""காடுகளைக் காப்பாற்ற வேண்டுமெனில் முதலில் யானைகளைக் காப்பாற்ற வேண்டும்' என்கிறார் பிரபல யானை ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய்.
அஜய், சர்வதேச அளவில் யானைகள் குறித்த ஆராய்ச்சியில் முன்னோடி. ஆசிய யானைகளை நன்கு அறிந்தவர். யானைகளின் இடம் பெயர்தல் மற்றும் அவற்றின் வாழ்க்கை முறையை கண்காணிக்கும் வகையில் அவற்றிற்குப் பொருத்தப்பட்ட ரேடியோ காலரிங் என்ற கருவிக்கு வித்திட்டவர் அவர்தான். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு கர்நாடகம் செல்லும் வழியில், அவரைச் சந்தித்தபோது...
""ஆசிய யானைகள் குறித்த ஆராய்ச்சியில் இந்தியாவில் மட்டுமன்றி இலங்கை, இந்தோனேஷியா, லாவோஸ், வியட்நாம்,
கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். யானைகளுக்கும், மனிதர்களுக்குமிடையேயான தொடர்பு சுமார் 5,000 ஆண்டுகளுக்கும் மேலானது. யானைகளுக்கும், மனிதர்களுக்குமிடையேயான மோதல்கள் அப்போதே இருந்தது. அதேசமயம் பல நூறு ஆண்டுகளாக ஒரு பிணைப்பும் உள்ளது.
ஆசிய யானைகளைப் பொறுத்தமட்டில் கடந்த 100 ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அக்கால அரசர்களின் படையில் மட்டும் ஆயிரக்கணக்கில் யானைகள் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இவையெல்லாம் காடுகளிலிருந்து பிடிக்கப்பட்ட யானைகள்தாம். இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காக யானைகள் பிடிக்கப்பட்டும், இடம் பெயர்க்கப்பட்டும், கொல்லப்பட்டும் வந்ததால் அவற்றின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருகிறது. அதனைத் தடுக்கவே, கடந்த 1800ஆம் ஆண்டில் யானைகளைப் பாதுகாக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிறப்புச் சட்டமே உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்த மட்டில் மேகாலயாவில் யானைகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. அதேபோன்று, அருணாச்சல பிரதேசத்திலும் யானைகளே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. அங்குள்ள புலிகள் குறித்த ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு ரகசிய கேமராவில் ஒரு யானையின் உருவம் பதிவானதையடுத்து அப்பகுதி மக்கள் விழாவே எடுத்துள்ளனர். அந்த அளவிற்கு யானகளின் எண்ணிக்கை அங்கு சுருங்கி விட்டது.
இந்தியாவில் யானைகளைப் பாதுகாக்க கடந்த 1991ஆம் ஆண்டில் "புராஜெக்ட் எலிபென்ட்' என்ற திட்டமும் உருவாக்கப்பட்டது. ஆனால், ஆக்கப்பூர்வமான பணிகள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பற்பசை முதல் அனைத்து பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வெளி உலகிற்கு வருகின்றன. ஆனால், இயற்கைக்கும், சூழலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த யானைகளைக் குறித்த ஆராய்ச்சிகள் அதிக அளவில் இல்லை என்பது வருந்தத்தக்கது.
யானைகள் எத்தகைய சூழலிலும் வாழக் கூடியவை. ஆப்பிரிக்காவில் நமீம் பாலைவனம் முதல் கடும் குளிர் நிலவும் பகுதிகள் வரை இவை வசிக்கின்றன. பாலைவனத்தில்கூட தங்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் உணவு எங்கு கிடைக்கும் என்பதையும் இவை அறிந்து வைத்திருக்கின்றன. இதற்கான காரணங்களையெல்லாம் ஆராய்ச்சிகளின் மூலமே வெளிக்கொணர முடியும்.
அதேபோன்று, ஒரே இடத்தில் வாழும் யானைகளின் உணவுப்பழக்கம் கூட வெவ்வேறு மாதிரியாக இருக்கும். தற்போது ரேடியோ காலரிங் மூலம் இதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டு
வருகின்றன.
சுமார் 60 ஆண்டுகள் வரை வாழும் யானைகள், குட்டி மற்றும் தாய் என ஒரு பிரிவாகவும், உறவுகளின் அடிப்படையில் ஒரு கூட்டமாகவும், தாயிடமிருந்து பிரிந்து வந்தவை என்ற வகையில் பெருங்கூட்டமாகவும் வாழ்பவையாகும். இவையே கிளான் என அழைக்கப்படுகின்றன.
கூட்டத்தையே வழி நடத்தி செல்லும் திறன் படைத்தது தாய் யானைதான். இணை சேர்வதற்காக ஆண் யானைகள் எப்பகுதிக்கு வேண்டுமானாலும் இடம் பெயரக்கூடியவை. இவ்வாறு இவை இடம் பெயரும் போதுதான் மோதல்களும் உருவாகின்றன. மதம் என்பது ஆண் யானை இணை சேர்வதற்கு தயாராகவுள்ள காலம்.
யானைகள்தான் இயற்கையின் ஆதார உயிரினம் (கீ ஸ்டோன்). ஆதார உயிரினம் இருந்தால்தான் மற்ற உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அப்பகுதியில் உருவாகும்.
விதை பரவல், காடுகள் மேலாண்மை, இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திற்குமே யானைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரிதும் துணையாக உள்ளதால் யானைகளைக் குறித்த ஆராய்ச்சிகளை அதிகரித்து யானைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பது அவசியமென்றார்'' அஜய் தேசாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.