முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பயணம் முக்கியம்

இப்படிப் பார்த்துப் பார்த்து தான் ரசித்த காட்சிகளைத் தன்னுடைய "நிகான் ஈ 700' கேமிராவில் பதிவு செய்த புகைப்படங்களை சமீபத்தில் சென்னை, லலித் கலா அகாடமியில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:59 AM
பகிர்:

உடலில் ஊசியாய் இறங்கும் குளிர், இமயமலையின் வான்முட்டும் சிகரங்கள், சூரியனின் கதிர்களும் சிரமப்பட்டு ஊடுருவும் காடுகள், சுட்டெரிக்கும் பாலைவனம், உறைந்த பனிக்கட்டிக்குக் கீழே ஓடும் ஆறு, உறைந்திருக்கும் அருவி, விதவிதமான பூக்கள், உயிரினங்கள், பழங்குடியின மக்கள்.... இப்படிப் பார்த்துப் பார்த்து தான் ரசித்த காட்சிகளைத் தன்னுடைய "நிகான் ஈ 700' கேமிராவில் பதிவு செய்த புகைப்படங்களை சமீபத்தில் சென்னை, லலித் கலா அகாடமியில் கண்காட்சியாக வைத்திருந்தார் திருச்சியைச் சேர்ந்த மலையேறும் வீரரான ரமணன். அவரின் மனைவி விருந்தா ரமணனும் மலையேறும் வீராங்கனைதான். இருவரும் இணைந்தே மேற்கத்திய மலைத் தொடரிலும் இமாலயச் சிகரங்களிலும் ஏறியிருக்கிறார்கள்.
 "அறிவியல் மற்றும் சாகசக் குழு' என்னும் பெயரில் மலையேறும் பயிற்சியையும் இவர்கள் இளைஞர்களுக்கு அளித்து வருகின்றனர். மலையேறும் சாகசத்தில் ரமணனுக்கு 40 ஆண்டு அனுபவம் இருக்கிறது. ""என்னுடைய புகைப்படக் கண்காட்சியை 1983-ஆம் ஆண்டு தில்லியில் தொடங்கிவைத்தது, எவரெஸ்டில் முதன்முதலாக காலடி பதித்த டென்சிங்'' என்று கூறி நம் புருவத்தை உயர்த்துகிறார் ரமணன்!
 பெரும்பாலான காட்சிகளுக்கேற்ற கவிதைகளை விருந்தா ரமணன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். ரமணனின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியைச் சொல்கின்றது. கண்காட்சியில் நூற்றுக்கணக்கான படங்கள் இடம்பெற்றிருந்தன. அதிலிருந்து சில படங்கள்... சில செய்திகள்...
 ""ஒவ்வொரு முறை மலையேறுவதும் ஒரு த்ரில்லான அனுபவம்தான். நாங்கள் பார்த்த ரசித்த இயற்கையின் வைபவத்தை பகிர்ந்து கொள்வதுதான் இந்தக் கண்காட்சியின் நோக்கம். இமயமலையின் சிகரங்களில் எல்லா காலத்திலும் ஏறிவிடமுடியாது. ஜனவரி 10-லிருந்து பிப்ரவரி 10 வரை இமயமலையில் உற்பத்தியாகும் அருவிகள், ஆறுகள், குளங்கள் அனைத்துமே உறைந்துவிடும். அருவியே உறைந்திருக்கும் அதிசயத்தை அங்கேதான் பார்க்கமுடியும். ஸôங்க்ஸ்கார் என்னும் ஆறு பதம் என்ற இடத்தில் உற்பத்தியாகி சிந்து நதியில் சங்கமமாகிறது. ஏறக்குறைய 160 கி.மீ. பயணப்படும் இந்த ஆறு பனிக்காலத்தில் உறைந்துவிடும். இந்த ஆற்றின் மீதே நடந்து மலையின் இன்னொரு பகுதியை அடையவேண்டும். பனிக்கட்டியாக இருக்கிறதே என்று அவசரப்பட்டு காலைவைத்துவிட்டால்... அவ்வளவுதான் அது உடைந்து ஆற்றில் விழுந்துவிடுவோம். விழுந்தால் ஒரு நிமிடத்தில் நம் உடலில் உள்ள ரத்தம் உறைந்துவிடும். மரணம் நிச்சயம். இமயமலையின் பல பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் துணையோடுதான் இதுபோன்ற இடங்களைக் கடக்கமுடியும். அவர்களுக்குத்தான் ஆற்றைக் கடப்பதற்கான வழி தெரியும்.ஏறக்குறைய இமயமலையின் 15 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் சிகரம் ஸ்ரீகாண்ட். இந்த இடத்தில் மலரும் பூவின் பெயர் பிரம்ம கமல். இந்தப் பூவைப் பறித்து சிவனை வழிபடுகின்றனர் இங்கிருக்கும் பழங்குடிகள். இமயமலையில் பகீரதன் தவம் செய்த இடத்தை "பகீரதன் வேலி' என்றே அழைக்கின்றனர்.
 இமயமலையில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெயர் ஓஸ்லா. இங்கிருக்கும் பழங்குடிகள் துரியோதனனின் வம்சத்தினர் என்று தங்களைக் கூறிக் கொள்கின்றனர். இவர்கள் வழிபடுவதற்கு துரியோதனன் கோயில் ஒன்றும் இருக்கிறது. இவர்கள் சிவனையும் வழிபடுகின்றனர்.
 சீனா - திபெத் பகுதியிலிருக்கும் இமயமலையில் வாழும் மக்களிடையே ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆடு மேய்ப்பதுதான் இவர்களின் முக்கியத் தொழிலாக இருக்கின்றது. இந்த இன மக்களில் முன் ஜென்மத்தை உணர்ந்து கொண்ட இவர்களின் இனத்தில் பிறந்த சிறுவனை "துல்கு' என்று அழைக்கின்றனர்.
 இந்தச் சிறுவன் சொல்லும் விஷயங்களை சரிபார்த்த பின்பே அவனை "துல்கு' என்று அழைக்கின்றனர். இப்படிப்பட்ட சிறுவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை. வழிபாட்டுக்குரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். இப்படிப் பல சம்பவங்கள் மனதில் நிழலாடுகின்றன...'' என்றார் ரமணன்.
 ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும்
 ஒவ்வொரு அனுபவம்
 சிலிர்க்கும்
 வியர்க்கும் - தாகத்தால் நா வறண்டு தவிக்கும்
 இலக்கை விட பயணமே
 சுவாரசியப்படுத்தும்!
 - என்னும் விருந்தா ரமணனின் கவிதை எல்லாப் புகைப்படங்களின் காட்சிக்கும் பொருளுரையாய்
 விளங்கியது!

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.