வெயிட்டர்... தலைமைச் சமையல்காரர்... எல்லாரும் சமம்!
படிப்பு வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்று நினைப்பவர்களே அதிகம்.
படிப்பு வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்று நினைப்பவர்களே அதிகம். சுவிட்சர்லாந்திலும், பிரான்சிலும் தான் கற்றுக் கொண்டவற்றை சென்னையில் தனது தந்தை நடத்தும் சப்வே, டஸ்கானா, பர்கண்டி, கிரிப்டாஸ் போன்ற பல்வேறு உணவகங்களில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார் இஸிகா சச்தேவ். ""தலைமை சமையல்காரராக இருந்தாலும், பாத்திரம் கழுவுகிறவராக இருந்தாலும் எல்லாரும் சமமானவர்கள் என்பதுதான் வெளிநாடுகளில் நான் கற்றுக் கொண்டதில் முக்கியமானது'' என்ற அவரிடம் தொடர்ந்து பேசியபோது...
""நான் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் எகானாமிக் அக்கவுண்ட்ஸ் படித்தேன். அதன் பிறகு சுவிட்சர்லாந்து சென்று ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் படித்துப் பட்டம் பெற்றேன். அங்கு படிக்கும்போது பயிற்சிக்காக 6 மாதம் பாரீஸில் ஒரு பெரிய உணவகத்தில் வேலை செய்தேன்.
சுவிட்சர்லாந்தின் ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட் படிப்பு ஒரு பெரிய உணவகத்தை நடத்துவதற்கான பல்வேறு திறமைகளை வளர்க்கக் கூடியது. மாதத்தில் 2 வாரங்கள் நடைமுறைப் பயிற்சியும், 2 வாரங்கள் கல்வியும் கற்றுத் தருவார்கள்.
இந்த நடைமுறைப் பயிற்சிக்காக சுவிட்சர்லாந்தில் உள்ள உணவகங்களில் வேலை செய்ய வேண்டும். இந்த மாதம் 2 வாரங்கள் ஹவுஸ் கீப்பிங் வேலைகளைச் செய்தால், அடுத்த மாதத்தில் 2 வாரங்கள் உணவகத்தில் வெயிட்டராக வேலை செய்ய வேண்டும். அடுத்தடுத்த மாதங்களில் இரண்டு வாரங்கள் சமையல்காரராக வேலை செய்ய வேண்டும். உணவகத்தின் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு பிரன்ட் ஆபிஸ் மேனேஜ்மென்ட் வேலை செய்ய வேண்டும். இவ்வாறு படிப்பையும், நடைமுறை வேலையையும் இணைத்து அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
ஆனால் அங்கே நான் கற்றுக் கொண்டதில் ரொம்ப முக்கியமானது, உணவகத்தில் வேலை செய்யும் எல்லாரும் சமமானவர்கள்தாம்
என்பதே.
உணவகத்திற்கு ஒரு வாடிக்கையாளர் வருகிறார் என்றால் அவருக்கு முதலில் தண்ணீர் கொடுத்து, பின்பு அவருக்குத் தேவையான உணவுகளைக் கேட்டுத் தெரிந்து, தரமான, ருசியான உணவுகளை அளிப்பது உணவகத்தில் வேலை செய்யும் வெயிட்டர்தான். உணவகத்துக்கும் வாடிக்கையாளருக்கும் தொடர்பு ஏற்படுத்தித் தருவது அவர்தான். அவர் சிறப்பான முறையில் நடந்து கொண்டால்தான் வாடிக்கையாளர் அடுத்த முறை உணவகத்துக்கு வருவார். அப்படியானால் ஓர் உணவகத்தில் வெயிட்டர் முக்கியமானவர். வெயிட்டரைத் தாழ்ந்தவராக நாம் நடத்தினால், அவர் எப்படிச் சிறப்பாகச் செயல்பட முடியும்?
எனவே நான் வெளிநாட்டில் கற்றுக் கொண்டவற்றை நாங்கள் நடத்தும் உணவகங்களில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்தேன்.
அனைத்து உணவகங்களிலும் உள்ள சமையல், மார்க்கெட்டிங், மனிதவளப் பிரிவு போன்ற எல்லாப் பிரிவு மேனேஜர்களையும் அழைத்து, வாரத்துக்கு ஒருமுறை ரெவ்யூ மீட்டிங் நடத்துகிறேன். ஒரு வாரத்தில் உணவகங்களில் நடைமுறையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளை அங்கு பேசி, எதிர்காலத்தில் அவற்றை எப்படித் தீர்க்க வேண்டும்? எப்படிச் சரி செய்ய வேண்டும்? என்று முடிவு செய்வோம். அடுத்த வாரத்தில் சென்ற வாரம் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை ஆராய்வோம். இதில் முக்கியமாக நாங்கள் கவனிப்பது என்னவென்றால், நமது முயற்சி நடைமுறையில் ஏற்படுத்திய விளைவுகளைத்தான்.
உதாரணமாக ரூ.10 ஆயிரம் செலவு செய்து ஒரு விளம்பரம் செய்தோம் என்றால், அந்த விளம்பரத்தின் காரணமாக அடுத்த சில வாரங்களில் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் வருமானம் வரும் வகையில் எங்கள் உணவகத்தின் விற்பனை உயர்ந்திருக்கிறதா? என்று சோதனை செய்வோம். இப்படி உணவகத்தின் எல்லாச் செயல்பாடுகளையும் அளக்க, மதிப்பிட ஏற்பாடு செய்தேன்.
உணவகத்தின் வேலைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு, ஒவ்வொரு பிரிவும் செய்யக் கூடிய வேலைகளை வரிசைப்படுத்தி வைத்திருக்கிறோம். ஒருவேலை செய்ததும் அதை "டிக்' செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செக் லிஸ்ட் தயாரித்து வைத்திருப்பதால் எந்தவொரு சிறு வேலையும் விட்டுப் போகாது.
உணவகத்துக்கு வருகிற வாடிக்கையாளர்கள் முக்கியம். அவர்கள் கொடுக்கும் பணத்துக்குச் சமமமாக உணவை அளித்தால் மட்டும் போதாது. அதற்கும் மேலாக அவர்களுக்குச் சர்வீஸ் பண்ண வேண்டும். இதைத்தான் நான் படிக்கும்போது எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். எங்களுடைய உணவகத்தில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். சிலருக்குக் கடலை எண்ணெய்யில் செய்யப்பட்ட உணவுகள் ஒத்துக் கொள்ளாது. சிலருக்கு முந்திரி, பாதாம்பருப்பு போன்றவை அலர்ஜியாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் ஏதாவது அலர்ஜி இருக்கிறதா? என்று நாங்களே கேட்கிறோம். வாடிக்கையாளரே எங்களிடம் சொன்னாலும் கூட, அவர்களுக்கு எனத் தனியாகச் சமைத்து உணவு அளிக்கிறோம்.
அதுபோல மார்க்கெட்டிங்துறையில் ஃபேஸ் புக் மூலம் வாடிக்கையாளர்களுடனான தொடர்புகளை அதிகரித்திருக்கிறோம்.
இவை எல்லாம் எங்களுடைய உணவகங்களின் நிர்வாகத்தை அறிவியல்பூர்வமானதாக மாற்றியிருக்கின்றன'' என்றார் இஸிகா சச்தேவ் உற்சாகமாக.