பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் 2008 நவம்பர் 26ம் தேதி மாலைப்பொழுதில் மும்பை நகரின் 8 இடங்களில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். உலகையே உலுக்கிய இச்சம்பவத்தில் பலர் இறந்தனர். சிலர் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தனர். பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக தேசிய பாதுகாப்புப்படையின் (என்.எஸ்.ஜி.) 51 சிறப்பு அதிரடிக்குழு (எஸ்.ஏ.ஜி.)வரவழைக்கப்பட்டது.
8 அணிகளாக பிரிந்து பயங்கரவாதிகளை தாக்கிய சிறப்பு அதிரடிக்குழுவில் இடம்பெற்றிருந்த நாயக் வேலு சதீஷ், நாரிமன் ஹவுஸ் பகுதிக்குப் பொறுப்பேற்றார். கொலபா பகுதியில் அமைந்துள்ள இந்த நாரிமன் ஹவுஸில் வெளிநாட்டினர் அதிகளவில் தங்கியிருந்தனர். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நாரிமன் ஹவுஸில் தங்கியிருந்தோரை மீட்கும் வேளையில் வேலு சதீஷ் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஹெலிகாப்டர் மூலம் நாரிமன் ஹவுஸ் மாடியில் இறங்கிய அதிரடிப்படையினர் சுவரை இடித்து உள்ளே புகுந்து பயங்கரவாதிகளை தாக்க வேண்டும்.
இப்பணியை சவாலாக எடுத்து கொண்ட வேலு சதீஷ், சுவரை வெடிவைத்து தகர்த்து அதிரடியாக உள்ளே நுழைந்தார். அங்கே எதிர்ப்பட்ட பயங்கரவாதியுடன் நேருக்கு நேர் மோதி வீழ்த்தினார். தீரமாகச் செயல்பட்ட வேலு சதீஷைப் பற்றி உலகம் அறியாதது வேதனையானது தான். இருப்பினும் அவரின் தீரத்தைப் பாராட்டி குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், வேலு சதீஷுக்கு "கீர்த்தி சக்ரா' பதக்கம் வழங்கி
கெüரவித்தார்.
34 வயதாகும் வேலு சதீஷ், தமிழ்நாடு, வேலூர் மாவட்டம், உனைமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் இவரது தந்தை, 2 சகோதரர்கள் அனைவரும் இந்திய ராணுவத்தில் தேசப்பணியில் ஈடுபட்டவர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? இதோ அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்:
வேலு சதீஷ், தற்போது பெங்களூரில் அமைந்துள்ள இந்திய ராணுவத்தின் எம்.இ.ஜி. மற்றும் மையத்தில் (12 என்ஜினியர் ரெஜிமென்ட்) சேவையாற்றி வருகிறார். சதீஷ் சொல்கிறார்:
""அப்போது தில்லியில் நான் தங்கியிருந்தேன். என் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தாங்கமுடியாத வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவரை சாந்தப்படுத்த முயன்றுகொண்டிருந்தபோது பயங்கரவாதிகளைத் தாக்குவதற்காக மும்பை வரும்படி எனக்கு அழைப்பு வந்தது.
செய்தி கேட்டு என் மடியில் அழுது புரண்டுகொண்டிருந்த என் மனைவி மயக்கமானார். தேசமா? மனைவியா? என்ற கேள்விக்கு இடமில்லாததால், நாட்டை பாதுகாக்கும் பணிக்காக புறப்பட்டேன். என் வாழ்க்கையில் எதிர்கொண்ட மிகவும் கடினமான நிமிடம் அது. மயக்கத்தில் வீழ்ந்த என் மனைவி உறங்கிவிட்டார். அவரை எழுப்பாமல், தனியே விட்டுவிட்டு மும்பை புறப்பட்டேன்.
பயங்கரவாதிகளை வீழ்த்திய மகிழ்ச்சியில் தில்லி திரும்பிய நான், கொஞ்சமும் தாமதிக்காமல் எனது மனைவி சுமிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். ஆபத்தான நிலையில் சுமிதாவைக் கொண்டுவந்திருப்பதாக மருத்துவர்கள் கடிந்து கொண்டனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்து மனைவி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். மும்பை பயங்கரவாத தாக்குதலில் இறந்த ஹவில்தார் ஜிஜேந்திரசிங் மற்றும் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் தான் தினகர் மற்றும் திவாகர் என்ற மகன்களாக எனக்குப் பிறந்துள்ளதாக நம்புகிறேன். மீண்டும் தேசிய பாதுகாப்புப்படையில் இடம்பிடிக்க விரும்புகிறேன்'' என்கிறார் வேலு.
வேலு சதீஷின் வீரச்செயலைப் பெருமிதத்துடன் நினைவுக்கூறும் அவரது தாய் சாவித்திரி, ""என் 3 மகன்கள் ராணுவத்தில் பணியாற்றுவதால் எனக்கு "வீரத்தாய்' என்ற பட்டத்தை தமிழக அரசு தந்திருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட மகன்களை ராணுவத்திற்கு அனுப்பிவைத்தால், வீரத்தாய் என்ற பட்டமும், சில சலுகைகளையும் தமிழக அரசு வழங்கிவருகிறது.
ஆனால் இது எனக்கு வழங்கப்படவேயில்லை. சதீஷுக்கு, "கீர்த்தி சக்ரா' விருது கிடைத்த பிறகு, ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.12 ஆயிரம் ஆகிய 2 காசோலைகளை தமிழக அரசு தந்தது. ஆனால் நிலம் வழங்கவில்லை. என்மகன் பெங்களூரில் இருக்கும் எம்.இ.ஜி.யில் பணியாற்றினாலும் கர்நாடக அரசு சதீஷை பாராட்டவில்லை'' என்றார் வேதனையுடன்.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் வீரதீரச்செயல் புரிந்துள்ள வேலு சதீஷ் பற்றி அவரது சொந்த ஊரான அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் யாருக்கும் தெரியவில்லை என்பதும் வேதனை தரும் உண்மை. தேசப்பற்றுக்கு இலக்கணமாக திகழும் வேலு சதீஷை தமிழக அரசு கெüரவிக்கவேண்டும் என்று நாட்டுப்பற்றாளர்கள் சிலர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.