பட்டாபி - 80 ஸ்ருதி - 30
இசை-நடனம் பற்றி மட்டுமே எழுத ஒரு பத்திரிகையா ரொம்ப நாள் ஓடாது..!' என்று, 30 வருடங்களுக்கு முன் பட்டாபிராமனிடம் சொன்னவர்கள், இன்று எங்கே இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால் "ஸ்ருதி'
இசை-நடனம் பற்றி மட்டுமே எழுத ஒரு பத்திரிகையா ரொம்ப நாள் ஓடாது..!' என்று, 30 வருடங்களுக்கு முன் பட்டாபிராமனிடம் சொன்னவர்கள், இன்று எங்கே இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால் "ஸ்ருதி' பத்திரிகை ஒவ்வோர் இதழும் மெருகேறி, பளபளவென்று மாதம் தோறும் வருவதைப் பார்க்கிற போது, பட்டாபி ராமனின் துணிகரமான முயற்சி வீண்போகவில்லை என்று உறுதியாகத் தெரிகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு கௌன்சிலில், பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு, சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் சென்னை திரும்பினார் டாக்டர் என். பட்டாபிராமன். சபாக்களில் அவர் கச்சேரிகள் கேட்க வந்தபோது, அவரை ரசிகராக மட்டுமே பலர் எண்ணினார்கள். ஆனால் அவர் தமது சின்ன நோட்டுப்புத்தகத்தில் குறிப்புகள் எடுத்துக்கொண்டு போவதைப் பார்த்தவர்கள், இவர் ஏதோ திட்டம் போட்டுக்கொண்டுதான் இங்கே வந்திருக்கிறார் என்று ஊகிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் ஊகம் சில மாதங்களிலேயே உண்மையாகப் போய்விட்டது.
மாண்டலின் சீனிவாஸ் பற்றியும், டி.கே. பட்டம்மாள் பற்றியும் விரிவான பேட்டிகளுடன் முப்பது ஆண்டுகளுக்கு முன், ஓர் அக்டோபர் மாதம் "ஸ்ருதி' முதல் இதழ் வெளியான போது, அட, வெறும் பொழுது போக்கு அம்சங்கள் என நாம் நினைத்துக்கொண்டிருந்த இசையிலும், நடனத்திலும் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என்று நிமிர்ந்து உட்கார்ந்து கவனத்தைத் திருப்பியவர்கள் சில ஆயிரம் பேர்.
பத்து ஆண்டுகளுக்கு முன் பட்டாபிராமன் தம் எழுபதாவது வயதில் திடீரென்று காலமானபோது, ஸ்ருதி நண்பர்கள் பட்டாபியின் லட்சியம் பாதியில் நின்றுவிடக்கூடாது என்று தீர்மானித்தார்கள். பத்திரிகையாளர் கே.வி. ராமனாதன் ஆசிரியர் பொறுப்பேற்க முன்வந்தார். "சன்மார்' நிறுவனம், ஸ்ருதி பத்திகையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இந்தப் பின்னணியில் ஸ்ருதியின் 30ஆவது ஆண்டுவிழாவையும், பட்டாபிராமனின் 80ஆவது பிறந்த நாளையும் மூன்று நாட்களுக்குக் கொண்டாடியது "ஸ்ருதி' அமைப்பு.
முதல் நாள் நிகழ்ச்சியில் நடனக் கலைஞர்கள் சாந்தா மற்றும் தனஞ்செயன் தம்பதியும், மூத்த கர்நாடக இசைப் பாடகி ஆர். வேதவல்லியும் முக்கிய விருந்தினராக கௌரவிக்கப்பட்டனர். தொல்பொருள் மற்றும் சரித்திர ஆய்வாளர் டாக்டர் சித்ரா மாதவன் சிதம்பரம் கோயில் பற்றிப் புகைப்படங்களுடன் ஒரு சொற்பொழிவு செய்ய, முத்துசாமி தீட்சிதரின் "ஆனந்த நடன பிரகாசம்', கோபாலகிருஷ்ண பாரதியின் "இதுதானோ தில்லை ஸ்தலம்' மற்றும் "நடனம் ஆடினார்' என்று சிதம்பரத்துக்கே உரித்தான கீர்த்தனைகளை பாரதி ராமசுப்பன் பாட, ரோஜா கண்ணன் அவற்றுக்கு மிகைப்படுத்தாத நடன வடிவம் தந்தார். (இடையே தேவாரமும், திருமங்கை ஆழ்வார் பாசுரமும் இனிமையாக இணைந்தன. வயலினில் கலையரசன் வாசித்த பெஹாக் ராகமும், மிருதங்கத்தில் விஜயராகவனின் உருட்டல்-மிரட்டல் இல்லாத வாசிப்பும் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.)
இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு கோபாலகிருஷ்ண காந்தி தலைமை வகித்தார். சாதாரணமாக நிகழ்ச்சிக்கு முன் பேச்சு இருக்கிறது என்றாலே சற்றுத் தாமதமாகத்தான் ரசிகர்கள் வருவார்கள். ஆனால் காந்தி விஷயத்தில் அது நேர் எதிர். அவருடைய பேச்சில் இருக்கும் நகைச்சுவையும், அற்புதமான வார்த்தை பிரயோகங்களும் சிரிக்கவைத்து, சிந்திக்கவும் வைப்பவை. மும்பை ராஜராஜேசுவரி பரதநாட்டியப் பள்ளியின் தலைமை நடன ஆசான் கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு ஈ. கிருஷ்ணய்யர் விருதும், மூத்த கர்நாடக இசைப்பாடகி சுகுணா புருஷோத்தமனுக்கு வேலூர் கோபாலாசாரியார் விருதும் வழங்கப்பட்டன. (பொன்னாடையையும், பதக்கத்தையும் ஏற்றுக்கொண்ட நடன ஆசியர் கல்யாணசுந்தரம், பரிசுத் தொகையை மேடையிலேயே திரும்ப வழங்கியதுதான் மிகவும் நெருடலாக இருந்தது. கௌரவத்தை ஏற்பது என்று ஒப்புக்கொண்டபிறகு, பரிசுத் தொகையையும் ஏற்பதுதான் சபை மரபு. வசதி இருக்கிறது, இல்லை என்பதை எல்லாம் வைத்து ஒருவருக்கு கௌரவம் அளிக்கப்படுவதில்லை. மேடையிலேயே திரும்பக் கொடுப்பது நாகரிகம்தானா என்று நமக்குத் தெரியவில்லை. சங்கீத நாடக அகடமியோ, மியூசிக் அகடமியோ பரிசுத் தொகை தந்த போது இப்படி செய்திருக்க முடியுமா?) முசிறி அவர்களின் பாணி பற்றி சுகுணா புருஷோத்தமன் தன் மாணவி கே. காயத்தியுடன் வழங்கிய இசை-விளக்கத்தில், குருவின் பாணியில் குறிப்பிடத்தகுந்த பாவ சங்கீதம், நிரவல், சுவரங்களைப் பாடும் முறை முதலிய சிறப்பான அம்சங்களை வெளிப்படுத்தினார்.
ஸ்ருதியின் 30ஆண்டுப் பயணத்தை ஒரு பதினைந்து நிமிட ஒளிப்படமாகத் திரையிட்டார்கள். எழுத்தாக்கம் வி. ராம் நாராயண் என்பதும், அதற்கு ஒலிவடிவம் தந்தது அகிலா ராம் நாராயண் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியவை. (இரண்டாம் நாள் வரவேற்புரையிலும் ராம் நாராயணின் பேச்சுத் திறமை பளிச்சிட்டது.)
நிறைவு நாள் நிகழ்ச்சியாக மூன்று பாணி "சாவ்' நடன நிகழ்ச்சிகளை வழங்கினர் ஷஷாதர் ஆச்சார்யா குழுவினர். சாவ் நடனம் என்பது இந்தியாவின் கிழக்கேயுள்ள பகுதிகளில் நிலவிவரும் நடன பாணி. அதில் செராய்கெல்லா, மயூர்பஞ்ச், மற்றும் புருலியா ஆகிய இடங்களில் இவ்வகை நடனம் எப்படி வழங்கப்பட்டுவருகிறது என்பதை எடுத்துக்காட்டும் அபூர்வ நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது. சங்கீத நாடக அகடமியின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்ட நிகழ்ச்சி இது. (சட்டீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்கத்தைப் பற்றிப் படிக்கும்போதெல்லாம் மாவோயிஸ்டுகள் பற்றித்தான் செய்திகள் வெளியாகின்றன. இப்படிப்பட்ட அழகியல் உணர்ச்சி கொண்ட அற்புதமான கலைஞர்கள் பற்றி யாரும் பேசுவதில்லை)
ஸ்ருதியின் தரம் உயர்தரம். நோக்கம் உன்னத நோக்கம். மொழி நடை "ஆகா' போட வைக்கிற நடை. தாளும் அச்சும் வண்ணப் படங்களும் அசர வைக்கிற ரகம். பட்டாபி ராமன் பிள்ளையார் சுழி போட்டார். ஸ்ருதி பரிவாரம் அவரைப் புரிந்துகொண்டு, அவர் பாணியிலேயே பத்திரிகையை நடத்தி வருவது அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.