முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கிராமங்களில் பாயும் புதிய ஒளி!

மேற்குத் தொடர்ச்சி மலை. கோவையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஆனைக்கட்டி கிராமம். அங்கே சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆசிரமம்.

Updated On : 23 பிப்ரவரி, 2014 at 8:09 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலை. கோவையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஆனைக்கட்டி கிராமம். அங்கே சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆசிரமம். ஒரு நடுத்தர வயதுப் பெண் உள்ளே வருகிறார். சுவாமி தயானந்த சரஸ்வதியை வணங்குகிறார்.
 ""ஐயா... உங்களுக்குக் கோடிப் புண்ணியமுங்க. எங்க மலைக்கிராமங்களுக்கு குடி தண்ணீர் வசதி செய்து கொடுத்தீங்க. எங்க பசங்க பள்ளிக்கூடத்துக்குப் பல மைல் நடந்து போகுதுங்க. பசங்க தங்கிப் படிக்கிறதுக்கு ஐயா உதவணும்ங்க''
 சுவாமி தயானந்த சரஸ்வதி தலையசைக்
 கிறார்.
 மலை கிராமங்கள். சாலை வசதியில்லாத ஒற்றையடிப் பாதைகள். அதில் ஆறேழு கி.மீ. தூரம் நடந்து சென்று படிக்கும் பிள்ளைகள். இங்கு மட்டும்தான் இப்படியா? இந்தியாவில் எத்தனை மலை கிராமங்களில் இந்த நிலை இருக்கிறது? இந்த நிலையை மாற்ற ஏதாவது செய்ய வேண்டுமே? இவ்வாறு சுவாமி தயானந்த சரஸ்வதியின் சிந்தனை ஓட்டம்... முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனுடன்
 ஆலோசனை...
 ""இப்படிப் பிறந்ததுதான் ஆனைக்கட்டியில் முதன்முதலாக மாணவர் இல்லம்'' என்கிறார் ஷீலா பாலாஜி. அகில இந்திய சேவை இயக்கத்தின் (அஐங ஊஞத நஉயஅ) நிர்வாக அறங்காவலராகவும், செயலாளராகவும் உள்ள ஷீலா பாலாஜி, புகழ்பெற்ற லூகாஸ் டி.வி.எஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
 ""2000 இல் முதன் முதலாக 140 மாணவர்களுடன் ஆனைக்கட்டியில் மாணவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. நீண்ட தூரம் நடந்து வந்து மாணவர்கள் படிப்பது சிரமம் என்பது ஒருபுறமிருக்க, இதனாலேயே பல மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்திவிடுவார்கள். அவர்களுக்குப் பாடங்களில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அவற்றைத் தீர்த்துக் கொள்ள மலை கிராமங்களில் வசதி இருக்காது. பள்ளிப் படிப்பைத் தாண்டுவதே இயலாத செயலாகிவிடும். பின்பு எப்படி அந்த மாணவர்கள் முன்னேறுவது? அந்தப் பகுதி முன்னேறுவது? எனவே சுவாமிஜி மாணவர் இல்லத்தை ஆரம்பித்து, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை, படிப்பு எல்லாவற்றையும் இலவசமாகச் செய்து கொடுத்தார். காலையில் எழுவது முதல் இரவு தூங்குவது வரை மாணவர்கள் ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.
 காலையில் எழுந்ததும் உடற்பயிற்சிகள், யோகாசனப் பயிற்சிகள், சுலோகங்கள் கற்றுக் கொடுத்தல், காலை உணவு, பள்ளிக்குச் செல்லுதல், மாலையில் விளையாட்டு, ஸ்பெஷல் கிளாஸ்கள், இரவு உணவு, தூக்கம் என எல்லாம் ஓர் ஒழுங்குமுறைப்படி நிகழ வைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக நமது பாரம்பரியம், கலாசாரத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். உதாரணமாக, மாணவர் இல்லத்தில் உள்ள மாணவர்கள் பிறரைப் பார்க்கும்போது, ""நமஸ்தே குருஜி'' என்றோ, ""நமஸ்தே அங்கிள்'' என்றோ சொல்ல வேண்டும். பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்றெல்லாம் இல்லத்தில் கற்றுக் கொடுக்கப்பட்டது. அந்த மாணவர்கள் தங்களுடைய சொந்த கிராமத்துக்குச் செல்லும்போது அதேபோன்று பெரியவர்கள், தாய், தந்தையர் காலில் விழுந்து வணங்கினர். அவர்களைப் பார்த்து கிராமத்தில் உள்ள பிற பிள்ளைகளும் செய்தார்கள். இவ்வாறு அந்தப் பகுதியின் கலாசாரமே மாற மாணவர் இல்லம் காரணமாகிவிட்டது.
 இப்போது ஆனைக்கட்டியில் போல இந்தியாவெங்கும் 100 இலவச மாணவர் இல்லங்கள் சுவாமியால் உருவாக்கப்பட்டுள்ளன. அண்மையில்தான் உ.பி.யில் லக்னெüவில் 100 ஆவது இல்லம் திறக்கப்பட்டது. 14 மாநிலங்களில் இதுபோன்ற மாணவர் இல்லங்கள் செயல்படுகின்றன.
 ஒவ்வோர் இல்லத்திலும் வார்டன், சமையல் செய்பவர்கள், பாதுகாவலர்கள் இருக்கிறார்கள். அந்தந்தப் பகுதியில் உள்ள நன்கு படித்த சுவாமிஜியின் சீடர்கள் மாலை நேரங்களில் மாணவர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இமாச்சலப் பிரதேசத்தில் சோலன் என்ற நகரில் உள்ள சுவாமிஜியின் சீடர்கள் கணிதம், இயற்பியல், வேதியல் போன்ற பாடங்களை ஆன்லைன் மூலமாக எல்லா இல்லங்களிலும் உள்ள மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். எங்களுடைய இல்லத்தில் உள்ள மாணவர்கள் 95 சதவீதம் பேர் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
 அதுமட்டுமல்ல, பல்வேறு மாநில, மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் எங்கள் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆந்திராவில் உள்ள எங்கள் இல்லத்தில் பயிலும் பழங்குடியின மாணவி, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
 எங்களுடைய எல்லாச் செயல்பாடுகளும் நன்கொடைகள் மூலமாகவே நடைபெறுகின்றன. சுவாமிஜியின் மீது அன்பு கொண்டவர்கள் மட்டுமல்ல, எங்களுடைய செயல்பாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டவர்களும் எங்களுடைய சேவைக்கு உதவுகிறார்கள். வெளிநாட்டு அன்பர்களும் உதவுகிறார்கள். நாங்கள் பெறக் கூடிய நன்கொடைகள் முழுவதையும் இந்தப் பணிக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். கணக்கு, வழக்குகளை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதால், யார் வேண்டுமானாலும் அவற்றைப் பார்க்க முடியும். இதனால் எங்களை நம்பி நன்கொடைகளை அளிக்கிறார்கள். கடந்த 14 ஆண்டுகளாக இத்தனை மாணவர் இல்லங்களையும் தொய்வில்லாமல் நடத்த முடிகிறது.
 எங்களுடைய இலவச மாணவர் இல்லத்தில் அந்தப் பகுதியில் பயிலும் மாணவர்கள் யார் வேண்டுமானாலும் சேரலாம். வீட்டில் இருந்தபடி கல்வி பயில முடியாத சூழ்நிலை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை. மற்றபடி எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும், சாதியைச் சேர்ந்தவர்களும் சேரலாம். எங்கே மக்களுக்குச் சேவை தேவைப் படுகிறதோ அங்கே நாம் இருக்க வேண்டும் என்ற சுவாமி தயானந்த சரஸ்வதியின் கோட்பாட்டின்படி நாங்கள் செயல்படுகிறோம். அதனால்தான் உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள கர்ணப் பிரயாகை முதல் கன்னியாகுமரி வரை நாடெங்கும் எங்கள் இல்லங்கள் உள்ளன. 2020 ஆண்டுக்குள் இன்னும் 200 புதிய இல்லங்களைத் திறந்து சேவை செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். அந்த இலக்கை நிச்சயமாக அடைவோம். எங்களைப் பொருத்தவரை இந்தியாவில் உள்ள எந்தக் கிராமமும் நாங்கள் எட்ட முடியாத அளவுக்கு உள்ள தொலைதூரக் கிராமமல்ல'' என்கிறார் உற்சாகமாக.
 - ந.ஜீவா
 படம்: ராதாகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.