தமிழ் ஆராய்ச்சியில் தான் ஈடுபட்ட பிறகு, தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடுவது உ.வே.சா. வாழ்க்கையில் ஒரு முக்கியமான வேலையாகிவிட்டது. அச்சிட்ட புத்தகமோ, அச்சிடாததோ எதுவானாலும் சுவடியின் உருவத்திலே காணும்போது ஏதோ தெய்வத்தின் உருவத்தைக் காண்பது போலவே அவர் எண்ணுவது வழக்கம். சுவடிகள் தேடிச் செல்வதை முறையாகவே செய்து வந்தார். தனக்கு அதுவே தீர்த்த யாத்திரையாகவும் தல யாத்திரையாகவும் அமைந்ததாகச் சொல்வார் உ.வே.சா.
சேலம் ராமமூர்த்தி முதலியார் என்ற பெருமகனார் கும்பகோணத்தில் நீதிபதியாக இருந்தவர். அந்தச் செல்வச் சீமானை திருவாவடுதுறை மடத்தின் சார்பாக உ.வே.சாமிநாதையர் சந்தித்தார்.
உ.வே.சா. கற்ற நூல்களையெல்லாம் கேட்டறிந்தார் நீதிபதி. இறுதியில் தமிழாசிரியர் கேட்டறியாத நூல் ஒன்றின் ஓலைச்சுவடியை அவரிடம் கொடுத்தார் அந்த நீதிபதி. அதுதான் சீவகசிந்தாமணி.
திருத்தக்கத் தேவர் எழுதிய அந்த நூல் ஒரு சமண நூல். சைவ மடத்திலேயே பெரும்பொழுதைக் கழித்த சாமிநாத ஐயருக்கு, சமண மதநூலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்றாலும், தெரிந்து கொள்வதற்காக ஓயாது பாடுபட்டார்.
மூச்சடக்கிக் கடலில் மூழ்கி எழுந்தால்தானே முத்து கிடைக்கும்? அதனால் அவர் சமண மதத்தைச் சார்ந்த சந்திரநாதன் செட்டியாரையும், அவரது உறவினரான தரணி செட்டியாரின் தமக்கையரையும் சந்தித்து, சிந்தாமணியில் தோன்றிய சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
பல நூல்களைக் கற்றறிந்த பெரும் புலவராக இருந்தும், அவர் கேள்வி கேட்ட பாங்கறிந்து, அவருக்குப் "பவ்ய ஜீவன்' என்னும் பட்டத்தை வழங்கினார் தரணி செட்டியாரின் தமக்கையார். தமிழ்ப் பேராசிரியர் சாமிநாதையர், தம் வாழ்நாளில் பெற்ற முதற் பட்டமே "பவ்ய ஜீவன்' என்பதுதான்.
"சீவகசிந்தாமணி' நூலைப் படித்துப் பொருள் கூறினார் பவ்ய ஜீவன் சாமிநாதையர். அது கேட்டு மகிழ்ந்த நீதிபதி ராமசாமி முதலியார், ""இந்த நூலை நீங்களே அச்சிட்டு, தமிழ்த்தாயின் திருவடிகளிலே புத்தகமாக அர்ப்பணியுங்கள்'' என்று அன்புடன் கூறி, அதற்கான பொருளுதவியும் செய்தார்.
1887 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் (ஐப்பசி மாதம்) சீவக சிந்தாமணி நூல் தமிழ் கூறு நல்லுலகமெல்லாம் புத்தகமாகப் பவனி வந்தது. இந்த ஆண்டு சீவக சிந்தாமணி அச்சேறிய 125 ஆவது ஆண்டாகும்.
""சிந்தாமணியே என்னுடைய தமிழ் நூற்பதிப்பில் முதல் அரும்பு. வழக்கொழிந்த பழம் தமிழ் நூல்களை அறிவதற்கும் ஆராய்வதற்கும் அச்சிடுவதற்கும் என் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி ஊக்கமூட்டியவை அந்த நூலும் அதன் உரையுமே.
தமிழ்த் தொண்டினால் இன்பம் உண்டு என்னும் உண்மையை எனக்கு முதன் முதலில் வெளிப்படுத்தியது அந்த நூலே. முதல் முயற்சியிலே அடையும் சிரமங்கள் அளவிடற்கரியது. சிந்தாமணியைப் போன்ற நூல்கள் தமிழ்நாட்டில் வழங்காத அக்காலத்தில் அதன் நடையே ஒரு தனிப் பாஷை போல் இருந்தது. அதன் உரையோ பின்னும் புதியதாகவே தோன்றியது. அதில் உள்ள விஷயங்களோ ஜைன சமயத்தைச் சார்ந்தவை. சைவம், அத்வைதம், வைணவம் என்னும் மூன்று சமயக் கருத்துகளே தமிழ்நாட்டில் அதிகமாக வழங்கின.
ஜைன சமயத்தைப் பற்றி அறிந்தவர்களையோ, கூறும் தமிழ் நூல்களையோ காண்பது அரிதாக இருந்தது'' இப்படிச் சொல்லும் உ.வே.சா. இந்து மதத்தவராக இருந்தாலும் ஜாதி சமயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஜைனமத நூலைத்தான் முதன்முதலில் பதிப்பித்தார்.
தேவருலகத்தில் உள்ள சிந்தாமணி கேட்டவற்றையெல்லாம் கொடுக்கும் என்பர். கும்பகோணத்தில் ஜில்லா முன்சீபாயிருந்த சேலம் ராமசாமி முதலியார், ஐயரவர்களிடம் கொடுத்த சிந்தாமணிப் பிரதி உண்மையிலேயே எத்தனையோ அருமையான தமிழ் நூல்களை அடுத்தடுத்து வெளிவரச் செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.