ஞாயிறு கொண்டாட்டம்

மாணவர்களின் மனசில் அயோத்தியா காண்டம்!

இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கை ஓட்டத்தில், இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் ஐ-பேட் கேட்பதிலும், ஃபேஸ்புக், டிவிட்டரிலும் தான் நேரத்தைச் செலவழிக்கின்றனர். இன்றைய மாணவர்களிடையே பாடப் புத்தகம் தவிர்த்து, நூலகம் சென்று படிக்கும் பழக்கம் அருகிவருவது கண்கூடான உண்மை.

ஆர். ஆதித்தன்

இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கை ஓட்டத்தில், இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் ஐ-பேட் கேட்பதிலும், ஃபேஸ்புக், டிவிட்டரிலும் தான் நேரத்தைச் செலவழிக்கின்றனர். இன்றைய மாணவர்களிடையே பாடப் புத்தகம் தவிர்த்து, நூலகம் சென்று படிக்கும் பழக்கம் அருகிவருவது கண்கூடான உண்மை. நூலகத்திற்கும், மாணவர்களுக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதை மறுதலிக்கச் செய்யும் வகையில், கோவையில், தமிழ் ஆர்வம் கொண்ட மாணவர்கள் பலர் இதிகாசங்களையும், தமிழ் இலக்கியங்களையும் படித்து மேடை ஏறி தங்களது சொல்லாற்றலால் அனைவரையும் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, நாளைய தலைமுறைக்கு ராமாயணம், மகாபாரதம் பற்றியும் எடுத்துச் செல்லும் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்தது, அண்மையில் நடந்த கோவை கம்பன் கழகத்தின் 41-ம் ஆண்டு விழா.

இதில், "அயோத்தியா காண்டத்தில் யாருடைய செயல்கள் கற்போர் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன?' என்ற தலைப்பில், மந்தரை, கைகேயி, தசரதன், இலக்குவன், பரதன், குகன் ஆகியோரின் கதாபாத்திரங்களை தங்களது கதை மாந்தர்களாக எடுத்துக் கொண்டு தங்களது பேச்சு வன்மையால் பார்வையாளர்களை ஈர்த்தனர் இளம் தலைமுறை மாணவர்கள். அவர்களிடம் ஒரு சிறிய நேர்காணல்...

இலக்குவன் கதாபாத்திரத்தின் பெருமையை எடுத்துக் கூறிய, கோவை, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படிக்கும் மாணவி எஸ்.தீபா கூறியது:

சிறிய வயதில் இருந்தே தமிழ் ஆர்வம் இருந்தது. பள்ளிகளில் படிக்கும்போதே பல போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளேன். மனப்பாடம் செய்து பேசுவதால் பல மேடைகளில் சரியாகப் பேச முடியவில்லை.

இதனால், எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்போ அல்லது கதாபாத்திரத்தையோ முழுமையாகப் படித்து புரிந்து தங்கு தடையின்றிப் பேசக் கற்றுக்

கொண்டேன்.

கம்ப ராமாயணத்தில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம் இலக்குவன். இதனால் இலக்குவன் குறித்து மேடையில் பேசி பாராட்டுகளைப் பெற்றேன். நூலகங்களுக்குச் சென்று படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். கம்ப ராமாயணம் மட்டுமல்லாது பிற தமிழ் புத்தகங்கள், கவிதைகளையும் படித்து வருகிறேன்.

மந்தரை குறித்துப் பேசிய கோவை, எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் படிக்கும் மாணவி எஸ்.உமாசங்கரி கூறியது:

என் சித்தி செல்வி, தனியார் கல்லூரி ஒன்றில் தமிழ்த் துறையில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அவரது ஊக்கத்தின்பேரில் தமிழ் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வந்தேன். சிறிய வயதில் ராமாயணக் கதையை மட்டும் கேட்டுள்ளேன். படித்தது

கிடையாது.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஓர் அரசியல் கட்சி ஏற்பாடு செய்த பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு பரிசும் பெற்றிருக்கிறேன். மாநில அளவிலான போட்டிகளிலும் பேசி சான்றிதழ் பெற்றுள்ளேன். இன்றைய மாணவர்களிடம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.

தசரதன் பற்றிப் பேசிய கோவை, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் கணிதப் பாடத்தில் பி.எச்டி. ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வரும் எம்.விவேக் பிரபு கூறியது:

தமிழில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்று எனது தந்தை கூறுவார். தமிழ் மீது அப்பாவுக்கு தீராத ஆர்வம். இதனால் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு பேசுவதற்கு ஆர்வம் ஏற்பட்டது.

இது தவிர, ஒரு சொட்டு கண்ணீர், இசைத் தமிழன், இளங்கலை முதலாம் ஆண்டு, அவனியைக் கவனி என நான்கு கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன்.

