மாநில அளவில் அதிக உறுப்பினர்களைச் சேர்த்த ஊர்ப்புற நூலகமாக, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள சமுத்திராப்பட்டி நூலகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கேடயம் சமுத்திராப்பட்டி ஊர்ப்புற நூலகர் எஸ்.கலாவதியிடம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நூலகர் எஸ்.கலாவதியிடம் பேசிய போது:
""நத்தம் அடுத்துள்ள கோவில்பட்டி எனது சொந்த ஊர். நான் சிறுமியாக இருந்தபோது, எங்கள் ஊரில் செயல்பட்டு வந்த நூலகம், நத்தத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் புத்தகத்தின் அருமையும், வாசிப்பின் அவசியமும் எனக்கு புரியத் தொடங்கியது.
இந்த சூழ்நிலைகளும், நூலகத்தின் மீதான உயர்ந்த எண்ணமும், அதே துறையில் பணியாற்றும் ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது. அதன் காரணமாக, மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் 1995ஆம் ஆண்டு தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்ந்தேன்.
2002ஆம் ஆண்டு முதல், திண்டுக்கல் மாவட்டம், நத்தம், சமுத்திராப்பட்டி, சிறுகுடி, வத்திப்பட்டி பகுதியில் உள்ள நூலகங்களில் தினக்கூலியாகப் பணியாற்றினேன். 17 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2012இல் பணி நிரந்தரம் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, சமுத்திராப்பட்டி ஊர்ப்புற நூலகத்தில் பணியமர்த்தப்பட்டபோது, அந்த நூலகத்தின் 387 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். பகுதி நேர நூலகங்கள் தொடங்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, சமுத்திராப்பட்டியிலிருந்து 20 கி.மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள 13 கிராமங்களில் பகுதி நேர நூலகங்களை தொடங்க 2013ஆம் ஆண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி காசம்பட்டி, கவரயப்பட்டி, லிங்கவாடி, ரெட்டியப்பட்டி, தேத்தாம்பட்டி, வேலம்பட்டி, உலுப்பக்குடி, மஞ்சநாயக்கன்பட்டி, ஏரக்காப்பட்டி, ஊராளிப்பட்டி, எட்டையம்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, கோயில்பட்டி ஆகிய கிராமங்களில் பகுதி நேர நூலகங்கள் தொடங்கப்பட்டன.
ஒவ்வொரு ஊருக்கும் சென்று, பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பேசி உறுப்பினர்களைச் சேர்க்க முயற்சி மேற்கொண்டதன் பயனாக, 6 மாத காலத்தில் 3208 உறுப்பினர்களும், 32 புரவலர்களும் சேர்க்கப்பட்டனர்.
இதன் மூலம் மாநில அளவில், அதிக உறுப்பினர்களைச் சேர்த்த பெருமை சமுத்திராப்பட்டி நூலகத்திற்கு கிடைத்துள்ளது.
சிறுவயதில் சொந்த கிராமத்தில் இருந்த நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த எனக்கு, 13 கிராமங்களில் பகுதி நேர நூலகங்களை கவனிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு மறக்க முடியாத அனுபவமாக உள்ளது'' என்றார் பெருமையாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.