பழங்குடியின மக்களான தோடரின மக்களின் பிரசித்தி பெற்ற கலைகளுள் ஒன்றான எம்பிராய்டரி கலையைப் பாதுகாக்க தொடர்ந்து எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் அனைத்து தரப்பினராலும் வரவேற்கக்தக்கவையாக அமைந்துள்ளன.
பழங்குடியினர் என்றாலே அவர்கள் இயற்கையை மட்டுமே வழிபடுபவர் என்ற கருத்து உள்ளது. அதிலும் இருளையும், ஒளியையும் அவர்கள் வணங்கும் வகையில் சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களே அவர்களது பிரதான நிறங்கள் எனவும் கூறப்படுவதுண்டு.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களான தோடரின மக்கள் பயன்படுத்தும் எம்பிராய்டரி கலையில் கறுப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் பிரதான இடத்தைப் பெற்றவையாகும். இந்த நிறங்கள் "ஸ்காண்டிநேவியன்' நிறங்கள் என அழைக்கப்படுவதால் இக்கலை ஆங்கிலேயரிடமிருந்து நீலகிரிக்கு பரவியதா என்ற விவாதமும் தற்போது தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே தோடரின பழங்குடிகள் வசித்து வருகின்றனர். பூத்துக்குளி என அழைக்கப்படும் தங்களது உடலின்மீது போர்த்தப்பட்டுள்ள சால்வையில் விதவிதமான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் அமைத்திருப்பர்.
இந்த சால்வையுடனேயே எப்போதும் காட்சியளிக்கும் தோடரின மக்கள் இக்கலையை தங்களது வழிபாட்டுக்கு உரியதாகவே வணங்கிப் போற்றுகின்றனர்.
தங்களது ஆடை மற்றும் சிகை அலங்காரத்திற்காகவே தனி சிறப்பிடம் பெற்றவர்கள் தோடரின பழங்குடி மக்கள். இவர்களது எம்பிராய்டரி கலைத்திறன் சர்வதேசப் புகழ் வாய்ந்ததாகும். இந்நிலையில் தோடரின மக்களின் பிரசித்தி பெற்ற கலையான எம்பிராய்டரி கலையை மேலும் பிரபலமாக்கும் வகையில் இக்கலையைக் குறித்து தோடரினத்தைச் சேராதவர்களுக்கும் பயிற்சியளிக்கும் முயற்சியில் மத்திய அரசு நிறுவனமான "டிரிப்பெட்' இறங்கியிருக்கிறது.
தோடரின மக்களின் கலைத்திறனை விவரிக்கும் வகையில் அமைந்துள்ள எம்பிராய்டரி கலைத்திறன் தொடர்பாக மானுடவியல் ஆய்வாளர்களிடையே இருவேறு தகவல்கள் உள்ளன. நீலகிரிக்கு முதன்முதலாக வந்த ஆங்கிலேயர்கள், தங்களது நாட்டின் சிறப்பம்சமான எம்பிராய்டரி கலையை நீலகிரி மாவட்டத்திலிருந்த தோடரின மக்களுக்கும் கற்றுத் தந்ததாகவும், அதை அவர்கள் மிகச்சிறப்பாக கற்றுக்கொண்டு செயல்பட்டதால் ஆங்கிலேயரின் வெளியேற்றத்துக்கு பின்னரும் தோடரின மக்களின் எம்பிராய்டரி கலை சிறப்பானதாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் நீலகிரிக்கு ஆங்கிலேயரின் வருகை தொடங்குவதற்கு முன்னதாக எடுக்கப்பட்டிருந்த தோடரின மக்களின் புகைப்படங்களில் அவர்கள் போர்த்தியிருந்த சால்வைகளில் எவ்வித வேலைப்பாடும் இல்லாமல் எளிமையாகக் காட்சியளித்ததாகவும், அதனால், ஆங்கிலேயர்களாலேயே இவர்களுக்கு எம்பிராய்டரி கலை கற்றுத்தரப்பட்டிருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கின்றனர்.
ஆனால், தோடரின மக்களோ தங்களது உயிருக்கும் மேலாக இந்த எம்பிராய்டரி கலையை நேசிப்பதாகவும், தங்களது பிறப்பிலிருந்து இறப்பு வரை நேரடியாக தொடர்புள்ள எம்பிராய்டரி கலை தங்களது பாரம்பரிய கலை எனவும் கூறுகின்றனர். இது
தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வந்தாலும், தோடர்கள் இந்த கலையை உலகம் முழுதுமே பிரசித்தி பெற்ற கலையாக மாற்றியுள்ளனர் என்றால் மிகையாகாது.
உதகையில் இயங்கிவரும் "ஷாலோம்' மகளிர் சுயஉதவிக் குழுவினர் இப்பயிற்சிக்கான பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பயிற்சியில் 16 வயதிலிருந்து 95 வயது வரையிலான தோடரின மக்களுடன் பிற இன மக்களும் இணைந்துள்ளனர். இவர்கள் சால்வை, துப்பட்டா, மப்ளர், செல்போன் பவுச், பர்ஸ், டேபிள் கிளாத் போன்றவற்றை உருவாக்குகின்றனர். நீண்ட காலம் நிலைக்கக் கூடியது என்பதால், தோடரின மக்களின் எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் அமைந்துள்ள இந்த வகை பொருட்கள் அனைத்து தரப்பினராலும் வெகுவாக வரவேற்கப்படுகின்றன.
""இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினருக்கும், நீலகிரியில் வசிக்கும் பழங்குடியினருக்கும் இந்த எம்பிராய்டரி கலைத்திறனில் ஒற்றுமையுண்டு. ஆனாலும், தோடரின மக்களின் வேலைப்பாடு துண்டின் இருபுறமும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது, மற்றவர்களின் வேலைப்பாட்டில் ஒருபுறம் மட்டுமே எம்பிராய்டரி வேலைப்பாடுகளைப் பயன்படுத்த முடியும்'' என்றார் "ஷாலோம்' மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநரான ஷீலா பவுல்.
தோடரின மக்கள் இயற்கையை மட்டுமே வழிபடுபவர்கள் என்பதால் சூரியன், மலர்கள் போன்றவற்றையே தங்களது எம்பிராய்டரி முறையில் கையாளுவதாகவும், உதகையில் தயாரிக்கப்படும் இத்தகைய கலைப்பொருட்கள் சென்னை மற்றும் பெங்களூர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நாட்டின் பிற இடங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஷீலா பவுல் தெரிவித்தார்.
ஒரு சால்வையை உருவாக்குவதற்கு குறைந்தது 3 மாதங்கள் வரை பிடிக்கும். அதே
நேரத்தில் ஒரு சால்வையின் விலை குறைந்தது ரூ.6,000லிருந்து ரூ.10,000 வரை
விற்பனையாகிறது.
தோடரின மக்களைப் பொறுத்தமட்டில் பூத்துக்குளி சால்வைகள் அவர்களது வழிபாட்டுக்குரியவை என்பதால் குழந்தை பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்து முக்கிய சடங்குகளிலும் பூத்துக்குளி சால்வைகளே முக்கிய இடத்தை வகிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.