நான் எழுதுவதைப் பார்த்து, எனது நண்பர்களும் எழுத ஆரம்பித்துள்ளனர். பதிப்பகங்கள் வியாபார நோக்கில் செயல்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் படைப்புகளை வெளிக்கொணரும் வகையில், நானே சொந்தமாக கவி பதிப்பகத்தைத் தொடங்கியுள்ளேன். இதற்காக பல்வேறு கல்லூரி மாணவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறேன். நான் பி.எஸ்.சி. கணிதம், எம்.எஸ்.சி. கணிதம் படித்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே அஞ்சல் வழியில் பி.ஏ. தமிழ், எம்.ஏ. தமிழ் முடித்துவிட்டேன்.

பரதன் பற்றிப் பேசிய என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம். (சி.ஏ.) படித்து வரும் எஸ்.அகிலாண்டேஸ்வரி கூறியது:

பள்ளியில் படிக்கும்போது பெரும்பாலும் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளிலேயே கலந்துகொண்டு வந்தேன். கல்லூரியில் சேர்ந்த பிறகு ஆசிரியர்கள் எனது பேச்சுத் திறமையைப் புரிந்துகொண்டு தமிழில் பேச ஊக்கம் அளித்தனர்.

கல்லூரியின் தமிழ்த் துறை ஆசிரியர் செல்வி எனக்கு மிக உற்சாகம் அளித்து வருகிறார். கல்லூரியில் சேர்ந்து இதுவரை 20-க்கு மேற்பட்ட மேடைகளில் பேசி உள்ளேன். கம்ப ராமாயணம் மிகவும் பிடிக்கும். இதில், இலக்குவன் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்.

ஆனால் கம்பன் கழக நிர்வாகிகள் இலக்குவன் பற்றி வேறு ஒருவர் பேச இருப்பதால், பரதன் பற்றிப் பேச வேண்டும் என்றனர். பின்னர் பரதனைப் பற்றி முழுமையாகப் படித்து பேசினேன். எங்கள் கல்லூரி ஆசிரியர் ஏகாம்பரம், கம்ப ராமாயணம் புத்தகத்தைப் பரிசாக அளித்தார். அடுத்து ஒரு மேடையில் பேச அழைப்பு வந்துள்ளது. இதற்காக பெரியபுராணம் புத்தகத்தைப் படித்து வருகிறேன்.

கைகேயி பற்றிப் பேசிய கே.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பி.காம். (சி.ஏ.) படித்து வரும் கே.சிவகுமார் கூறியது:

சிறிய வயதில் இருந்தே எனக்கு தமிழ் ஆர்வம் இருந்தது. பேருந்தில் செல்லும்போது தமிழ் விளம்பர பலகைகளைப் பார்த்து தமிழை பிழையில்லாமல் எழுதக் கற்றுக் கொண்டேன். அதேபோல, டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து தமிழை நன்றாக உச்சரிக்கவும் பழகிக் கொண்டேன்.

கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டேன். நான் கலந்துகொண்ட 6 போட்டிகளில் தோல்வியுற்றேன். தோல்வியில் இருந்து மீளாத என்னை ஆசிரியர்கள் மேலும் ஊக்குவித்து பேச்சுப் போட்டிக்கு அனுப்பினர்.

அந்த வகையில் நான் 7-வதாக கலந்துகொண்ட பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றேன். இதுவரை 30 போட்டிகளில் கலந்துகொண்டு 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். பரிசாகப் பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர், காந்தி, அம்பேத்கர், அண்ணா பற்றிய புத்தகங்களைப் படித்துள்ளேன். கம்பன் கழகம் மூலம் கிடைத்த வாய்ப்பு மூலம் கம்ப ராமாயணத்தைப் படித்தேன்.

குகன் பற்றிப் பேசிய ராமலிங்க செüடாம்பிகை அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பி.சி.ஏ. படிக்கும் மாணவி எம்.பவித்ரா கூறியது:

பள்ளியில் படிக்கும் சமயத்தில் ஆசிரியர்கள் என்னை தமிழில் பாடங்களை வாசிக்கச் செய்தனர். 6-ஆம் வகுப்பு படிக்கும்போது பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டேன். பிறகு 9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும்போது கவிதை எழுதத் தொடங்கினேன். வைரமுத்து கவிதைகள் மிகவும் பிடிக்கும்.

கம்ப ராமாயணம் சிறிய வயதில் இருந்தே தெரியும். இஸ்லாமிய மதத்தினருக்கு குர்ஆன், கிறிஸ்தவ மதத்தினருக்கு பைபிள் இருப்பது போல, நான் சார்ந்த இந்து மதத்தில் கம்ப ராமாயணத்தை படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டேன்.

கம்பன் கழகம் மூலம் கம்ப ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT