மழைக்காலம் வந்துவிட்டாலே ஊரெங்கும் காய்ச்சல்... காய்ச்சல் என்ற வார்த்தைதான். லெப்டோஸ்பைரா அல்லது ஸ்பைரோகீட் எனும் கிருமியால் (பாக்டீரியா) இந்நோய் பரவுகிறது. எலி,பெருச்சாளி,கால்நடை மற்றும் பன்றிகள் கழிக்கும் சிறுநீரில் இருந்து இந்தக் கிருமி வெளியேறி கழிவு நீரில் கலக்கிறது. மழைக்காலங்களில் ஆங்காங்கு தேங்கும் மழை நீருடன் கழிவு நீர் கலக்கும் போது இந்த பாக்டீரியாவும் கலந்து விடுகிறது.
மெல்லிய பகுதிகளான மூக்கு,வாய் மற்றும் கண்கள்,நீரில் ஊறிய மிருதுவான தோல் பகுதிகள், கால் மற்றும் கை விரல் இடுக்குகள்,கால்களில் உள்ள தோல் வெடிப்புகள் அல்லது சிறு காயங்கள் மூலமாக இந்த பாக்டீரியாக்கள் நமது இரத்த நாளங்களில் நுழைகின்றன. இவை இரத்தத்தில் கலந்து பெருகி ஒரு வாரம் கடந்த பிறகு நமக்குக் காய்ச்சல் ஏற்படும்.
லெப்டோஸ்பைரோசிஸ் காய்ச்சலைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து அரசு தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவ துறை பேராசிரியர் ரவிக்குமார் தம்பிராஜன் தெரிவித்தது:
""தலைவலி, கண்பாதிப்பு (கண்கள் இரத்தத்தால் தோய்ந்தது போல் சிவந்து விடும்), உடம்பு வலி, களைப்பு,வாந்தி வருவது போன்ற உணர்வு 102 டிகிரியைத் தாண்டும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது லெப்டோஸ்பைரோசிஸ் ஆக இருக்கலாம். உடனே மருத்துவரை அணுக வேண்டும். அது மட்டுமில்லாமல் கடுமையான மூச்சடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, மஞ்சள் காமாலை ஆகியன ஏற்படும். நோய் தாக்கிய சில நாட்களில் வாய் மூக்கின் வழியாக இரத்தம் வெளியேறுதல், இதய இயக்கம் பாதிப்பு, மூளை மற்றும் உள் உறுப்புகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
முடிந்த வரைக்கும் மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் நீரில் நடப்பதைத் தவிர்த்திடுங்கள். கால்களில் காயம் மற்றும் ஆறாத புண்கள் இருந்தால் காயத்தை மருந்து போட்டு நன்றாக மூடிய பின்பு வெளியே இறங்குங்கள்.
வீட்டிற்குத் திரும்பியவுடன் வெந்நீரால் கால்களை நன்றாக கழுவுங்கள்.மழைக்காலத்தில் கண்டிப்பாக நல்ல சூடான வெந்நீரில் குளிக்கவேண்டும்.
நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைப்பதோடு எலி, பெருச்சாளிகள் போன்றவை அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.