ஹெச்.எஸ். மருத்துவமனைதான் பின்னர் ஆரம்ப சுகாதார மையங்கள் எனப்படும் பி.ஹெச்.எஸ். உருவாகக் காரணம்'' என்றார்.

ஆர். சூடாமணி வெளியுலகத்தின் தொடர்புகள் கணிசமாக ஏதும் இன்றி வாழ்ந்தவர். ஆனால் அவரைப் போல மனித வாழ்க்கையை அத்தனை அசலான உணர்வுகளுடன் தன் படைப்புகளில் நுணுக்கமாக வெளிப்படுத்தியவர் வேறு யாராவது இருக்க முடியுமா என்பது சந்தேகம். அவருடைய சிறுகதை "நாமாவளி'யைப் படித்தவர்கள், அவருடைய உள் மனம் எத்தனை கனிவானது என்பதை உணரமுடியும். மரங்களையும், தாவரங்களையும், இயற்கையையும் நேசித்தவர் சூடாமணி. எழுத்தைப் போலவே, ஓவியத்தையும் இதமாகக் கையாண்டவர். தன் உடல் நலக்குறைபாட்டுக்கு எவரிடமிருந்தும் அனுதாபம் எதிர்பார்க்காதவர். தன் சிறுகதைகள், நாவல்கள் மூலம் நல்ல சிந்தனைகளையும் கருத்துக்களையுமே வாசகர் நெஞ்சங்களில் விதைத்து வந்தவர். அப்படி வாழ்ந்தவர், தம் சொத்துக்களின் மதிப்பையும், முதலீட்டின் வருவாயையும் மொத்தமாக நற்செயல்களுக்கு நன்கொடையாக வழங்கியிருப்பது நமக்கு வியப்பளிக்கவில்லை!

சூடாமணியின் கனவு மெய்ப்பட உதவியவர் என்ற முறையில், தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பலரும் பாராட்டிய போது கிடைத்த மகிழ்ச்சியும், திருப்தியும் பேராசிரியை கே. பாரதிக்கு நிறைவைத் தந்திருக்கும்.

மீண்டும் ஜிம் ஸ்டோவல்லின் நூலுக்கே வருகிறேன். "அல்ட்டிமேட் கிஃப்ட்' எது? இதைவிட நல்ல அன்பளிப்பு ஏதுமில்லை என்று கூறத்தக்கது எது?

ஸ்டோவல் முடிக்கிறார்: இறுதியில், வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து முடிப்பதுதான் "அல்ட்டிமேட் கிஃப்ட்' என்று முடித்திருக்கிறார். அதுவும் ஆர். சூடாமணிக்குப் பொருந்துகிறது!

முழு கட்டுரையைப் படிக்க →