ரேஷ்மா சந்தித்த சவால்!
அறிவியல் துறை சம்பந்தமான விஷயங்களை நிருபர்கள் எழுதும்போது, குறிப்பாக நோய்கள் பற்றி மருத்துவக் கட்டுரைகள் எழுத நேரும்போது,
அறிவியல் துறை சம்பந்தமான விஷயங்களை நிருபர்கள் எழுதும்போது, குறிப்பாக நோய்கள் பற்றி மருத்துவக் கட்டுரைகள் எழுத நேரும்போது, அவர்களிடமே போதிய தகவல் இருப்பதில்லை. அவர்கள் மனநல மருத்துவ விஷயங்கள் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொண்டு எழுத பயிற்சியும், வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். இந்த வசதி தற்போது இல்லை என்பதை ஒரு குறையாக வெளியிட்டார் "பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா' இயக்குநர் சசி நாயர்.
இடம்: சென்னை அண்ணா நகர் மேற்கில் செயல்பட்டு வரும் மனச்சிதைவு ஆய்வு மைய அரங்கம். மனச்சிதைவு குறித்து கட்டுரைகள் எழுதிய இளம் பத்திரிகையாளர்களுக்கு மனச்சிதைவு ஆய்வு மையமும், "பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா'வும் இணைந்து நடத்திய போட்டியில் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.
பரிசு பெற்ற இளம் பத்திகையாளர்களில் ஒருவர் ரேஷ்மா வள்ளியப்பன். அவர் பத்திகையாளர் அல்ல. ஆனால் மனச்சிதைவு நோய் தாக்கப்பட்டு அதிலிருந்து குணமாகி வாழ்ந்து வருபவர்.
தம் சொந்த அனுபவங்களை அவர் தன் ஏற்புரையில் சொல்லச் சொல்ல, வியப்பு அதிகரித்தது. கட்டுரையை எழுதி, ஒரு நண்பர் மூலம் கூரியரில் கடைசி தினத்தன்று அனுப்பி வைத்தாராம். மனச்சிதைவு குறித்து ஆவணப்படம் ஒன்றும் தயாரித்திருப்பதாக அவர் தெரிவித்த போது, வியப்பு மேலும் அதிகரித்தது.
பரிசு பெற்றவர்களில், தமிழில் கட்டுரை எழுதிய "புதிய தலைமுறை'யைச் சேர்ந்த கீதாவும் ஒருவர். ஆங்கிலத்தில் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' கோழிக்கோடு பதிப்பைச் சேர்ந்த இரட்டையர் அருணும் சாம் பாலும் பரிசு பெற்றனர். மற்றொரு இளம் பத்திரிகையாளர் மினி தாமஸ் "த வீக்' இதழைச் சேர்ந்தவர். மலையாள நாளிதழ் "ராஷ்ட்ர தீபிகா'வைச் சேர்ந்த ரெஜி ஜோசப், பரிசு பெற்ற இன்னோர் இளம் பத்திரிகையாளர்.
பரிசு பெற்றவர்களைப் பாராட்டிப் பேச வந்திருந்தார் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். திரைப்படங்களில் எவ்வாறு இம்மாதிரியான நிகழ்வுகளைக் காண்பிக்கிறார்கள் என்பதை ஓர் உதாரணத்துடன் அவர் விளக்கினார். சுதா ரகுநாதன் பின்னணி பாடியிருந்த மார்னிங் ராகாஸ் திரைப்படத்தில், ஷபானா ஆஸ்மி தம் பாத்திரத்தை எப்படிச் செய்ய வேண்டும்? என்று கேட்டாராம். ""நீங்கள் பாடகி. பதினோரு வருடங்களுக்கு முன் உங்கள் மகன் இறந்து போய்விட்டார். அதை மனதில் வைத்துக் கொண்டு இப்போது நீங்கள் நடிக்க வேண்டும்'' என்று சொல்லிவிட்டு, மனநோய் வந்தவர்கள் வெற்றிடத்தைப் பார்த்துவிட்டு, தலையில் சொறிந்துகொள்வது போல் காண்பித்தாராம் இயக்குநர். ஷபானா ஆஸ்மி திகைத்துப் போய்விட்டாராம். மகனின் இழப்பின் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பாத்திரத்தின் வெளிப்பாடு இவ்வளவுதானா? என்று வியந்தாராம். ""நம் திரைப்படத்துறை இயக்குநர்கள் இதற்கு மேல் எதுவும் அறிந்திராதது வருத்தத்துக்
குரியதுதான்'' என்றார் ராஜீவ் மேனன். (இந்த நிகழ்ச்சிக்காக என்றே கேரளத்தில் இருந்து வந்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தார்கள்.) ஆனால், ராஜீவ் மேனன் பரிசு பெற்ற எல்லாக் கட்டுரைகளையும் நன்றாகப் படித்துவிட்டுத்தான் வந்திருந்தார். அவர் அந்தக் கட்டுரைகளிலிருந்து எடுத்துச் சொன்ன மேற்கோள்கள் எல்லாம் அவர் எந்த அளவுக்கு முனைப்பாக வந்திருந்தார் என்பதைக் காண்பித்தன.
பரிசு பெற்ற ரேஷ்மா வள்ளியப்பன் அத்தனை தெளிவாக, உயர்வான ஆங்கிலத்தில், தனக்குப் பனிரெண்டு வயதாக இருக்கும்போது ஏற்பட்ட மனச்சிதைவு பாதிப்பை எப்படி எதிர்கொண்டார் என்பதை வர்ணித்ததைத்தான் முதலில் குறிப்பிட்டோம்.
""மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக விமானத்தில் செல்ல முடியாது. பொதுவாகனப் போக்குவரத்தில் அவர்கள் பயணம் செய்ய வேண்டுமென்றால், அவர்களுக்குப் போதுமான மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கூடவே ஒரு மருத்துவரும் பயணம் செய்ய வேண்டும். அவர்கள் ஓட்டுப் போட முடியாது. கல்வியில் அவர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பும் இல்லை. ஏன், தொழு நோயாளிகள் ரயில்களில் பயணம் செய்ய முடியாது என்று தெரியுமோ? 1937இல் உருவாக்கப்பட்ட சட்டம் அப்படியேதான் இன்றும் இருக்கிறது'' என்றார் ரேஷ்மா. பதினைந்து வயதில் அதிக நேரமும் காருக்குள்ளேயே அடைந்து கிடப்பாராம். வீட்டுக்குள் வருவதைத் தவிர்த்தாராம். ஆனால் தம் அனுபவத்தைப் பிறரும் தெரிந்துகொண்டால் அவர்களுக்கும் மறுவாழ்வுக்கு வழி இருக்கிறது என்பதற்காகவே இந்தக் கட்டுரையை எழுதினாராம்.
கட்டுரைகளைத் தெரிவு செய்தவர் யார் தெரியுமோ? டாக்டர் ஜெயா ஸ்ரீதர். மருத்துவக் கட்டுரைகள் எழுதுவதிலும், மருத்துவத்துறை சம்பந்தமான விஷயங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்ட இவர்} நடிகர் ஜெமினியின் மகள்.
சசி நாயர், ""ஒவ்வொரு குறிப்பிட்ட துறையிலும் ரிப்போர்ட் செய்வதற்கு நிருபர்களுக்கு அவ்வப்போது பயிற்சி அளிக்கத் திட்டம் இட்டிருக்கிறோம்'' என்றார். நாட்டு நடப்புகளை ரிப்போர்ட் செய்யும் இளம் நிருபர்கள் ஒரு துறையில் பணியாற்றியவர்களைப் பற்றி நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தேர்தலுக்கு முன் தம் அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவரும் கலந்து கொண்டிருந்தாராம். அவர் பேசி முடித்த பின், ஓர் இளம் நிருபர் சசி நாயரிடம், இவர் யார்? என்று கேட்டார். அவருடைய பெயரைச் சொன்னார் சசி. அவர் என்னவாக இருந்தார்? என்று அந்த இளம் நிருபர் கேட்ட போது, தூக்கிவாரிப் போட்டதாம் சசிக்கு.