ஞாயிறு கொண்டாட்டம்

புத்தரி திருவிழா!

மலை மாவட்டமான நீலகிரி, தேயிலை மாவட்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஏ. பேட்ரிக்

மலை மாவட்டமான நீலகிரி, தேயிலை மாவட்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், இம் மாவட்டத்திலுள்ள சில சமவெளிப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படுவது பெரும்பாலானோருக்குத் தெரியாதது.
 தமிழக-கேரள எல்லையையொட்டியுள்ள
 கூடலூரின் சில பகுதிகளிலும், ஈரோடு மாவட்டத்தையொட்டியுள்ள "அன்னக்கிளி' திரைப்படப் புகழ் தெங்குமராடா கிராமத்திலும் நெல் பயிரிடப்படுகிறது. இந்த விழாவைக் கொண்டாடுவது நீலகிரி மாவட்டத்திலுள்ள பணியர், காட்டு நாயக்கர், முள்ளுக் குரும்பர் மற்றும் ஊராளிக் குரும்பர் ஆகிய பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆனால், இவர்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்தும் நிலத்தின் உரிமையாளர்கள் மவுண்டாடன் செட்டி இனத்தைச் சேர்ந்தவர்களென்பதால் அவர்களும் இந்த விழாவில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.
 ஆண்டுதோறும் (ஐப்பசி) துலாம் மாதத்தின் 10-ஆம் தேதியன்றே இந்த விழா கொண்டாடப்படுகிறது. விளைந்துள்ள நெற் கதிர்களை அறுத்து அதை கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்வதே இத் திருவிழாவின் முக்கிய அம்சமாகும். இதற்காக அறுக்கப்பட்ட கதிர்களை வழிபட்ட பின்னர் 3 இடங்களில் காப்புக் கட்டுவதைப்போல கட்டுகின்றனர். தாங்கள் குடியிருக்கும் வீட்டின் முகப்பு, நெல் உலர்த்தும் களம், வயலின் ஒருபகுதி ஆகியவையே இம் மூன்று இடங்களாகும்.
 காப்புக் கட்டும்போது வனத்தில் தாங்கள் பயன்படுத்தும் பிரத்யேக மூலிகையுடன், கதிர், மாவிலை, ஆல மர இலை மற்றும் மூங்கில் இலைகளையும் சேர்த்துக் கொள்கின்றனர். விளைந்துள்ள நெல் கதிரை பணியர் இன மக்கள்தான் அறுப்பர். அங்கிருந்து அவர்கள் எடுத்து வந்து அம்பலக்கூட்டன் என அழைக்கப்படும் கோவிலின் உதவியாளர் மூலமாக "வெளியபெறா' என அவர்கள் அழைக்கும் இடத்தில் வைத்து பிறருக்கும் விநியோகிப்பர். அதாவது, விளைந்துள்ள நெல்லை ஆண்டவனுக்குப் படைத்து நன்றி தெரிவித்துவிட்டு பின்னர் தங்கள் இல்லத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்பதே இதன் நோக்கம்.
 இதுதொடர்பாக உதகையிலுள்ள பழங்குடியின ஆய்வு மைய இயக்குநர் மகேஸ்வரன் கூறுகையில், "" புத்தரி என்பது பழங்குடியினரின் நன்றி பாராட்டும் திருவிழா. புத்தரி என்றால் புதிதாக அறுக்கப்பட்ட கதிர். மலை மாவட்டமான நீலகிரியில் நெல் சாகுபடியை முதன் முதலில் தொடங்கியவர்கள் பணியர் இன மக்களே. இதன் காரணமாகவே பணியர் இன மக்கள் தங்கள் வீடுகளின் மேற்கூரையாக காய்ந்த நெற் கதிர்களை இன்னமும் பயன்படுத்துகிறார்கள். தங்கள் வயலில் இல்லாவிட்டாலும் வெளி இடங்களிலிருந்தாவது வாங்கி வந்து கூரையாகப் பயன்படுத்துகிறார்கள்'' என்று தெரிவித்தார்.
 இதுகுறித்து, முள்ளுக்குரும்பர் இனத்தைச் சேர்ந்த சிவராமன் கூறுகையில், ""புத்தரி விழா பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், தற்போது மாறிவிட்ட நவீன யுகத்தில் உணவுக்கான அரிசியே இலவசமாக கிடைக்கும் சூழலில் வயலில் இறங்கி வேலை செய்வதும் வெகுவாக குறைந்துவிட்டது. இருப்பினும் முள்ளுக்குரும்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் 10 செட்டில்மென்ட்டுகளில் உள்ளனர். தற்போது நெல் சாகுபடி குறைந்துவிட்டாலும், அவர்கள் பிற பகுதிகளில் வழக்கமான உற்சாகத்துடனேயே கொண்டாடி வருகின்றனர்'' என்றார்.
 மேலும் அவர் கூறுகையில், ""இந்த 10 செட்டில்மென்ட்டுகளில் வசிப்போர் சிவன், ராமர்-லட்சுமணன் என தங்களுக்கு விருப்பப்பட்ட 10 கடவுளர்களை வணங்குகின்றனர். அதனால், புத்தரி திருவிழாவின்போது தாங்கள் பயன்படுத்தும் ஆயுதங்களான அம்பு மற்றும் வில் ஆகியவற்றைச் சுத்தம் செய்து கழுவி, சந்தனமிட்டு வணங்குவதோடு, இளம் சிறுவர்களுக்கு வில்-அம்பு பயிற்சியையும் அந்த தினத்தில்தான் தொடங்குகிறார்கள். புத்தரி திருவிழாவின்போது காளைகளுக்கு காயடிக்கும் வழக்கமும் உள்ளது'' என்றார்.
 இவையெல்லாம் கேரள மாநிலத்தில் கடைப்பிடிக்கப்படும் கலாசாரமே என்றாலும், நீலகிரியில் தேயிலைச் சாகுபடியே பிரதானமாக உள்ள நிலையில் நெல் சாகுபடிக்கு உள்ள சொற்ப இடத்திலும் அதை விளைய வைத்து, அறுத்து, ஆண்டவனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இன்னமும் கொண்டாடி வருவது பழங்குடியினரின் பெருமை மிக்க பாரம்பரியத்தைக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT