முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பசுமை "ஜோடி'!

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், ஒட்டுமொத்த இளைஞர் நலப் பெருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இவர்களின் பக்கம்தான் அதிகக் கூட்டம். மதுரையைச் சேர்ந்த கேசவராஜும், யசோதையும்தான் அந்த பரபரப்பு ஜோடி.

Updated On : 7 அக்டோபர், 2012 at 6:39 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:39 AM

திருச்சியில் 3 நாள்கள் நடைபெற்ற இளைஞர் நலப் பெருவிழாவில் ஒரு பக்கம் இளம் ஜோடியொன்று உணவு தயாரிப்பில் பரபரப்பாக இருந்தது. உடல் நலத்தைப் பேணுவது குறித்த டாக்டர்களின் உரைகள், காட்சிப்படுத்தும் அரங்குகள் ஒரு பக்கம் என்றால், பாரம்பரிய உணவு வகைகளைச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்பதை உணவு விற்பனையுடன் அந்த ஜோடி விளக்கிக் கொண்டிருந்தது.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், ஒட்டுமொத்த இளைஞர் நலப் பெருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இவர்களின் பக்கம்தான் அதிகக் கூட்டம். மதுரையைச் சேர்ந்த கேசவராஜும், யசோதையும்தான் அந்த பரபரப்பு ஜோடி.

30 வயது நிரம்பிய கேசவராஜ், நிதி மற்றும் கட்டுப்பாட்டுப் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர். இவரது மனைவி யசோதை, 25 வயது நிரம்பிய, மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் எம்பிஏ பட்டதாரி.

Advertisement

சரி, இவர்களுக்கும் உடல் நலத்தைக் காக்கும் உணவு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கும் என்ன சம்பந்தம்? நியாயமான கேள்வியே. இனி அவர்களே விவரிக்கிறார்கள்.

""மதுரையிலுள்ள காந்தி மியூசியத்தில்தான் எளிய முறையில் ஆரோக்கியமான உணவு தயாரிப்பதைக் கற்றுக் கொண்டோம். "பசுமை உலகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கி, இந்த உணவு முறை, வாழ்க்கை முறை இவற்றைப் பரப்பி வருகிறோம்.

வெங்கடேசுவரா திருமண மண்டபம், பசுமை பருகுநீர், இயற்கை அங்காடி இவையே இப்போது பிரதான தொழில். தண்ணீர் தட்டுப்பாடுதான் நாம் விரைவில் சந்திக்கப்போகும் மிகப்பெரிய அபாயம்.

மதுரையில் வைகையைவிடவும் பழைமையான பெரிய நதியொன்று (கிருதிமாலயா!) இப்போது கழிவுநீர் கால்வாயாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் ஓரத்தில் இருந்து தண்ணீர் எடுக்கிறோம். பல்வேறு இயற்கையான சுத்திகரிப்புக்குப் பிறகு, அதிமதுரம், வெட்டிவேர், துளசி சேர்க்கப்பட்ட "பசுமை பருகுநீர்' தயாரித்து விற்பனை செய்கிறோம்.

பன்னாட்டு நிறுவனங்களின் தண்ணீரில் சுவையைக் கூட்டுவதற்காக- இளநீர் சுவை உருவாக்கத்துக்காக ரசாயனங்களைக் கலக்குகின்றனர். அதுதான் உடலுக்கு கேடு.

ரசாயன உரம் இடப்படாத இயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கப்பட்ட அரிசி, பருப்பு, கேழ்வரகு, கொள்ளு, சோளம், குதிரைவாலி, கம்பு, வரகு, சாமை, திணை, வெட்டிவேர், தேங்காய், எள் போன்றவற்றை விளைவிக்கிறோம். இவற்றிலிருந்து கைக்குத்தல் அரிசி, அனைத்து வகை எண்ணெய், மாவு வகைகளைத் தயாரிக்கிறோம்.

இவற்றுடன், சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் சீவல், அதிரசம், முறுக்கு, பிஸ்கெட் போன்றவையும் எங்களிடம் விற்பனைக்கு உள்ளன. இவையனைத்தையும் பசுமை உலகம் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ல்ஹள்ன்ம்ஹண்ன்ப்ஹஞ்ஹம்.ஸ்ரீர்ம்) வாங்கலாம்.

இத்துடன், இந்த சிறுதானியங்களில் இருந்து சாம்பார் சாதம், தயிர் சாதம், வெண் பொங்கல் போன்றவற்றை எளிமையாகத் தயாரிக்க முடியும். கைக்குத்தல் அரிசியில் இருந்து வெஜிடபிள் பிரியாணி தயாரிக்கிறோம்.

மேலும், சிறுதானியங்களின் சீவல்களைக் கொண்டு வகைவகையான இனிப்பு மற்றும் கார சிற்றுண்டிகளை சில நிமிடங்களில் தயாரிக்க முடியும். வழக்கமான தோசை மாவுடன் அல்லது கோதுமை மாவுடன் சிறுதானியங்களின் மாவுகளையும் சேர்த்து ஏறத்தாழ 100 வகையான தோசை வகைகளைத் தயாரிக்க முடியும்.

இவற்றுடன் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப், மூலிகை டீ போன்றவையும் எங்களது மெனுவில் உண்டு.

இந்த உணவுகளை தற்போது மதுரையில் நண்பர்களின் தேவைக்கேற்ப தயாரித்து வழங்குகிறோம். என்றாலும், தமிழ்நாடு முழுவதும் பசுமை உணவகங்களைத் தொடங்கும் திட்டமும் இருக்கிறது. மருந்து என்று தனியாக எதுவும் இல்லை. உண்ணும் உணவே மருந்து.

மாடி வீடுகளில் பசுமைத் தோட்டம் உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். மேலும், எந்த நேரமும் மின்சாரத்தையே நம்பியிராமல், எளிமையான சோலார் மின் உற்பத்திக்கும் எங்களிடம் ஆலோசனைகளைப் பெறலாம்.

தண்ணீரைப் போலவே எதிர்காலத்தில் மின்சாரம் கேள்விக்குறியான ஒன்றாக இருக்கும். மாற்று முறைகளை இப்போதிருந்தே பயன்படுத்தத் தொடங்க வேண்டும். பாண்டிச்சேரியில் மின்கலத்தில் இயங்கும் வாகனங்கள் புழக்கத்தில் உள்ளன. இந்த மின்கலத்தையும் சோலார் மின் சக்தி கொண்டு மின்னூட்டம் செய்து கொள்ளலாம்.

"பயோடீசல்' தயாரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இத்தனைத் திட்டங்களுடன் விரைவில் தனியார் நிறுவனம் ஒன்றைப் பதிவு செய்ய இருக்கிறோம். நிச்சயமாக இது தொண்டு நிறுவனமாகவோ, அறக்கட்டளையாகவோ இல்லை. பசுமை சேவையுடன் இணைந்த வியாபாரம்தான்'' என்கின்றனர்.

"மாமா... மாமா...' என்றழைக்கும் யசோதையும், "யசோ... யசோ...' என்றழைக்கும் கேசவராஜும் நீண்ட திட்டங்களுடன் நல்லதொரு பசுமைப் பயணத்தைத் தொடங்கியிருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது!

படம்: தேனாரமுதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.