முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அவசரம்... அவசியம்!

தமிழ்நாடு அரசின் இளம் விஞ்ஞானி விருது இந்த ஆண்டு ஆறு பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:01 AM
பகிர்:

தமிழ்நாடு அரசின் இளம் விஞ்ஞானி விருது இந்த ஆண்டு ஆறு பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களில் ஒருவர், விதுபாலா. சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உளவியல் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியிலிருக்கும் அவரைச் சந்தித்தோம்:
 ""சமூக நலம், வேளாண்மை போன்ற பல்வேறு துறைகளிலும் 40 வயதிற்குட்பட்ட அறிவியல் சாதனையாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் இளம் விஞ்ஞானி விருது வழங்கப்படுகிறது. புற்றுநோய் உளவியல் துறை தொடர்பான பல ஆராய்ச்சி முடிவுகளுக்காக இந்த விருது எனக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
 புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு நீண்ட காலமாக அளித்துவருகிறோம். நோயின் தொடக்கத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும். எந்த நோயாக இருந்தாலும் முற்றியபிறகு சிகிச்சைக்குச் செல்வதால் பயன் விளையாது என்பதையும் எடுத்துக் கூறுகிறோம். புற்று நோய் சிகிச்சைக்கான மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது உடலில் என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதை எப்படி எதிர்கொள்வது, நம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வது.... போன்ற திட்டமிட்ட விழிப்புணர்வை நோயாளிகளிடம் ஏற்படுத்துகிறோம். எங்களின் இந்த உளவியல் பூர்வமானஅணுகுமுறை நோயாளிக்கு நம்பிக்கையை ஊட்டி கூடிய விரைவில் குணமடைய வழிவகுக்கும்.
 "வரும் முன் காப்பவனே அறிவாளி' என்பார்கள். இந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் மூன்று முக்கியமான வழிகளைப் பின்பற்றினால் 50 சதவிகிதம் புற்று நோய் வராமல் தடுத்துக் கொள்ளமுடியும். அவை, புகையிலை (எந்தவடிவிலும்), மதுப் பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது, கொழுப்பு அதிகமான பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைத் தவிர்ப்பது, உடற்பயிற்சி செய்வது. இந்த மூன்று வழிகளை ஒருவர் தம் வாழ்வில் கடைப்பிடித்தாலே புற்றுநோய் வருவதற்கான கதவுகள் மூடப்பட்டுவிடும்.
 புகை, மது பழக்கத்தினால் பாதிக்கப்படுபவர்களை அதன் தாக்கத்திலிருந்து விடுவிக்கும் வழிமுறைகளை ஆராய்வதுடன் புதிதாக அந்தப் பழக்கத்தை தொடங்குபவர்களிடம், அதன் தீமைகளை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கி, தடுப்பதற்கும் பல யோசனைகளை செயல் திட்டங்களை அரசாங்கத்திற்குத் தந்துள்ளோம். இதன்படி பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் நாளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு அளிக்கும் பணிகள் நாடெங்கும் நடந்துவருகின்றன.
 இதுநாள்வரை புகையிலைப் பொருள்களை வாங்குவதைத் தவிர்க்கும் வகையில் எச்சரிக்கை முறைகளை அறிவுறுத்திவந்த அரசு, கடந்த 2005 முதல் புகையிலைப் பொருள்களை தயாரிப்பதையே படிப்படியாக குறைத்து முடிவாக புகையிலையை அறவே ஒழிக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. இதற்கு உதவும் வகையில், பீடி சுற்றுவதையே தலைமுறை தலைமுறையாக செய்துவந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அணுகி அவர்களின் வாழ்க்கைத் தரம் உயராத நிலையையும் அவர்களின் உடல் அடைந்த பாதிப்புகளையும் ஆய்வு செய்து அரசுக்குத் தந்துள்ளோம்.
 புகையிலை பயிரிடும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் நிலங்களில் புகையிலையைத் தவிர்த்து மாற்றுப் பயிர்களை விளைவிக்கவும் அதற்கான வழிமுறைகளையும் ஆய்வுபூர்வமாக வழங்கியிருக்கிறோம். இந்த ஆலோசனைகளின் விளைவால் புகையிலை சாகுபடி எதிர்காலத்தில் பெருமளவு குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. இப்படிப் பலவிதமான புகையிலை கட்டுப்பாடு தொடர்பான ஆய்வு முடிவுகளை அரசாங்கத்திற்கு எங்களின் அமைப்பின் மூலமாக வழங்கியிருக்கிறோம்.
 எதிர்கால சந்ததியினரை புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்தும் புகையிலைப் பயன்பாட்டிலிருந்தும் முழுவதுமாக விலகி இருக்கும்படியான பணிகளில் நாம் எல்லாரும் ஈடுபடவேண்டிய அவசரத்தையும் அவசியத்தையும் உணர்த்துவதுதான் என்னுடைய ஆராய்ச்சியின் நோக்கம்'' என்கிறார் விதுபாலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.