மாளவிகா சருக்கையின் டாகுமென்டரி!
நியூயார்க் "லிங்கன் சென்டரி'ல் வரும் 2014இல் "டான்ஸ் ஆன் காமரா' விழாவில் "தி அன்ஸீன் சீக்வென்ஸ்" என்ற டாகுமென்டரிப் படம் திரையிடப்பட உள்ளது.
நியூயார்க் "லிங்கன் சென்டரி'ல் வரும் 2014இல் "டான்ஸ் ஆன் காமரா' விழாவில் "தி அன்ஸீன் சீக்வென்ஸ்" என்ற டாகுமென்டரிப் படம் திரையிடப்பட உள்ளது. இது பரதநாட்டியக் கலைஞர் மாளவிகா சருக்கை குறித்த ஆவணப்படம். (நாடக மொழியில் இதை சப்-டெக்ஸ்ட் என்பார்களாம். தமிழில் சொல்வதானால் மறைந்திருக்கும் செய்தி என்று வைத்துக் கொள்ளலாம்.)
குறும்படத்தை இயக்கிய சுமந்தரா கோசால், முன்பே தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் பற்றியும், அமிதாப்பச்சன் பற்றியும் குறும்படங்கள் தயாரித்த அனுபவம் உள்ளவர்.
ஒரு முறை நண்பர்கள் சிலருடன் மாளவிகா சருக்கையின் நடன நிகழ்ச்சிக்குச் சென்றதாகவும், அது ஏற்படுத்திய தாக்கம் தம்மை இந்தக் குறும்படம் எடுக்கத் தூண்டியதாகவும் கூறினார் கோசால். ""நான் முன்னே பின்னே பரத நாட்டியமே பார்த்தவனில்லை'' என்றார். அப்படித் திறந்த மனத்துடன் ஒரு கலைஞரைப் பார்க்கிற போது, அவருடைய மனசு எந்தப் பாதிப்பும் இல்லாததாக இருந்திருக்கக்கூடும். மாளவிகா அவரிடம் எதையும் வலியச் சென்று புகுத்தாததுதான் குறும்படத்தின் நேர்மைக்கு அடித்தளமாக இருந்திருக்கிறது.
டாகுமென்டரி என்பது திரை வடிவ சுயசரிதை மாதிரிதான். எதைச் சொல்வது, எதை விடுவது என்பது முக்கிய பாத்திரத்தின் தர்மசங்கடமான நிலை. நடந்ததை எல்லாம் திரைக்குக் கொண்டுவந்தால் ரசிகருக்குத் திகட்டிப் போய்விடும். அவரைப் புகழ்ந்து பேசும் காட்சிகள் இருந்தால் புகழ்ச்சிக்காகச் சேர்த்திருக்கிறார்கள் என்ற முத்திரை அதற்குக் குத்தப்பட்டுவிடும்.
நடன அல்லது இசைக்கலைஞர் பற்றிய டாகுமென்டரி என்றால் அழகுணர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்தாக வேண்டும். கலை நயம் தூக்கலாக இருக்க வேண்டும். எல்லவற்றுக்கும் மேலாக அறுபது நிமிடங்களுக்குள் அடக்கிவிட வேண்டும். ஜவ்வு மாதிரி இழுத்தால் பார்வையாளன் சுவாரசியம் தொய்ந்து
போய்விடும்.
சென்ற வாரம் மியூசிக் அகடமியில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்ட "தி அன்ஸீன் சீக்வென்ஸ்' நடனக் கலைஞர் மாளவிகா சருக்கையின் நடன வாழ்க்கையை 100 நிமிடங்களுக்கு ரசிகர்களுக்குக் கொண்டு சென்றது.
முதல் விமர்சனம், நூறு நிமிடங்கள் கொஞ்சம் அதிகம்தான் என்பது. இது திரைப்படம் முடிந்து வெளிவந்த பலரது கருத்தாக இருந்தது. அப்படி என்றால் அதிகமான காட்சிகளைத்தவிர்த்திருக்கலாம் என்பதுதான் நீளத்தைக் குறித்து வைக்கப்பட்ட விமர்சனம்.
இயக்குநர் சுமந்தரா கோசால் மொத்தம் எத்தனை மணி நேரத்துக்குப் படத்தைத் தயாரித்து, அப்புறம் நூறு நிமிடங்களுக்குக் குறைத்தார் என்பது எடிட்டிங்கைக் கையாண்டவருக்குத்தான் தெரியும்.
உரையாடல்கள், நடன நிகழ்ச்சிகள், பயிற்சி வகுப்புகள் என்று எல்லாவற்றிலிருந்தும் எடுத்து இழைக்கப்பட்ட குறும்படம் இது என்பதையும் மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது.
""இது மாளவிகா சருக்கையின் நடன வாழ்க்கை மட்டுமல்ல, பரத நாட்டியத்தின் துவக்க காலக் கதையிலிருந்து தொடங்குகிறது'' என்கிறார் இயக்குநர். அதனால் சற்றே பின்னோக்கிச் சென்று சரித்திரத்தையும் பார்க்க வேண்டியிருந்திருக்கிறது. சமூக சேவகி டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டியின் போராட்டத்துக்குப் பின், ஈ.கிருஷ்ணய்யரும், கலாúக்ஷத்ரா நிறுவனர் ருக்மிணி தேவியும் ஆர்வமுள்ள எல்லாப் பெண்களும் நடனக் கலை பயிலலாம், ஆடலாம் என்ற நிலையை உருவாக்கிக் கொடுத்த சரித்திரத்தை லக்ஷ்மி விசுவநாதன் வெளிப்படுத்திய பதிவுகள் காண்பித்தன.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொடங்கி பின்னணியில் மணியோசை கேட்க, பக்தர்கள் இப்புறமும் அப்புறமும் செல்ல, படமாக்கியிருப்பது உயிரோட்டத்துடன் இருக்கிறது. தன் தாயார் பற்றி மாளவிகா சொல்வது சற்று மிகையாக
இருக்கக்கூடும்.
ஆனால் அவர்தான் மகளுடைய வளர்ச்சியில் முழுதாக ஆளுமை செலுத்தியவர். தயாரிப்பின்போது, அவர் நோய்வாய்ப்பட்டிருந்ததை பின்னர் மாளவிகாவும் கோசாலும் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் வெளிப்
படுத்தினார்கள்.
இருந்தாலும், இடைவெளிகள் படப்பிடிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது தெரிகிறது.
மாணவி மைதிலி பிரகாஷுக்கு அவர் "நாகேந்திர ஹாராய த்லோசனாய' சுலோகத்துக்கு அபிநயம் செய்யச் சொல்லிக்கொடுப்பது மாளவிகா என்ற குருவின் கற்பனை வளத்தை வெளிப்படுத்துகிறது.
நாகத்தை அணிந்திருக்கும் சிவபிரானை மட்டுமல்ல, அந்த நாகத்தின் அசைவுகூட எப்படி நடனத்தில் வெளிப்பட வேண்டும் என்பதைச் சொல்ல, மாளவிகா எத்தனை மெனக்கெடுகிறார்.
பரதநாட்டியம் பற்றி அறிந்திராதவர்களும் அந்தக் கலையை ரசிக்கும் வகையில் இந்தக் குறும்படம் தயாரிக்கப்பட்டிருப்பதுதான் சிறப்பு. அதில் மாளவிகாவுக்கும் சுமந்தரா கோசாலுக்கும் சமமான பங்கு இருந்திருக்கிறது.