முழுக்க முழுக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெறுவதாகத் தமிழ் நாடக மேடையில் இதுவரை நாடகம் ஏதும் போடப்பட்டதாகத் தெரியவில்லை. அந்தக் குறையைத் தன் "சிவ சம்போ' நாடகம் மூலம் போக்கிவிட்டார் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி அருண்.
ஒரே ஃப்ளாட்டில் சந்தியா, மாயா, காயத்ரி என்ற மூன்று பெண்கள் + மைக்கேல் வசிப்பது, அமெரிக்க சூழ்நிலையில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதுதான். ஆனால், அங்கே தனக்கும் இடம் கேட்டு ஆகாஷ் வருகிறான். அவனுக்கு இடம் இல்லை என்று சொன்னாலும் அவன் கேட்பதாக இல்லை. கடைசியில் மனம் இரங்கி இடம் கொடுக்கிறாள் காயத்ரி. ஜோசியரான அப்பா பட்டாபிராமன் ஊரிலிருந்து "ஸ்கைப்' வசதியோடு பெண்ணிடம் பேசும்போதெல்லாம், ஆகாஷ் அந்த கம்ப்யூட்டர் திரைக்குள் வந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறாள். ஆனால் ஆகாஷின் நண்பன் ஏகாந்த் அழகான பெண்களின் பெயர்களைக் கேட்டாலே ஜொள்ளுவிடுகிற பார்ட்டி. அவனும் அங்கே இடம் கேட்டு வந்தாலும், எப்படியோ விரட்டப்படுகிறான். இப்படியே கதை ஜட்கா வண்டி வேகத்தில் போய்க் கொண்டிருக்கும்போது, காயத்ரியின் அப்பா பட்டாபி அமெரிக்காவில் ஜோசியர்கள் மகாநாட்டுக்கு வருவதாகச் சொல்லிவிடுகிறார். நாடகத்தில் சிக்கல் வருமா? வருமா? என்று காத்துக்கொண்டிருக்கிற வேளையில், வந்தே விடுகிறது சிக்கல், அப்பா பட்டாபி வடிவில்! சிக்கலை மேலும் சிக்கலாக்க ஏகாந்துக்கும் இடம் இருக்கிறது.
சிக்கல் வரும்போதுதான் சமாளிப்பு தேவை. சமாளிப்புக்குத் தேவை நிறையக் கற்பனை. நாடகத்தில் இங்கேதான் நகைச்சுவை வெடிகளுக்கு வேலை! காயத்ரியும் மற்றவர்களும் அடிக்கிற லூட்டிக்காக வசனத்தில் சும்மா நகைச்சுவையைக் கொட்டுகிறார் நாடகாசிரியர். காயத்ரியாக மதுவந்தி, அப்பாவின் பாணியில் நகைச்சுவை நடிப்பைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். (பெரிசுகளுக்கு எப்படியோ, சிறிசுகளுக்கு ஒரே குஷிதான், கைதட்டல்தான்!)
கதைக்கு "சிவ சம்போ' என்று தலைப்பு வைத்துவிட்டதால் பல வருடங்களுக்கு முன்னால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. பாடிய "சிவ சம்போ' பாடலை மீண்டும் அவரைக் கொண்டே பாட வைத்து, நாடகம் தொடங்கும் முன் குட்டித் திரையில் காண்பித்து விடுகிறார் மதுவந்தி. தலைப்புக்கும் நாடகத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று எழும் கேள்விக்கு நாடகத்தின் இறுதியில் விடை கிடைக்கிறது.
இக்கட்டான சந்தர்ப்பங்களில், "கடவுளே, நீதான் காப்பாத்தணும்' என்றோ, "பெருமாளே காப்பாத்துப்பா' என்றோ சொல்கிறோம் அல்லவா? அதே. அதே. அதனால்தான் நாடகத் தலைப்பு "சிவ சம்போ'. மறுப்புச் சொல்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டும். வேறு வழியில்லை. சரி, அப்பா பட்டாபி அமெரிக்கா வந்தப்புறம் என்ன ஆகிறது?
ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் சேர்ந்து இருந்தாலும் அவர்களிடம் நட்போடு பழகி வாழ முடியும். அவர்கள் காதலர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமோ, கல்யாணம் செய்துகொண்டுதான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமோ இல்லை என்று தீர்ப்பு அளித்துவிடுகிறார் நாடகாசிரியர். அது மட்டுமல்ல, அயல்நாடு வாழ் தமிழர்கள் நம் சம்பிரதாயங்களையும், கலாசாரத்தையும் இம்மிகூட விட்டுவிடாமல் காப்பாற்றிக்கொண்டு வரும்போது, இங்கே உள்ளவர்கள் பண்டிகைக்கு விடுமுறை விட்டால் சீரியல் பார்த்துக் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்று ஓங்கி ஒரு குட்டு.
அந்த வலியைத் தாங்கிக் கொள்ளத் தலையை அழுத்தித் தேய்த்துக் கொள்ளுவதற்குள், அங்கே உள்ளவர்கள் "நான்-ரெஸிடன்ட் இந்தியர்கள்' (இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்) என்று சொன்னால், இங்கே உள்ளவர்கள் "ரெஸிடென்ட் நான்-இந்தியர்கள்' (இந்தியர்களாக இல்லாத இந்தியக் குடிமக்கள்) என்று போனஸôக ஒரு சாட்டையடி.
பாத்திரங்கள் மேடையில் தோன்றும்போது, பாஸ்கிக்கு ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்ய வேண்டிய பணி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேடைக்கு வராமலேயே, குரல் மூலம் அதைத் தன் பாணியில் அவர் செய்து சிரிப்பை வரவழைக்கிறார். புதிய உத்திதான்.
சுரேஷ்வர் பட்டாபியாக நடிப்பதோடு, நாடகத்தையும் இயக்கியிருக்கிறார். ஒய்.ஜி.எம்.மின் பட்டறையில் தயாரானவரிடம் அவருடைய பாதிப்பு நிறையவே இருப்பது நியாயம்தான். ஹரி ராமகிருஷ்ணன் வசனத்தை எழுதியிருக்கிறார். அவரிடம் சுரேஷ்வரின் பாதிப்பு இருக்கிறது என்று சொல்லாமல் இருக்க
முடியுமோ?
மதுவந்தி அருணுக்கு இது இரண்டாவது நாடகமாம். ஒய்.ஜி.பி - ஒய்.ஜி.எம்.-மதுவந்தி என்று தமிழ் நாடக மேடையில் மூன்றாவது தலைமுறையின் ரவுண்டு இது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.