முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

"பாத்வே' காட்டும் வழி!

 மன வளர்ச்சி குன்றியவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உண்டாக்குவதற்காகவே உழைக்கிற மனிதர் ஒருவர் உண்டு என்றால் அவர் "பாத்வே' பிரசாத் என்பதை இந்தத் துறையில் பணிசெய்பவர்கள் மறுக்காமல் குறிப்பிடுவார்கள்

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:14 PM
பகிர்:

 மன வளர்ச்சி குன்றியவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உண்டாக்குவதற்காகவே உழைக்கிற மனிதர் ஒருவர் உண்டு என்றால் அவர் "பாத்வே' பிரசாத் என்பதை இந்தத் துறையில் பணிசெய்பவர்கள் மறுக்காமல் குறிப்பிடுவார்கள். ஓர் அனாதைக் குழந்தையிலிருந்து ஆரம்பித்து, இன்று ஆலமரம் போல் வளர்ந்திருக்கிறது "பாத்வே'.

 "பாத்வே' ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். சாதி-மதம் போன்ற எந்தப் பாகுபாடும் பார்க்காமல் குழந்தைகளின் மறுவாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டு வரும் அமைப்பு என்கிறார் பாத்வே பிரசாத். மனவளர்ச்சி குறித்த மருத்துவத்தில் நிபுணரான பிரசாதுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் பரிசும் பாராட்டும் அளித்து கௌரவித்திருக்கின்றன.

 கடந்த வாரம் திருவான்மியூரில் உள்ள தங்கள் வளாகத்திலேயே, அங்கே பயிற்சி பெறும் குழந்தைகளின் கைவினைப் பொருள்களின் காட்சியை வெற்றிகரமாக நடத்தினார்கள். "பாத்வே' மனவளர்ச்சி குன்றியவர்களின் மறுவாழ்வில் அக்கறை காண்பிக்கும் முன்னணி அமைப்பு. கல்வியைத் தவிர, பல்வேறு பயிற்சி வகுப்புகள் அந்தக் குழந்தைகளின் கைத் திறனை வெளிக்கொண்டுவர உதவியிருக்கின்றன. தோட்டப்பயிர்கள், நெல் சாகுபடி, மலர்கள் வளர்ப்பு என்று விவசாயத் துறையிலும், தச்சு வேலைப்பணிகளிலும் இந்தக் குழந்தைகளை பாத்வே பழக்கியிருப்பதைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.

 மொத்தம் எத்தனை குழந்தைகளை பாத்வே காப்பாற்றியிருக்கிறது?

 ""ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு "பாத்வே' வழிகாட்டியிருக்கிறது. இதில் 40 சதவிகிதம் பேரை பயிற்சி பெறத் தகுதியானவர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். 30 சதவிகிதத்தினரை பாதுகாப்பான பயிற்சிப் பட்டறைகளில் வைத்துக்கொண்டு சிறு சிறு தொழில் பயிற்சிகளில் ஈடுபடுத்தி வருகிறோம். 15லிருந்து 20 சதவிகிதம் வரை அதிகபட்ச பாதிப்பு உள்ளவர்களாகக் கருதி, அவர்களுக்கு ஏற்ற வகையில் கல்விப் பயிற்சி அளித்து வருகிறோம். அவர்களின் புரிந்துகொள்ளும் திறமையை அலசுகிறோம். அவர்கள் செய் திறனை ஆராய்கிறோம். அவர்களுக்கு இருக்கும் பழகு முறைக் குறைபாடுகளைக் கவனிக்கிறோம். அவர்களைச் சமுதாயத்தோடு இணைப்பதில் முயற்சி எடுத்து வருகிறோம்'' என்கிறார் திட்டங்களைச் செயல்படுத்தும் சுதா சுப்பிரமணியன்.

 "பாத்வே'யில் சாதாரண மருத்துவர் முதல், மன நல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், உடலின் பாகங்களுக்கு ஊட்டமளிக்கும் பயிற்சிகள் தரும் மருத்துவர்கள், சிறப்புக் கல்வியாளர், உணவு ஆலோசகர், வேலைகள் கற்றுத்தரும் பயிற்சியாளர்கள், நரம்பியல் நிபுணர்கள் வரை அத்தனை பேரும் இருக்கிறார்கள். இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் "பாத்வே' உதவியை நாடி வருகிறார்கள்.

 ""நாங்கள் ப்ரி-வொகேஷனல் பயிற்சி, மற்றும் வொகேஷனல் பயிற்சி என்று இரண்டாகப் பிரித்து பயிற்சிகள் அளித்து வருகிறோம். வீட்டில் இருந்தபடியே பயிற்சி பெறும் திட்டமும் இருக்கிறது. மறுவாழ்வுத் திட்ட நிபுணர், குழந்தையின் பெற்றோர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவருக்கு தேவையான பயிற்சிகளை அளிக்கிறார். வீட்டிலேயே பெற்றோர் அந்தப் பயிற்சியைக் குழந்தைக்கு அளிக்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குழந்தையை "பாத்வே'க்கு அழைத்து வந்து காண்பித்தால் போதும். அதனால், குழந்தையின் நலனில் குடும்பம் ஈடுபடுகிறது. சிகிச்சை முறையைக் குடும்பத்தினர் நன்கு அறிந்து கொள்கின்றனர். குழந்தைக்காக ஆகும் செலவும் குறைவு'' என்கிறார் பிரசாத்.

 எத்தனை வகை மலர்களை இவர்கள் வளர்த்து உருவாக்குகிறார்கள்? எத்தனை வகை வாழ்த்து மடல்களை இவர்கள் தயாரித்து அளிக்கிறார்கள்? வொகேஷனல் ட்ரெயினிங் எனப்படும் வேலைகளுக்கான பயிற்சி அளிப்பதற்காகவே, "பாத்வே'க்கு, மும்பை டைகர் இன்டஸ்ட்ரிஸ் பெரிய அளவில் ஷெட் ஒன்றை மரவேலைப்பாடுகளுக்காகக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அகிலி கிராமத்தில் உள்ள பாத்வே விவசாயப் பண்ணையிலிருந்து நெல், மிளகாய், மிளகு, தேங்காய், வேர்க்கடலை, மாங்காய், எலுமிச்சம்பழம், காய்கறிகள் என்று உற்பத்தி செய்து

 வருகிறார்கள். ஆகஸ்ட் 2002லிருந்து, "ஏழைகளுக்கு ஏழைகளின் உதவி' என்ற திட்டத்தில், சுற்றுவட்டாரத்திலுள்ள 100 பேருக்கு ஐந்து கிலோ அரிசி இலவசமாக அளித்து வருகிறார்கள்.

 ""மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு எங்கள் "பாத்வே' புதிய பாதையை அமைத்துக் கொடுக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. பிறரைப் போல தாங்களும் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையைத் தருகிறது'' என்கிறார் "பாத்வே' நிறுவனர் பிரசாத்.

முழு கட்டுரையைப் படிக்க →