உணர்ச்சிகளும், சாகசங்களும் நிறைந்த ஹிதேந்திரனின் உடல் உறுப்பு தான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மலையாளத்தில் உருவாகி பலத்த வரவேற்பை பெற்ற படம் "டிராஃபிக்'. இப்படம் தற்போது தமிழில் "சென்னையில் ஒரு நாள்' என்ற பெயரில் படமாகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் தானமாக பெற்ற இதயத்தை சென்னையிலிருந்து வேலூருக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு செல்லுவதற்கான திட்டமிடல், செயலாக்கம், புத்திசாலித்தனமே இப்படத்தின் கதை. 24 மணி நேரத்தில் நடக்கும் கதையான இதில் சரத்குமார், ராதிகா, பிரகாஷ்ராஜ், இனியா, சேரன், பிரசன்னா, ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் கேரக்டர் குறித்து சரத்குமாரிடம் பேசுகையில், ""பத்திரிகை செய்தியாக மட்டுமே பலருக்கும் கடந்து போனது ஹிதேந்திரனின் சம்பவம். ஆனால் அதை படமாக்கிய தருணம் கனமானவை. மரணப் போராட்டத்தில் இருக்கும் ஒரு குழந்தையின் உயிரைக் காக்கும் காவல் துறை அதிகாரி சூரியப்பிரகாஷாக நான் நடிக்கிறேன். வழக்கமான சினிமாக்களிலிருந்து கொஞ்சம் விலகி இது மாதிரியான சினிமாவில் நடிக்கும் போது, மன திருப்தி எற்படுகிறது. மலையாளத்தில் அனுப் மோகன் நடித்த பாத்திரத்தில் நடிக்கிறேன்'' என்றார் சரத்குமார்.
கன்னடத்தில் உருவாகும் "நீர் டோஸ்' என்ற படத்தில் நடிக்க திவ்யாவிடம் பேசினார் இயக்குநர் விஜயபிரசாத். நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதையடுத்து மற்ற பணிகளில் ஈடுபட்டார் இயக்குநர். திடீரென்று அப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் திவ்யா. படத்தில் நடிக்க அட்வான்ஸ் எதுவும் தரவில்லை என்பதால் அப்படத்திலிருந்து விலகியதாகத் தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு அட்வான்ஸ் வழங்கப்பட்டது. அதன் பின் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி தந்தார் திவ்யா. இதில் நிம்மதி அடைந்திருந்த இயக்குநருக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. ஷூட்டிங் கிளம்ப சில நாள்கள் இருக்கும் போது, திடீரென்று தன் டிவிட்டர் பக்கத்தில் திவ்யா, ""நீர் டோஸ்' படத்தின் கதையை கேட்டேன். அதில் என் வேடத்துக்கு நியாயம் செய்து நடிக்க முடியாது''. என கூறியதுடன் அப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதனால் அவர் படத்தில் நடிப்பாரா? இல்லையா? என்பது இயக்குநருக்கு புரியாத புதிராக இருக்கிறது. ""கதை கேட்டு ஷூட்டிங் கிளம்பும் முன் படத்தை தவிர்த்து இருக்கிறார் திவ்யா. இருந்தாலும் வேறு ஒரு நடிகையை வைத்து ஷூட்டிங் தொடங்கும். அதன் பின் திவ்யாவின் முடிவை சம்பந்தப்பட்ட சங்கங்களின் பார்வைக்கு எடுத்து செல்வேன்" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் விஜயபிரசாத்.
நடன இயக்குநராக அறிமுகமாகி, நடிகராக உயர்ந்து இன்று இந்திய அளவில் முன்னணி இயக்குநராக இருக்கிறார் பிரபுதேவா. திருமண விவாகரத்து, நயன்தாராவுடன் காதல், அவருடன் பிரிவு என பல்வேறு பிரச்னைகளை எதிர் கொண்டிருக்கிறார். தற்போது ஹிந்தி படங்களை இயக்கி வரும் பிரபுதேவா, அண்மையில் தன் நடிப்பில் வெளியான "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்' 3 டி படத்தின் புரொமோஷனுக்காக சென்னை மீடியாக்களின் வெளிச்சத்துக்கு வந்தார். ""என் வாழ்வில் எல்லா விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சந்தித்து விட்டேன். அதை எதிர்கொண்டு சமாளித்தும் விட்டேன். அந்த அனுபவங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. பொதுவாக நான் அதிகம் பேச மாட்டேன். சாதித்தவைகள் எல்லாவற்றுக்கும் என் ஆர்வம்தான் காரணம். என்னுடைய வாழ்வதாரத்துக்காக எதையும் செய்யவில்லை. என் ஆர்வம்தான் என்னை முன்னெடுத்துச் செல்கிறது. எனக்கு எல்லாமே நடனம்தான். "வாய்ப்பு தருகிறேன் வா' என்றதால் நடிக்க வந்தேன். ஆர்வத்தால் மட்டுமே படம் இயக்க வந்தேன்'' என மனம் திறந்தார்
பிரபுதேவா.
இப்போதெல்லாம் பேட்மின்டன் விளையாடுவதில் அதிக ஆர்வம் செலுத்துகிறார் சமந்தா. ஒரே நேரத்தில் மணிரத்னத்தின் "கடல்', ஷங்கரின் "ஐ' படங்களில் நடிக்க சமந்தா தேர்வாகி இருந்தார். ஆனால் அப்படங்களிலிருந்து சமந்தா விலகினார். ஸ்கின் அலர்ஜி காரணமாக அவர் ஒய்வில் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் பொள்ளாச்சியில் ஷூட்டிங்கில் இருக்கும் அவர் மாலை நேரங்களில் பேட்மின்டன் விளையாடுகிறார். சிறு வயது முதலே பேட்மின்டன் விளையாடுவதில் சமந்தாவுக்கு விருப்பம் அதிகமாம். அதில் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து விட வேண்டும் என்ற இலக்கில் தீவிர பயிற்சிகளிலும் ஈடுபட்டாராம். இப்போது மீண்டும் தன் ஆர்வத்தை விளையாட்டு பக்கம் திருப்பி இருக்கிறார். போட்டிகளில் ஈடுபடுவதற்கான பயிற்சிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், சினிமா தவிர்த்து பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்கும் திட்டத்தையும் சமந்தா வைத்திருப்பதாக கூறப்படுகிறது. "'சினிமாவை தவிர விளையாட்டுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறேன். அதன் முடிவு என்ன என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்'' என தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சமந்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.