அதிர்ச்சியில் உறைந்துவிட மாட்டார்கள்!
""பிறந்த குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. வயதான பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அதனால், எல்கேஜி படிக்கும் குழந்தைகள் முதல் வேலைக்குப் போகும் பெண்கள் வரை எல்லாருக்கும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வைத் தருகிறோம்'' என்கிறார் லதா.
""பிறந்த குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. வயதான பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அதனால், எல்கேஜி படிக்கும் குழந்தைகள் முதல் வேலைக்குப் போகும் பெண்கள் வரை எல்லாருக்கும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வைத் தருகிறோம்'' என்கிறார் லதா. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதிகளில் இதுவரை பள்ளி, கல்லூரி மாணவிகள் 85 ஆயிரம் பேருக்கு தற்காப்புக்கலை பயிற்சி தந்திருக்கிறார் அவர். கோவையில் உள்ள அவரிடம் பேசியதிலிருந்து...
""நான் படிக்கும் காலத்தில் வாலிபால் விளையாட்டு வீராங்கனை. இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறேன். அதனால் ரயில்வேயில் வேலை கிடைத்தது. விளையாடுவதற்காகப் பல ஊர்களுக்குச் செல்வேன். நிறைய மக்களைப் பார்க்க முடிந்தது. பலவிதங்களில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போது எனக்கு ஏற்பட்டது.
அதற்குப் பிறகு கடந்த 12 ஆண்டுகளாக, கோவையில் யார் மக்களுக்குச் சமூக சேவை செய்தாலும் - அங்கே நானாகவே சென்று என்னால் இயன்ற சமூக சேவைகளைச் செய்தேன்.
பிறகு நானும் சில நண்பர்களும் சேர்ந்து "அறம் பவுண்டேஷன் சாரிட்டபிள் ட்ரஸ்ட்' என்ற பெயரில் 2012 இல் எந்தவித லாப நோக்கமும் இல்லாத, யாராவது தரும் நன்கொடைகளை மட்டுமே வைத்துச் செயல்படும் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினோம். அதன் ஒரு பகுதிதான் பெண் குழந்தைகளுக்கு - பெண்களுக்குத் தற்காப்புக் கலை பயிற்சி தருவது, அவர்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
கோவை மாநகராட்சியின் ஒப்புதலுடன், கோவை மாநகராட்சியில் உள்ள அரசுப் பள்ளிகளில் எங்களுடைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். சேலம், ஈரோடு பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் பயிலும் மாணவிகளுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்.
நாங்கள் எல்கேஜி படிக்கும் குழந்தைகள் முதற்கொண்டு வேலைக்குப் போகும் பெண்கள் வரை அவர்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
எல்கேஜி, யு.கே.ஜி., 1 மற்றும் 2 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு நிகழ்ச்சிகள் நடத்தும்போது அவர்களுடைய பெற்றோரையும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். குழந்தைகளிடம், ""தனியாக எங்கும் போகக் கூடாது. பள்ளிக்குப் போகும்போது தெரிந்தவர்களுடன் கூட மட்டுமே போக வேண்டும். யார் எது கொடுத்தாலும், தின்பண்டங்கள் கொடுத்தாலும் கூட வாங்கக் கூடாது. அப்பா அழைத்துவரச் சொன்னார் என்று யாராவது சொன்னால், அவர்களுடன் போகக் கூடாது. பள்ளிக்கு வந்து அப்படி யாராவது அழைத்தால் டீச்சரிடம் சொல்ல வேண்டும். டீச்சர் அனுமதித்தால் மட்டுமே போக வேண்டும்'' என்று வழிகாட்டுகிறோம்.
குழந்தையின் பெற்றோரிடம், ""குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது பழக்கப்பட்ட ஆட்டோ டிரைவருடன் மட்டுமே அனுப்ப வேண்டும். ஆட்டோ நம்பர், டிரைவர் பெயரைக் குறித்துக் கொள்ள வேண்டும். பள்ளியில் இருந்து குழந்தைகள் வந்ததும் அவர்களுடன் அன்று பள்ளியில், வெளியில் என்ன என்ன நடந்தது என்பதை மனம்விட்டுப் பேச வேண்டும்'' என்று கேட்டுக் கொள்கிறோம்.
அதற்கு அடுத்த வயதுகளில் உள்ள குழந்தைகளுக்கு, அந்தரங்கமான உடல் உறுப்புகள் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறோம். அவற்றை எப்போதும் மறைத்து வைக்க வேண்டும். டாக்டரிடம் காட்டும்போது கூட பக்கத்தில் அப்பா, அம்மா யாராவது இருக்க வேண்டும். யாரையும் தொடவிடக் கூடாது. அம்மா மட்டும் குளிக்க வைக்கலாம். பிறர் யாராவது தொட்டால் அது தவறு. யாராவது தொட்டால் அதை அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும். தொடுபவரிடம் பழகக் கூடாது. விலகி இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லித் தருகிறோம்.
பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்ள முயல்பவர்கள் பெரும்பாலும் பெற்றோரின் நண்பர்களாகவோ, நெருங்கிய சொந்தக்காரராகவோ, அருகில் வசிப்பவராகவோதான் இருப்பார்கள். அதனால் குழந்தைகள் அவர்களைப் பற்றி பெற்றோரிடம் சொல்வதற்குத் தயங்கக் கூடாது என்கிறோம்.
அதற்கு அடுத்த வயதுகளில் உள்ள குழந்தைகளிடம், இருட்டும் முன்பு வீட்டுக்கு வந்துவிட வேண்டும். எங்கேயாவது - சினிமா தியேட்டருக்குப் போனால் கூட - எந்தத் தியேட்டர் என்று வீட்டுக்குக் கண்டிப்பாகத் தெரிவித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.
இது தவிர, பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலைக்குப் போகும் பெண்களுக்குக் கராத்தே உட்பட தற்காப்புப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கிறோம்.
பின்னால் வந்து தொட்டால் என்ன செய்வது? மோட்டார் சைக்கிளில் வந்து நகையைப் பறிக்க முயன்றால் என்ன செய்வது? அவற்றை எப்படித் தடுப்பது? என்பதற்காக பத்துவகையான தற்காப்பு நுட்பங்களைச் சொல்லித் தருகிறோம்.இந்தத் தற்காப்புப் பயிற்சிகளினால் பாதிப்பு ஏற்படும் தருணங்களில் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட மாட்டார்கள். எதையாவது செய்து பாதிப்பிலிருந்து தப்பிக்க முயற்சிப்பார்கள்.
இவை தவிர, பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக இலவசமாக நீதிமன்றத்தில் வழக்காடி உதவுகிறோம். சில சமயங்களில் காவல்துறை உதவியுடன் பெண்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இவற்றையெல்லாம் செய்து தர பொது சேவையில் ஆர்வமுடைய 300க்கும் மேற்பட்ட இளம் ஆர்வலர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பயிற்சி தருகிறோம்.
விழிப்புணர்வு வகுப்புகளை எடுக்க உளவியல் ஆலோசகர் துரை சுந்தரம் உதவுகிறார். சட்டரீதியான பணிகளில் வழக்கறிஞர் சிவகுமார் உதவுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக என் சமூகப் பணிக்கு என் குடும்பத்தினர் ஊக்கம் தருகிறார்கள்'' என்கிறார் லதா.