ஞாயிறு கொண்டாட்டம்

குடிசைப் பகுதியில் ஓர் ஆணழகன்!

கட்டுமஸ்த்தான உடலில் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம். அடுத்து, கட்டட வேலை. தொடர்ந்து  உடற்பயிற்சிக்கூடத்தில்

ஏ. பேட்ரிக்

கட்டுமஸ்த்தான உடலில் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம். அடுத்து, கட்டட வேலை. தொடர்ந்து  உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சி } என பல்வேறு இடங்களிலும் காணப்பட்ட அந்த இளைஞரைப் பார்த்தவர்கள் அவரது உடல் அமைப்புக் குறித்து வியந்தனர்.

 அந்த இளைஞர் குறித்து விசாரித்தபோது உதகையில் ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வந்த முனுசாமி என்பதும், அவரது தந்தை தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்பனை செய்து வருபவர் என்பதும் தெரியவந்தது.

அந்த இளைஞருக்கு ஓர் அரிய வாய்ப்பு. 27 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆணழகன் போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பு. இது அவருக்கு மட்டுமல்ல, நீலகிரி மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கக் கூடியதாகும். கூலித்தொழிலாளியாக இருந்த முனுசாமிக்கு இத்தகைய வாய்ப்பு கிடைத்தது எப்படி? நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டவை:

""ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எனக்கு சிறு வயதிலிருந்தே விளையாட்டுத் துறையில் ஏதாவது ஒரு பிரிவில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. ஆனால், எந்த துறை, எப்படி பயிற்சி என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அப்போதுதான் பள்ளி முடித்து வீட்டுக்கு வரும்போது வழியிலுள்ள சுவரில் கட்டுமஸ்தான உடலைக் கொண்ட ஒருவரின் திரைப்படப் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தேன். அதன் பின்னர் அந்த திரையரங்கிற்குச் சென்று அந்தப் படத்தை பார்த்தபோதுதான் அவரது பெயர் அர்னால்டு என்பது தெரியவந்தது. அதன்பின்னர் அவரைப் போன்றே உடல் அமைப்பை பெற வேண்டுமென நினைத்து அருகிலுள்ள ஒரு ஜிம்மில் சேர்ந்தேன்.

 எவ்விதமான பயிற்சி முறைகளும் தெரியாத எனக்கு அங்கிருந்தவர்கள் செய்த உடற்பயிற்சிகளை பார்த்தே நானும் செய்ய ஆரம்பித்தேன். எனது உடலின் தோற்றம் மாறி வருவதைக் கண்ட பின்னர் ஆணழகன் போட்டிகளில் பங்கேற்றால் என்ன? என்று யோசித்தேன். ஆனால், அதற்கும் முறையான வழிமுறைகள் தெரியாது. 2003ஆம் ஆண்டில் குன்னூரில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டிக்குச் சென்று விதிமுறைகள் குறித்து தெரிந்து கொண்டேன். அர்னால்டின் உடல் தோற்றங்கள் கொண்ட புத்தகத்தை பார்த்து பயிற்சி பெற்று வந்த பின்னர் 2004ஆம் ஆண்டில் அதே இடத்தில் நடத்தப்பட்ட ஆணழகன் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் முதன்முறையாக 3வது இடத்தை பிடித்தேன்.

 இது எனக்கு உற்சாகத்தை அளித்ததால் தொடர்ந்து பல்வேறு போட்டிகளிலும் பங்கு பெறத் தொடங்கினேன். அதன்பின்னர் பகலில் தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்று விட்டு மாலை நேரத்தில் ஜிம்மிற்கு சென்று பயிற்சி பெற ஆரம்பித்தேன். இப்போட்டிகளில் பங்கேற்க பணமும், சிறந்த உணவும் தேவைப்பட்டதால் தள்ளு வண்டியை விட்டுவிட்டு ஓட்டல் சர்வர், கட்டடத்தில் பிளம்பிங் வேலை என முடிந்த வேலைகளையெல்லாம் செய்ய ஆரம்பித்து எனது செலவுகளை ஓரளவுக்குச் சமாளிக்க ஆரம்பித்தேன்.

 நீலகிரி மட்டுமின்றி, கோவை, கொங்கு மண்டலம் என பல்வேறு பகுதிகளிலும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பின்னர் 2007ம் ஆண்டில் சென்னைக்கு வந்து திருநின்றவூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே ஜிம்மிலும் பயிற்சி பெற ஆரம்பித்தேன். பின்னர் சென்னையிலுள்ள ஒரு ஜிம்மில் கடந்த 7 ஆண்டுகளாக மாதச் சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறேன்.

 2009ம் ஆண்டில் 55 கிலோ எடைப்பிரிவுகளில் மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் இந்தியா போன்ற பட்டங்களை வென்றேன். தொடர்ந்து கோவை, சென்னை, திருச்சூர், புதுவை என பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளேன். 2010ம் ஆண்டில் மிஸ்டர் சவுத் இந்தியா பட்டத்தையும், சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தையும் வென்றேன். 2011ல் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றேன்.

 2012ல் 75 கிலோ எடைப்பிரிவில் மிஸ்டர் சென்னை பட்டமும், 2013ல் மிஸ்டர் தமிழ்நாடு பட்டமும், 2014ல் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டமும் வென்றேன். "சாம்பியன் ஆப் சாம்பியன்' பட்டம் என்பது சுமார் 250 போட்டியாளர்கள் வரை பங்கேற்கும் நிலையில் சுமார் 9 எடைப்பிரிவுகளில் முதல் பரிசு பெற்றவருக்கே வழங்கப்படும் பட்டமாகும். இதைப் பலமுறை வென்றுள்ளேன்.

 இதுவரையிலும் 8 முறை சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டமும், மிஸ்டர் இந்தியா ஜூனியர் போட்டியில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டமுமாக 40 பட்டங்களும், 62 மேடைகளில் சிறப்புத் தோற்றமும் நிகழ்த்தியுள்ளேன். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் சிறப்புத் தோற்றம் செய்துள்ளேன்.

 அண்மையில் நடைபெற்ற மிஸ்டர் இந்தியா கிளாசிக் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 150 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் நான் உள்பட 15 பேர் தேர்வு செய்யப்பட்டோம். தமிழகத்தின் சார்பில் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதைத்தொடர்ந்து 27 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆணழகன் போட்டியில் பங்கேற்கவும் எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. என்னுடைய குறிக்கோள் ஆசிய ஆணழகன் பட்டமும், மிஸ்டர் வேர்ல்டு பட்டமும் பெற வேண்டும் என்பதே'' என்றார் முனுசாமி.

முனுசாமிக்கு இதுவரையிலும் நிரந்தர வேலைவாய்ப்பில்லை. தேவையான ஸ்பான்சர்களும் இல்லை. சில நண்பர்களின் உதவி மட்டும் உண்டு என்றாலும் அவரின் முயற்சி தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT