வாழ்... வாழ்த்து அட்டைகள்!
முதலில் எல்லாம் ஒவ்வொரு பொங்கலின் போதும் பொங்கல் வாழ்த்துகள் நமது வீட்டில் வந்து குவியும். எஸ்எம்எஸ், இ மெயில் சுனாமிகள் வந்து பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கத்தை காணாமற் போகச் செய்துவிட்டன.
முதலில் எல்லாம் ஒவ்வொரு பொங்கலின் போதும் பொங்கல் வாழ்த்துகள் நமது வீட்டில் வந்து குவியும். எஸ்எம்எஸ், இ மெயில் சுனாமிகள் வந்து பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கத்தை காணாமற் போகச் செய்துவிட்டன.
ஆனால் இந்த சூழ்நிலையிலும் கூட, வாழ்த்து அட்டைகள் தயாரிப்பதில் மிகவும் மும்முரமாக ஈடுபடுகிறார் மாற்றுத் திறனாளியான அகதா. ""வாழ்த்து அட்டைகளை யாராவது விரும்பி வாங்குகிறார்களா?'' என்று அவரிடம் கேட்டோம்.
""வாழ்த்து அட்டைகள் அழகாகவும் மனதைக் கவரும் வகையிலும் இருந்தால், அதை விரும்பி வாங்குகிறவர்கள் இப்போதும் இருக்கவே செய்கிறார்கள்'' என்கிறார் அவர். தொடர்ந்து அவரிடம் பேசியதிலிருந்து...
""என் சொந்த ஊர் பாண்டிச்சேரி. என் அப்பா, அம்மாவை நான் கண்ணால் பார்த்தது கூட கிடையாது. சென்னை ராயபுரத்தில் உள்ள மதர் தெரஸô கான்வென்டில்தான் படித்தேன். வளர்ந்தேன். சின்ன வயதிலிருந்தே படிப்பு ஏறவில்லை. அதனால் எனக்கு பெயிண்டிங், எம்ப்ராய்டரி, கைகளினால் வாழ்த்து அட்டைகள் செய்வது, மெழுகுவர்த்தி செய்வது போன்றவற்றில் பயிற்சி கொடுத்தார்கள்.
வகுப்பில் அவர்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே நான் செய்யமாட்டேன். எனக்குத் தோன்றியதை வைத்துப் புதிது புதிதாக ஏதாவது செய்வேன். அதனால் எல்லாரும்
என்னைப் பாராட்டுவார்கள்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சிஎம்சிடி என்ற நிறுவனத்தில் நான் வாழ்த்து அட்டைகளைச் செய்யும் பணியில் இருக்கிறேன். வேலை முடிந்து மாலை நான் தங்கியிருக்கும் லேடீஸ் ஹாஸ்டலுக்கு வந்ததும், சொந்தமாக நானே வாழ்த்து அட்டைகளைச் செய்ய ஆரம்பித்துவிடுவேன். சில நாட்களில் 80 அட்டைகள் கூட செய்வேன்.
இந்த அட்டைகளை கண்காட்சிகள் நடக்கும் இடங்களில் கொண்டு சென்று விற்றுவிடுவேன். துறைமுகம், காந்தி மண்டபம், வள்ளுவர் கோட்டம், வர்த்தக மையம் ஆகிய இடங்களில் வாழ்த்து அட்டைகளை விற்பனை செய்திருக்கிறேன்.
புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு வருகிறவர்கள், கிறிஸ்துமஸ் சமயத்தில் நான் செய்கிற வாழ்த்து அட்டைகளை விரும்பி வாங்குவார்கள். பெரிய லாபம் இல்லையென்றாலும் யாருமற்ற நான் உயிர் வாழ ஏதாவது வேலை செய்ய வேண்டுமே?
யாருமில்லாத எனக்கு நிறையப் பேர் உதவுகிறார்கள். அவர்களுடைய உதவிகள் இல்லாமல் என்னால் எப்படிச் செயல்பட முடியும்?
எக்ஸ்நோரா இண்டர்நேஷனல் அமைப்பு உலக மகளிர் தினத்தன்று சிறந்த பெண்களுக்கான விருதான "எக்ஸ்நோரா ரத்னா' விருது கொடுத்தார்கள். அதை என்றும் மறக்கமாட்டேன்'' என்றார்.