சுத்தமான, சுவையான காய்கறிகள் வேண்டுமெனில், வீடுகளில் நாமே தோட்டங்களை உருவாக்கினால் மட்டுமே சாத்தியமாகும். இந்தக் கருத்தினை வலியுறுத்தும் வகையில், வீட்டு மாடித் தோட்டத்தில் காய்கறி மற்றும் பழங்களைச் சாகுபடி செய்து வருகிறார் திண்டுக்கல் வேளாண்மைத்துறை அலுவலர் ஆர்.சின்னச்சாமி.
வேளாண் துறையில் பி.எஸ்சி. பட்டம் பெற்றுள்ள அவருக்கு வீட்டில் செடிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம். ஆசிரியையாகப் பணிபுரிந்து வரும் அவரது மனைவி எம்.ஆனந்தி, ஆர்வத்திற்கு தூண்டுகோலாக இருந்து வருகிறார். இதனால் திண்டுக்கல் என்.எஸ். நகரில் அமைந்துள்ள தனது வீட்டு மாடியில் 1,500 சதுர அடியில் அழகான தோட்டம் அமைத்து, பராமரித்து வருகிறார். பெற்றோர்களுக்கு செடிகள் மீது இருந்த காதல், அவர்களது 3 வயது குழந்தை சி.பிரத்திகாவையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது. அதனால் மகளுக்கு 5 செடிகளை ஒதுக்கி, பராமரிக்கக் கற்றுக் கொடுத்துள்ளார்
சின்னச்சாமி.
காலை நேரத்தில், கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் பசுமையான செடிகளைப் பார்க்கும்போது, மனம் இயல்பாகவே புத்துணர்ச்சி பெற்று விடுகிறது. வீட்டில் தோட்டம் உருவாக்குவதால் ஏற்படும் பயன்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்து:
செடிகளின் மீது ஆர்வம் ஏன்?
நம்மில் பெரும்பாலானோர் வெறுமனே பூச்செடிகளை மட்டுமே வளர்த்துப் பழக்கப்பட்டிருப்போம். அவற்றால் பொருளாதாரரீதியாக எந்தப் பயனும் இருக்காது. வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை வாங்குவதற்கு மட்டும், வாரத்திற்கு ரூ.400 முதல் ரூ.500 வரை செலவு ஏற்படுகிறது. பயனுள்ள காய்கறிச் செடிகளை வளர்ப்பதால், இந்தச் செலவைக் குறைத்துக் கொள்ளலாம்.
மாடித் தோட்டத்தின் நோக்கம்?
சந்தையில் விற்கப்படும் அனைத்து காய்கறி மற்றும் பழ வகைகளும், குறுகிய காலத்தில் மகசூல் பெறும் நோக்கில் உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் செடிகளில் நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளும், கூடுதல் மகசூல் பெறுவதற்கு ரசாயன உரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நமக்குக் கிடைக்கும் காய், கனிகள் அனைத்தும் குறிப்பிட்ட அளவு நச்சுத்தன்மையுடனே இருக்கின்றன. இதனைத் தவிர்ப்பதற்கு வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகளை நாமே விளைவித்தால் மட்டுமே, ரசாயன மற்றும் நச்சுத்தன்மை இல்லாமலும், தரமானதாகவும் பெற முடியும். மேலும் நாட்டு விதைகளைப் பயன்படுத்தினால், அதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதோடு, சுவையும் அதிகமாக இருக்கும்.
தோட்டம் அமைப்பதற்கு என்ன தேவை?
வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் கிரீன் பேக் எனப்படும் பேப்பர் பைகளை வாங்கி, அதில் தென்னை நார்க் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றின் கலவையை நிரப்பி செடிகளை
வளர்க்கலாம்.
தற்போது அனைத்து வீடுகளிலுமே தண்ணீர் தொட்டி வைத்திருக்கிறோம். அதில் ஒரு குழாய் இணைப்பை ஏற்படுத்தி, சொட்டு நீர்ப் பாசனம் மூலம் செடிகளை வளர்க்க வேண்டும். இதனால் செடிகளின் வேரில் மட்டுமே தண்ணீர் பாய்வதால், குறைந்த அளவு தண்ணீரே
தேவைப்படும்.
1,500 சதுரடி உள்ள தோட்டத்தில், சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதற்கு ரூ. 3,000 செலவாகும். மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி, தோட்டத்தின் ஓர் ஓரத்தில் உரம் தயாரிக்கலாம். சிறிய தோட்டமாக இருப்பதால், நோய் தாக்கும் செடிகளின் இலைகளை நாமே கிள்ளி எறிந்துவிடலாம். அதனால் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கத் தேவையில்லை. நோயின் தாக்கம் அதிகமானால், வேப்பெண்ணெய்யைத் தெளிக்கலாம்.
என்னென்ன செடிகள் வைத்துள்ளீர்கள்?
தக்காளி, கத்திரி, புடலங்காய், பீர்க்கங்காய், கீரை, பாகற்காய், அவரை, சுரைக்காய், பூசணிக்காய், வெள்ளரி, பீன்ஸ், பொறியல் தட்டை, செடி முருங்கை ஆகிய காய்கறி வகைகளும் கொய்யா, மாதுளை, நெல்லி, எலுமிச்சை போன்ற கனி வகைகளும் இஞ்சி, தூதுவளை, வெற்றிலை, ஓம வள்ளி, கீழாநெல்லி உள்ளிட்ட மூலிகைச் செடிகளும், பிச்சி, மல்லி, ரோஜா போன்ற மலர் வகைச் செடிகளும் வளர்த்து வருகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.