உருவாகு... உருவாக்கு!
சுற்றுச்சூழலைக் கெடுக்கக் கூடாது என்ற விழிப்புணர்வு பெருகி வரும் காலம் இது. பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் என்று
சுற்றுச்சூழலைக் கெடுக்கக் கூடாது என்ற விழிப்புணர்வு பெருகி வரும் காலம் இது. பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் என்று எல்லாரும் சொல்கிறார்கள். பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்று எது? என்று கேட்பவர்களுக்கு, "காகிதம்' என்று சொல்லவில்லை, செய்துகாட்டுகிறார் மணிமேகலை.
சென்னை அடையாறு இந்திராநகரில் உள்ள அவருடைய வீட்டில் விதவிதமான சுற்றுச் சூழலுக்கு உகந்த கைவினைப் பொருட்கள் சூழ அமர்ந்து இருந்தவரிடம் பேசினோம்:
""பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் அழிவதில்லை. மண்ணோடு மண்ணாக மக்குவதில்லை. பூமியில் நீண்டநாட்களாகப் புதைந்து கிடந்து சுற்றுச் சூழலை நாசமாக்குகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நம்மால் முடிந்த எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்து நான் செய்யத் தொடங்கியதுதான் காகிதத்திலான பொருட்கள்.
சிறுவயதில் இருந்தே எனக்கு ஓவியத்திலும், கலைகளிலும் அதிக ஆர்வம். ஃபர் பொம்மைகள், செயற்கைப் பூக்கள், பானை அலங்காரம், ஓவியம் என ரொம்பவும் ஆர்வமாக இருந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் முழுக்க முழுக்க காகிதப் பொருட்களின் மீது என் கவனம் திரும்பியது.
நமக்குப் பயன்படக்கூடிய பொருட்கள் பலவற்றைக் காகிதத்தில் செய்ய முடியும். விதவிதமான பைகளைக் காகிதத்தில் செய்யலாம். சின்ன சாக்லேட்களைப் போட்டுக் கொடுக்கும் சிறிய பை முதல் பெரிய பைகள் வரை காகிதத்தில் செய்ய முடியும். அன்பளிப்புப் பெட்டிகள் செய்யலாம். எல்லாரையும் வியப்புடன் பார்க்க வைக்கும் மொய்க் கவர்களைத் தயாரிக்கலாம். வீட்டில் உள்ள பழைய செய்தித்தாளைச் சுருட்டி பேனா வைக்கும் ஸ்டாண்ட் செய்யலாம். மேஜையில் காபி டம்ளரை வைக்கும் காகித மேட் செய்யலாம். காகிதத்தில் அலங்கார மணிகள் செய்தால் மிக அழகாக இருக்கும்.
இவற்றைச் செய்ய முதலில் தேவை கலையில் ஆர்வமும், கற்பனைத் திறனும், முயற்சியும்தான்.
நான் தயாரித்த காகிதப் பொருட்களைக் கண்காட்சிகள் மூலமாகப் பிறருக்கு அறிமுகப்படுத்துகிறேன். விற்பனை செய்கிறேன். அதைவிட முக்கியமானது, காகிதப் பொருட்கள் தயாரிக்கும் கலையைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கிறேன்.
அதிலும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியுள்ளவர்களுக்கு, இலவசமாகப் காகிதப் பொருட்களைத் தயாரிக்கக் கற்றுக் கொடுக்கிறேன். அதற்காக ஏழைப் பிள்ளைகள் பயிலும் பள்ளிகளுக்குச் சென்று சொல்லிக் கொடுக்கிறேன். மீனவர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள பெண்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். பெரிய நிறுவனங்கள், கல்லூரிகள் அழைத்தாலும், அங்கு சென்று கற்றுக் கொடுக்கிறேன்.
காகிதப் பை செய்யும் கலையைக் கற்றுக் கொண்டால், குறைந்த முதலீட்டில் வருமானம் பெறலாம். பழைய செய்தித்தாள்களை வெட்டி மருந்து கவர்களைச் செய்து கடைகளில் கொடுத்தால் போதுமே! அப்புறம் ப்ரெüன் கவர்களைச் செய்யலாம். இன்னும் சிறிது நாளில் மொய்க் கவர்களைச் செய்ய ஆரம்பிக்கலாம். அன்பளிப்புப் பைகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். எவ்வளவுக்கெவ்வளவு கலைநேர்த்தியுடனும், கவர்ச்சியாகவும் நமது பொருட்கள் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு நல்ல விலை கிடைக்கும். லாபமும் கிடைக்கும்.
இப்போது நிறைய மகளிர் குழுக்கள் உள்ளன. அவை அடிக்கடி கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சிகளை நடத்துகின்றன. அவற்றுடன் தொடர்பு கொண்டு, அந்தக் கண்காட்சிகளில் காகிதக் கைவினைப் பொருட்களை வைத்தால், அவை விற்பனையாவதோடு, நிறையத் தொடர்புகளும் கிடைக்கும்.
நமக்குத் தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நீயும் உருவாகு, பிறரையும் உருவாக்கு என்பதுதான் என் லட்சியம். எனவே எனக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்க ஆர்வமாக இருக்கிறேன்.
பெண்கள் ஏதாவது ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொண்டால் கண்டிப்பாக ஜெயிக்கலாம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை'' என்கிறார் மணிமேகலை உறுதியாக.